வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனைத் திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் மயக்கி
ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே வருத்தி வஞ்சக நினைவோடு மெ(ல்)ல மெ(ல்)ல நகைத்து
நண்பொடு வரும் இரும் என உரை வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடு போதே
விடத்தை வென்றிடு படை விழி கொ(ண்)டும் உ(ள்)ள(ம்) மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில்
மயல் விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானேவிளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப் பதம் தனில் அருள் பெற நினைகுவது உளதோ தான்
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு குறக் கரும்பின் மெய் துவள் புயன் என வரு(ம்) வடிவேலா
குரைக் கரும் கடல் திரு அணை என மு(ன்)னம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ திறற் குகன் குருபரனென வருமொரு முருகோனே
செழித்த தண்டலை தொறும் இலகிய குட வளைக் குலம் தரு தரளமும் மிகும் உயர் திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே.
அணிந்துள்ள மணி வடத்தைக் காட்டிலும் மேலோங்கி புளகிதம் கொண்ட அழகிய மார்பகத்தைக் காட்டி, எதிரில் வரும் இளைஞர்களின் உயிரை மயக்கி, ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனை ஒப்பற்ற அருமையான வகையால் வருவித்து, வஞ்சகமான எண்ணத்தோடு மெல்ல மெல்ல சிரித்து, நண்பு காட்டி வாருங்கள், உட்காருங்கள் என்று உபசரித்து உரை பேசி அங்கு அவர்களுடன் கொஞ்சிக் குலாவி உடலைத் தொடும்போது, விஷத்தையும் வெல்லும் படை போன்ற கண்களைக் கொண்டு மனத்தை மயக்கி, வளப்பமான பொருளைக் கவரும் போது, உங்கள் மீது எனக்கு மோகம், விருப்பம் என்னும்படியான ஆசை மொழிகளைக் கூறி மடிமீது விழுகின்ற தொழில்களையே செய்கின்ற பல பொது மாதர்களின் பொய்யான மனத்தை நம்பிய சிறியவனை, பித்துப் பிடித்தவனை, நறுமணம் வீசும் திருவடியில் சேரும்படியான திருவருளைப் பெற நீ நினைக்கும்படியான நல்ல விதி எனக்கு உள்ளதோ, அறியேன். உருவத்தில் குடத்தையும் வென்று, இரண்டு மலைகளைப் போல தளதளக்கும் மார்பகங்கள் மணிவடங்களை அணிந்து, கரும்பு போல் இனிக்கும் இளம் குற மங்கையாகிய வள்ளியின் உடலில் துவளும் புயத்தை உடையவன் என்று வருகின்ற அழகிய வேலனே, ஒலிக்கின்ற கரிய கடலில் அழகிய அணை என்னும்படி முன்பு அதை அடைத்து, இலங்கைக்குத் தலைவனான ராவணன் அரக்கர் கூட்டத்துடன் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமாலின் மருகனே, மனத் திடத்துடன் எதிர்த்து வந்த அசுரர்கள் பொடியாக வேலாகிய உக்கிரமான படையை விட்ட சரவணபவனே, திறமை வாய்ந்த குருபரன் என்னும் பெயருடன் வந்துள்ள ஒப்பற்ற முருகனே, செழிப்புள்ள சோலைகள் தோறும் (கிடந்து) விளங்கும் வளைந்த சங்குகளின் கூட்டங்கள் ஈன்ற முத்துக்கள் மிக்குப் பொலியும் சிறந்த திருப்பரங்குன்றம் என்னும் வளப்பம் உள்ள நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனைத் திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் மயக்கி ... அணிந்துள்ள மணி வடத்தைக் காட்டிலும் மேலோங்கி புளகிதம் கொண்ட அழகிய மார்பகத்தைக் காட்டி, எதிரில் வரும் இளைஞர்களின் உயிரை மயக்கி, ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே வருத்தி வஞ்சக நினைவோடு மெ(ல்)ல மெ(ல்)ல நகைத்து ... ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனை ஒப்பற்ற அருமையான வகையால் வருவித்து, வஞ்சகமான எண்ணத்தோடு மெல்ல மெல்ல சிரித்து, நண்பொடு வரும் இரும் என உரை வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடு போதே ... நண்பு காட்டி வாருங்கள், உட்காருங்கள் என்று உபசரித்து உரை பேசி அங்கு அவர்களுடன் கொஞ்சிக் குலாவி உடலைத் தொடும்போது, விடத்தை வென்றிடு படை விழி கொ(ண்)டும் உ(ள்)ள(ம்) மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் ... விஷத்தையும் வெல்லும் படை போன்ற கண்களைக் கொண்டு மனத்தை மயக்கி, வளப்பமான பொருளைக் கவரும் போது, மயல் விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானேவிளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை ... உங்கள் மீது எனக்கு மோகம், விருப்பம் என்னும்படியான ஆசை மொழிகளைக் கூறி மடிமீது விழுகின்ற தொழில்களையே செய்கின்ற பல பொது மாதர்களின் பொய்யான மனத்தை நம்பிய சிறியவனை, பித்துப் பிடித்தவனை, விரைப் பதம் தனில் அருள் பெற நினைகுவது உளதோ தான் ... நறுமணம் வீசும் திருவடியில் சேரும்படியான திருவருளைப் பெற நீ நினைக்கும்படியான நல்ல விதி எனக்கு உள்ளதோ, அறியேன். குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு குறக் கரும்பின் மெய் துவள் புயன் என வரு(ம்) வடிவேலா ... உருவத்தில் குடத்தையும் வென்று, இரண்டு மலைகளைப் போல தளதளக்கும் மார்பகங்கள் மணிவடங்களை அணிந்து, கரும்பு போல் இனிக்கும் இளம் குற மங்கையாகிய வள்ளியின் உடலில் துவளும் புயத்தை உடையவன் என்று வருகின்ற அழகிய வேலனே, குரைக் கரும் கடல் திரு அணை என மு(ன்)னம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே ... ஒலிக்கின்ற கரிய கடலில் அழகிய அணை என்னும்படி முன்பு அதை அடைத்து, இலங்கைக்குத் தலைவனான ராவணன் அரக்கர் கூட்டத்துடன் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமாலின் மருகனே, திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ திறற் குகன் குருபரனென வருமொரு முருகோனே ... மனத் திடத்துடன் எதிர்த்து வந்த அசுரர்கள் பொடியாக வேலாகிய உக்கிரமான படையை விட்ட சரவணபவனே, திறமை வாய்ந்த குருபரன் என்னும் பெயருடன் வந்துள்ள ஒப்பற்ற முருகனே, செழித்த தண்டலை தொறும் இலகிய குட வளைக் குலம் தரு தரளமும் மிகும் உயர் திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே. ... செழிப்புள்ள சோலைகள் தோறும் (கிடந்து) விளங்கும் வளைந்த சங்குகளின் கூட்டங்கள் ஈன்ற முத்துக்கள் மிக்குப் பொலியும் சிறந்த திருப்பரங்குன்றம் என்னும் வளப்பம் உள்ள நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.