லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி, மலைகளுக்கெல்லாம் அரசனே, திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி, உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக. தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம், கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்), ஏழு உலகங்களில் உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை ஆளுகின்ற அரசனே, வயலூருக்குத் தலைவா, தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை நாடியவராய், அவருடன் முன்பொருநாள், ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே) ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய சேரர் பெருமானாம் சேரமான் பெருமான் நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும் திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
சேர்தல் கொண்டவரோடே முனாளினில் ... நாடியவராய், அவருடன் முன்பொருநாள்,
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி ... ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
ஆதி அந்தவுலாவாசு பாடிய ... ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ... சேரர் பெருமானாம் சேரமான் பெருமான் நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. ... திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.