இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவார(ம்) இள நகையாட ஆடி மிக வாதுற்று
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போக(ம்)
கரண ப்ரதாப லீலை மடமாதர் கலவியில் மூழ்கி ஆழும் இழி தொழிலேனு(ம்) மீது கருதிய ஞான போதம் அடைவேனோ
கொலை புரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி குமரி வராகி மோகி பகவதி ஆதி சோதி
குணவதி ஆல ஊணி அபிராமி பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவு பெருமாளே.
இலவம் பூ போன்ற சிவந்த வாயிதழ்களை வேண்டுமென்றே அசைத்து, முறையாக மன்மதக் கலைகளை ஆரவாரமும் புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, அதிக தர்க்கங்களைப் பேசி, எதிரில் தாக்கும், அச்சத்தைத் தரும், கனத்த, கஸ்தூரி முதலியவைகளை அணிந்த, ஆடம்பரமான இரு மார்பிலும் பொருந்தும்படி மன்மத ராஜனுடைய காம லீலைச் சேர்க்கையில் வேகத்துடன் ஓடி, பலவிதமான போக சுகத்தை உண்டுபண்ணும் காமபோக புணர்ச்சியில் பேர் பெற்ற லீலைகளுடன் இளமை பொருந்திய விலைமாதர்களுடைய கலவியில் முழுகி அழுந்தியிருக்கும் இழிந்த தொழிலை உடைய அடியேனும், மேலாகக் கருதப்பட்ட ஞான அறிவை அடைவேனோ? கொலைத் தொழில் புரியும் காளி, சூலாயுதத்தை உடையவள், பைரவி, நீல நிறத்தினள், வனத்தில் வாழும் துர்க்கை, குலிஜம், அங்குசம் இவற்றை ஏந்திய தாய், மகமாயி, குமாரி, வராகி, மோகி, பகவதி, ஆதி ஜோதி, குணவதி, ஆலகால விஷத்தை உண்டவள், அழகி, பலி ஏற்கும் பிரம கபாலத்தினள், யோகத்தினள், பரமரைத் திருமணம் புரிந்தவள், உலகில் சிறந்த பத்தினி, வேத ஞானி (ஆகிய பார்வதியின்) மகனே, தனது சேனைகளுடன் சூரன் (போர்க்களத்தில்) இறக்கும்படி துணிவுடன் எதிர்த்துச் சென்ற சூர தீரனே, பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே.