மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து மதி முகமும் வேர்வு வந்து அரும்ப
அணை மீதே மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி
குழைய இதழ் ஊறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய
குழியில் இழியா விதங்கள் ஒங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று எழு சிகர(ம்) மா நிலம் குலுங்க விசை ஊடே எழு கடலு(ம்) மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க இயல் மயிலின் மாறு கொண்டு அமர்ந்த வடிவேலா
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர் மகள் காலினும் பணிந்து புளிஞர் அறியாமலும் திரிந்து புன(ம்) மீதே புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே.
மழை போல நீண்ட கூந்தல் பாரம் அவிழ்ந்து குலைய, ரேகைகள் பரவியுள்ள நீலோற்பலம் போன்ற கண்களும் செந்நிறம் அடைய, சந்திரன் போன்ற முகமும் வேர்வைத் துளிகள் வந்து கூட, படுக்கையின் மேல் கிரீடம் போன்ற மார்பகப் பாரமும் குலுங்க, ரத்ன மேகலை முதலிய இடை அணிகள் மிகவும் அலைப்புண்டு விலக, தன் வசம் இழக்கும்படி சேர்ந்து, அணைந்து மகிழ்ச்சி பூண்டு, மனம் குழைய வாயிதழ் ஊறலைப் பருக (காம மயக்கில்) அழுந்தி, புட் குரலுடன் வாய் திறந்து கொஞ்சிப் பேச, சந்திரன் வரக் கண்டு பொங்குகின்ற கங்கையைப் போல குதித்துப் பாய, பெண்குறியாம் குழியில் இழிந்து, பல விதங்களாக விளங்கும் மன்மதக் கலை நூல் விதிகளில் மிகவும் மேம்பட்டு, இளம் பெண்களோடு திளைந்து உடல் நொந்து விடுதல் நன்றோ? போருக்கு எழும் படைகளுடன் சூரர்களாகிய வஞ்சக அசுரர்கள் பயப்பட, போர்க் களம் ரண களமாக அன்று நீ போய் எழு கிரிகளும் பெரிய நிலப் பரப்பும் அசைவு கொள்ள, வேகத்துடன் ஏழு கடல்களும் மேரு மலையும் கலக்கம் கொள்ள, கண்கள் படர்ந்துள்ள பீலிகளைக் கொண்ட பரிசுத்தமான, தகுதியுள்ள மயிலின் மீது ஏறி கால்களை மாறாகப் போட்டுக்கொண்டு வீற்றிருந்த வடி வேலனே, பொழுது அஸ்தமிக்கும் வரையில் பெரிய (வள்ளி மலைக்) குன்றில் குறவர்களுடைய பெண்ணான வள்ளியைக் காலிலும் வணங்கி, வேடர்களுக்குத் தெரியாமல் திரிந்து, தினைப் புனத்தில் புதிதாக மடலேறுதற்கும் துணிந்திருந்த அந்த பரிதாப நிலையும் குறைந்து, புளகிதம் கொண்டிருந்த வள்ளியின் மார்பினை அணைந்த பெருமாளே.
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து மதி முகமும் வேர்வு வந்து அரும்ப ... மழை போல நீண்ட கூந்தல் பாரம் அவிழ்ந்து குலைய, ரேகைகள் பரவியுள்ள நீலோற்பலம் போன்ற கண்களும் செந்நிறம் அடைய, சந்திரன் போன்ற முகமும் வேர்வைத் துளிகள் வந்து கூட, அணை மீதே மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி ... படுக்கையின் மேல் கிரீடம் போன்ற மார்பகப் பாரமும் குலுங்க, ரத்ன மேகலை முதலிய இடை அணிகள் மிகவும் அலைப்புண்டு விலக, தன் வசம் இழக்கும்படி சேர்ந்து, அணைந்து மகிழ்ச்சி பூண்டு, குழைய இதழ் ஊறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய ... மனம் குழைய வாயிதழ் ஊறலைப் பருக (காம மயக்கில்) அழுந்தி, புட் குரலுடன் வாய் திறந்து கொஞ்சிப் பேச, சந்திரன் வரக் கண்டு பொங்குகின்ற கங்கையைப் போல குதித்துப் பாய, குழியில் இழியா விதங்கள் ஒங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ ... பெண்குறியாம் குழியில் இழிந்து, பல விதங்களாக விளங்கும் மன்மதக் கலை நூல் விதிகளில் மிகவும் மேம்பட்டு, இளம் பெண்களோடு திளைந்து உடல் நொந்து விடுதல் நன்றோ? எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று எழு சிகர(ம்) மா நிலம் குலுங்க விசை ஊடே எழு கடலு(ம்) மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க இயல் மயிலின் மாறு கொண்டு அமர்ந்த வடிவேலா ... போருக்கு எழும் படைகளுடன் சூரர்களாகிய வஞ்சக அசுரர்கள் பயப்பட, போர்க் களம் ரண களமாக அன்று நீ போய் எழு கிரிகளும் பெரிய நிலப் பரப்பும் அசைவு கொள்ள, வேகத்துடன் ஏழு கடல்களும் மேரு மலையும் கலக்கம் கொள்ள, கண்கள் படர்ந்துள்ள பீலிகளைக் கொண்ட பரிசுத்தமான, தகுதியுள்ள மயிலின் மீது ஏறி கால்களை மாறாகப் போட்டுக்கொண்டு வீற்றிருந்த வடி வேலனே, பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர் மகள் காலினும் பணிந்து புளிஞர் அறியாமலும் திரிந்து புன(ம்) மீதே புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே. ... பொழுது அஸ்தமிக்கும் வரையில் பெரிய (வள்ளி மலைக்) குன்றில் குறவர்களுடைய பெண்ணான வள்ளியைக் காலிலும் வணங்கி, வேடர்களுக்குத் தெரியாமல் திரிந்து, தினைப் புனத்தில் புதிதாக மடலேறுதற்கும் துணிந்திருந்த அந்த பரிதாப நிலையும் குறைந்து, புளகிதம் கொண்டிருந்த வள்ளியின் மார்பினை அணைந்த பெருமாளே.