ஆல மேற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க
முறைமுறை பறைமோதி ஆடல் பார்க்க
நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக
காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடு போ முன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
வியாழ கோத்ரம் மருவிய முருகோனே
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழி படும் இளையோனே
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே.
விஷம் கொண்ட கண்களை உடையவர் நிரம்ப வெகு நேரம் அடிக்கடி அழுது மனம் வருந்தி நைந்து அழிய, நியமப்படி பறை வாத்தியம் ஒலித்து, கூத்தாடுபவர்கள் மூலமாக யாவரும் (சாவு நேர்ந்த) செய்தியைத் தெரிந்து கொள்ள, உறுதியாகக் கட்டப்பட்ட பாடையை ஏற்பாடு செய்து வேகமாக சுடு காட்டுக்குக் கொண்டு போய் சுற்றத்தினர் யாவரும் விலகிச் செல்ல, உன் ஆயுள் காலம் முடிந்து விட்டது, புறப்படு என்று கூறி யம தூதர்கள் சீட்டோலையைக் காட்டி, காவல் வைத்து உயிரைக் கொண்டு போவதற்கு முன்பு, இந்தக் காம ஆசை பாழ்பட்டு ஒழிய, மெய்ஞ் ஞான நிலையதான உனது கழல் அணிந்த திருவடிகளை உண்மையான அன்புடன் தியானிக்கும் உணர்வைத் தந்து அருளுக. வேலாயுதனே, புகழ் பெற்ற கொடையாளனே, பரிசுத்த மனமுடையவர்கள் வாழ்த்திப் போற்றும் சரவணபவனே, குரு மலையாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனே, வேடர்கள் வாழும் வள்ளிமலையில் தினைக் கொல்லையைக் காவல் புரிந்த சிறுமியாகிய வள்ளியை, (உனது உண்மையான உருவைக் காட்டாது) பல வேடங்களில் வந்து, வணங்கிய இளைஞனே, பூமியில் உள்ளோர் போற்றி வழிபடும் ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் குழந்தை என்று சொல்லும்படி நாணல் புல் சூழ்ந்த மடுவில் (சரவணப் பொய்கையில்) தோன்றியவனே, தலைவா போற்றி என்று தந்தையாகிய மூத்த சிவபெருமான் கேட்க, பேரின்ப அனுபவத்தைத் தரும் ஞான மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெருமாளே.
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க ... விஷம் கொண்ட கண்களை உடையவர் நிரம்ப வெகு நேரம் அடிக்கடி அழுது மனம் வருந்தி நைந்து அழிய, முறைமுறை பறைமோதி ஆடல் பார்க்க ... நியமப்படி பறை வாத்தியம் ஒலித்து, கூத்தாடுபவர்கள் மூலமாக யாவரும் (சாவு நேர்ந்த) செய்தியைத் தெரிந்து கொள்ள, நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக ... உறுதியாகக் கட்டப்பட்ட பாடையை ஏற்பாடு செய்து வேகமாக சுடு காட்டுக்குக் கொண்டு போய் சுற்றத்தினர் யாவரும் விலகிச் செல்ல, காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடு போ முன் ... உன் ஆயுள் காலம் முடிந்து விட்டது, புறப்படு என்று கூறி யம தூதர்கள் சீட்டோலையைக் காட்டி, காவல் வைத்து உயிரைக் கொண்டு போவதற்கு முன்பு, காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே ... இந்தக் காம ஆசை பாழ்பட்டு ஒழிய, மெய்ஞ் ஞான நிலையதான உனது கழல் அணிந்த திருவடிகளை உண்மையான அன்புடன் தியானிக்கும் உணர்வைத் தந்து அருளுக. வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண ... வேலாயுதனே, புகழ் பெற்ற கொடையாளனே, பரிசுத்த மனமுடையவர்கள் வாழ்த்திப் போற்றும் சரவணபவனே, வியாழ கோத்ரம் மருவிய முருகோனே ... குரு மலையாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனே, வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழி படும் இளையோனே ... வேடர்கள் வாழும் வள்ளிமலையில் தினைக் கொல்லையைக் காவல் புரிந்த சிறுமியாகிய வள்ளியை, (உனது உண்மையான உருவைக் காட்டாது) பல வேடங்களில் வந்து, வணங்கிய இளைஞனே, ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே ... பூமியில் உள்ளோர் போற்றி வழிபடும் ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் குழந்தை என்று சொல்லும்படி நாணல் புல் சூழ்ந்த மடுவில் (சரவணப் பொய்கையில்) தோன்றியவனே, நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே. ... தலைவா போற்றி என்று தந்தையாகிய மூத்த சிவபெருமான் கேட்க, பேரின்ப அனுபவத்தைத் தரும் ஞான மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெருமாளே.