சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.061   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் அருள்தரு மாதுமைநாயகியம்மை உடனுறை அருள்மிகு நடுதறிநன்னாயகர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=L9HI-AlEwBY   Add audio link Add Audio

மாதினை ஓர் கூறு உகந்தாய்! மறை கொள் நாவா! மதிசூடீ! வானவர்கள் தங்கட்கு எல்லாம்
நாதனே! என்று என்று பரவி, நாளும் நைந்து உருகி, வஞ்சகம் அற்று, அன்பு கூர்ந்து,
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு, வைகல் மறவாது, வாழ்த்தி, ஏத்தி,
காதன்மையால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

1

விடிவதுமே வெண்நீற்றை மெய்யில் பூசி, வெளுத்து   அமைந்த கீளொடு கோவணமும் தற்று,
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய்! என்றும், செல் கதிக்கு வழி காட்டும் சிவனே! என்றும்,
துடி அனைய இடை மடவாள் பங்கா! என்றும், சுடலை தனில் நடம் ஆடும் சோதீ! என்றும்,
கடிமலர் தூய், தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

2

எவரேனும் தாம் ஆக; இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே, அவர் அவரைக் கண்ட போது உகந்து அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர் தேவர், அவர் தேவர், என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி,
கவராதே, தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

3

இலம்; காலம், செல்லா நாள் என்று, நெஞ்சத்து   இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு,
விலங்காதே, நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு, மெய் அன்பு மிகப் பெய்து, பொய்யை நீக்கி,
துலங்காமே வானவரைக் காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து,
கலங்காதே, தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடு தறியைக் காணல் ஆமே!.

4

விருத்தனே! வேலை விடம் உண்ட கண்டா! விரி சடை மேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே! உமை கணவா! உலக மூர்த்தி! நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள்
பொருத்தனே! என்று என்று புலம்பி, நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி,
கருத்தினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

5
Go to top

பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப்பட்டே, ஈட்டி, பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு, வீழா முன்னம், வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லி,
கசிவினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

6

ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு(வ்) ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,
மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில் இடுவதன் முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு(வ்), அகம் குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்
கையினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

7

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி, திகையாதே,   சிவாய நம என்னும் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்-கடல் நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு,
பருதி தனைப் பல் பறித்த பாவநாசா! பரஞ்சுடரே! என்று என்று பரவி, நாளும்
கருதி மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

8

குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய்! என்றும், கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய்! என்றும்,
தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய்! என்றும், தசக்கிரிவன் மலை எடுக்க, விரலால் ஊன்றி,
முனிந்து அவன் தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு, அருள் கொடுத்த மூர்த்தி! என்றும்,
கனிந்து மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

9

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கன்றாப்பூர்
6.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாதினை ஓர் கூறு உகந்தாய்!
Tune - திருத்தாண்டகம்   (திருக்கன்றாப்பூர் நடுதறிநன்னாயகர் மாதுமைநாயகியம்மை)

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000