எட்டுடன் ஒரு தொளை வாயாயது
பசுமண் கலம் இரு வினை தோயா
செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என
எள் பகிரினும் இது ஓரார் தம தமது
இச்சையின் இடர் உறு பேராசை கொள் கடல் அதிலே வீழ்
முட்டர்கள் நெறியினில் வீழாது
அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும்
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக
முக்குணமது கெட நானா என வரும்
முத்திரை அழிதர
ஆரா அமுது அ(ன்)ன முத்தமிழ் தெரி கனி வாயால்
அருளுவது ஒருநாளே
திட்டென எதிர் வரு மாகாளியினொடு
திக்கிட தரிகிட தீதோம் என ஒரு
சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன்
செப்புக என முனம் ஓதாது உணர்வது
சிற் சுக பர ஒளி ஈதே என
அவர் தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குரு நாதா
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல்
பொட்டு எழ முடுகி வை வேலால் எறி தரு மல் புய
மரகத மா தோகையில் நடம் இடுவோனே
வச்சிர கர தல வானோர் அதிபதி
பொற்பு உறு கரி பரி தேரோடு அழகுற
வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே.
(8+1) ஒன்பது தொளை வாயில்களை உடைய பச்சை மண்ணாலாகிய பாத்திரம் (ஆகிய இந்த உடல்), நல் வினை, தீ வினை ஆகிய இரு வினைகளிலும் தோய்ந்து, மிகு பிணி இட்டிடை மிக்கு வரும் நோய்கள் ஒரு பொழுதினிலேனும் (உடலில்) உயிர் நிலைத்திருப்பதற்குத் தடைகள் செய்ய, எவ்வாறு மேலான நற்கதியை நாம் கரை ஏறி அடைவது என்று எள் பிளவுபட்ட அளவு கூட இதன் உண்மையை அறியாதவர்களாய் தங்கள் தங்களுடைய ஆசை போன வழியே துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலில் வீழ்கின்ற மூடர்களின் தீயவழியில் நான் விழாமல், வலிமை கொண்டதான தொண்ணூற்று ஆறு தத்துவங்களை முற்றிக் கடந்த அறிவுக்கு எட்டாத ஞானம் உதயமாகும்படியான விளக்கமானது வெளிப்பட, சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள் அழிய, நான் நான் என்று எழுகின்ற ஆணவ உணர்ச்சியாகிய அந்த அடையாள முத்திரை அழிய, தெவிட்டாத அமுது என்னும்படியான முத்தமிழை தெரிந்து போதிக்க வல்ல (உனது) இனிய வாக்கால் உபதேசித்து அருளுவதும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமா? திடீரென்று (வாதித்து) எதிர்த்து நின்ற மகா காளியுடன் திக்கிட தரிகிட தீதோம் என்ற ஒரு ஓசையுடன் ஒப்பற்ற, விசித்திரமான, பல வகையதான, எதிர்நடனம் ஆடிய திருவடி மலர்களைக் கொண்ட சிவபெருமான், உபதேச மொழியாகிய பிரணவத்தின் உட்பொருளைச் சொல்லுவாயாக என்று கேட்க, முன்பு ஓதாமலே உணர வேண்டியதும், ஞான ஆனந்தமானதுமான மேலான ஞான ஆகாசமானதுமான பொருள் இதுதான் என்று அவருடைய வலது காதில் உபதேசித்து அருளிய குரு நாதனே, குறையற்ற வழியில் சண்டை செய்த சூரனாகிய தலைவனுடைய உடல் பொடிபட்டு அழிய வேகமாய் எதிர்த்து, கூரிய வேல் கொண்டு எறிந்திட்ட வளப்பம் பொருந்திய புயங்களைக் கொண்டவனே, பச்சை நிறம் கொண்ட அழகிய மயிலின் மீது நடனம் செய்பவனே, வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவர்கள் தலைவனாகிய இந்திரன், அழகு கொண்ட (ஐராவதம் என்ற) யானை, (உச்சைச்சிரவம் என்ற) குதிரை, தேர் இவைகளோடு பொலிவு பெற்று விளங்கும்படி அவனை வாழ வைத்த மருமகனே, வாழ்ந்து விளங்கும் தேவர்களின் பெருமாளே.
