திருவாரூர் - திருத்தாண்டகம்அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி இறைவன் திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகிற்குக் காட்டத் திருவுளங்கொண்டான். ஆண்டஅரசு உழவாரப்பணி செய் யும் இடங்களில் பொன்னும் நவமணிகளும் கிடக்கும்படிச் செய்தான். திருநாவுக்கரசர் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்பு உடையாராதலின் அவற்றை ஏனைய கற்களோடு வாரித் தடாகத்துள் எறிந்தார். அப்பரின் தூய துறவற நிலையை மேலும் உலகிற்கு விளக்க எண்ணிய இறைவன் அரம்பையர் பலரை அங்குவரச் செய்தனன். அரம்பையர் ஆடல் பாடல்களால் பல்லாற்றானும் திருநாவுக்கரசரை மயக்க முற்பட்டனர். ஒன்றினாலும் மனம் திரியாத அப்பர் அவர்களைநோக்கி உம்மால் இங்கு எனக்கு ஆகவேண்டியகுறை யாதுளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன் என்னும் கருத்தமைந்த பொய்மாயப் பெருங்கடலில் என்று தொடங்கும் திருத் தாண்டகத்திருப்பதிகத்தால் தெரிவித்தருளினர். அரம்பையரும் சோர்ந்து அரசை வணங்கி அகன்றனர்.
சில் உருவில் குறி இருத்தி, நித்தல் பற்றி, செழுங் கணால் நோக்கும் இது ஊகம் அன்று; பல் உருவில்-தொழில் பூண்ட பஞ்சபூதப்-பளகீர்! உம் வசம் அன்றே! யானேல், எல்லாம் சொல் உருவின் சுடர் மூன்று ஆய், உருவம் மூன்று ஆய், தூ நயனம் மூன்று ஆகி, ஆண்ட ஆரூர் நல் உருவில் சிவன் அடியே அடைவேன்; நும்மால் நமைப்புண்ணேன்; கமைத்து நீர் நடமின்க(ள்)ளே!.
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர்! நுங்கள் மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு, ஐயோ! வையகமே போதாதே, யானேல், வானோர் பொன் உருவை, தென் ஆரூர் மன்னு குன்றை, புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை, புகுந்து என் சிந்தை தன் உருவைத் தந்தவனை, எந்தை தன்னை, தலைப்படுவேன்; துலைப் படுப்பான் தருக்கேன்மி(ன்)னே!.
துப்பினை முன் பற்று அறா விறலே! மிக்க சோர்வு படு சூட்சியமே! சுகமே! நீங்கள் ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே; என் தன் வைப்பினை, பொன் மதில் ஆரூர் மணியை, வைகல் மணாளனை, எம்பெருமானை, வானோர் தங்கள் அப்பனை, செப்பட அடைவேன்; நும்மால் நானும் ஆட்டுணேன்; ஓட்டந்து, ஈங்கு அலையேன்மி(ன்)னே;.
பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே! உலோபமே! பொறையே! நீங்கள் உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே? யானேல், அம் கமலத்து அயனொடு மால் ஆகி, மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி, அறிய ஒண்ணாச் செங்கனகத் தனிக் குன்றை, சிவனை, ஆரூர்ச் செல்வனை, சேர்வேன்; நும்மால் செலுத்துணேனே!.
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச- முகரிகாள்! முழுதும் இவ் உலகை ஓடி நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர் நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர் ஆள்வானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.
சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித் துப்பறை என்று அனைவீர்! இவ் உலகை ஓடிச் செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்க, தருக்கி மிக வரை எடுத்த, அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு(வ்) இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.