எட்டுடன் ஒரு தொளை வாயாயது ... (8+1) ஒன்பது தொளை வாயில்களை உடைய பசுமண் கலம் இரு வினை தோயா ... பச்சை மண்ணாலாகிய பாத்திரம் (ஆகிய இந்த உடல்), நல் வினை, தீ வினை ஆகிய இரு வினைகளிலும் தோய்ந்து, மிகு பிணி இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக ... மிக்கு வரும் நோய்கள் ஒரு பொழுதினிலேனும் (உடலில்) உயிர் நிலைத்திருப்பதற்குத் தடைகள் செய்ய, எப்படி உயர் கதி நாம் ஏறுவது என ... எவ்வாறு மேலான நற்கதியை நாம் கரை ஏறி அடைவது என்று எள் பகிரினும் இது ஓரார் தம தமது ... எள் பிளவுபட்ட அளவு கூட இதன் உண்மையை அறியாதவர்களாய் தங்கள் தங்களுடைய இச்சையின் இடர் உறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் ... ஆசை போன வழியே துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலில் வீழ்கின்ற முட்டர்கள் நெறியினில் வீழாது ... மூடர்களின் தீயவழியில் நான் விழாமல், அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும் ... வலிமை கொண்டதான தொண்ணூற்று ஆறு தத்துவங்களை முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக ... முற்றிக் கடந்த அறிவுக்கு எட்டாத ஞானம் உதயமாகும்படியான விளக்கமானது வெளிப்பட, முக்குணமது கெட நானா என வரும் ... சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள் அழிய, நான் நான் என்று எழுகின்ற ஆணவ உணர்ச்சியாகிய முத்திரை அழிதர ... அந்த அடையாள முத்திரை அழிய, ஆரா அமுது அ(ன்)ன முத்தமிழ் தெரி கனி வாயால் ... தெவிட்டாத அமுது என்னும்படியான முத்தமிழை தெரிந்து போதிக்க வல்ல (உனது) இனிய வாக்கால் அருளுவது ஒருநாளே ... உபதேசித்து அருளுவதும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமா? திட்டென எதிர் வரு மாகாளியினொடு ... திடீரென்று (வாதித்து) எதிர்த்து நின்ற மகா காளியுடன் திக்கிட தரிகிட தீதோம் என ஒரு ... திக்கிட தரிகிட தீதோம் என்ற ஒரு ஓசையுடன் சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் ... ஒப்பற்ற, விசித்திரமான, பல வகையதான, எதிர்நடனம் ஆடிய திருவடி மலர்களைக் கொண்ட சிவபெருமான், செப்புக என முனம் ஓதாது உணர்வது ... உபதேச மொழியாகிய பிரணவத்தின் உட்பொருளைச் சொல்லுவாயாக என்று கேட்க, முன்பு ஓதாமலே உணர வேண்டியதும், சிற் சுக பர ஒளி ஈதே என ... ஞான ஆனந்தமானதுமான மேலான ஞான ஆகாசமானதுமான பொருள் இதுதான் என்று அவர் தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குரு நாதா ... அவருடைய வலது காதில் உபதேசித்து அருளிய குரு நாதனே, மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் ... குறையற்ற வழியில் சண்டை செய்த சூரனாகிய தலைவனுடைய உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறி தரு மல் புய ... பொடிபட்டு அழிய வேகமாய் எதிர்த்து, கூரிய வேல் கொண்டு எறிந்திட்ட வளப்பம் பொருந்திய புயங்களைக் கொண்டவனே, மரகத மா தோகையில் நடம் இடுவோனே ... பச்சை நிறம் கொண்ட அழகிய மயிலின் மீது நடனம் செய்பவனே, வச்சிர கர தல வானோர் அதிபதி ... வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவர்கள் தலைவனாகிய இந்திரன், பொற்பு உறு கரி பரி தேரோடு அழகுற ... அழகு கொண்ட (ஐராவதம் என்ற) யானை, (உச்சைச்சிரவம் என்ற) குதிரை, தேர் இவைகளோடு பொலிவு பெற்று விளங்கும்படி வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே. ... அவனை வாழ வைத்த மருமகனே, வாழ்ந்து விளங்கும் தேவர்களின் பெருமாளே.