தருவர் இவர் ஆகும் என்று பொருள் நசையில் நாடி
வண்டு தனை விடு சொல் தூது தண்ட(கம்) முதலான
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும்
இவர் வீதம் எங்களிடம் ஆக வரும் அதுவொ போதும் என்று
ஒரு பணம் உதாசினம் சொல்
மடையரிடமே நடந்து மனம் வேறாய் உருகி மிகவாக வெந்து
கவிதை சொ(ல்)லியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே
நல் உபய பத மால் விளங்கி இக பரமும் ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி
தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு
குரு மலையின் மேல் அமர்ந்த பெருமாளே.
இவர் நிச்சயமாகக் கொடுப்பார் என்று பொருளின்மேல் உள்ள பேராசையால் பலரை விரும்பித் தேடிச் சென்று, வண்டு விடு தூது1, தண்டகம்2 முதலான, இனிமையான கவி மாலைகள், சிந்து3, கலித்துறைகள்4, ஏசல்5, இன்பமான தரு6 முதலிய செவ்விய பா வகைகளைப் பாடி, அடிக்கடி வந்து போவதையும் சொல்லித் தெரிவித்து, அவர்களுடைய அடி முதல் முடி வரையும் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வந்தாலும், (அவர்கள்) அமைதியாக எங்களிடத்தில் (நீங்கள்) வருவது போதும் என்று கூறி, ஒரு பணம் கூடத் தராமல் அலட்சிய வார்த்தை பேசுவார்கள். அத்தகைய முட்டாள்களிடத்தில் நான் நடந்து, மனம் உடைந்து வேறுபட்டு, உள்ளம் உருகி மிகவும் வெந்து, பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைச்சல் உறுவது ஒழிவதற்காகவே, உனது நல்ல இரு திருவடிகளிலும் ஆசை மேலிட்டு விளங்கி, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்படியான இன்பத்தை நான் பெற உதவி, என்னை ஆட்கொள்ள அன்பு தருவாயாக. கொக்கினோடு நாரை, அன்றில் என்னும் நீர்ப் பறவைகள் இரையை விரும்பித் தேடி (காவிரியின் நீர் நிலையில்) குதிக்கின்றதை, இள வாளை மீன்கள் கண்டு பயம் கொள்ள, ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவதுபோல காவிரி ஆறு வந்து விளங்கும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தருவர் இவர் ஆகும் என்று பொருள் நசையில் நாடி ... இவர் நிச்சயமாகக் கொடுப்பார் என்று பொருளின்மேல் உள்ள பேராசையால் பலரை விரும்பித் தேடிச் சென்று, வண்டு தனை விடு சொல் தூது தண்ட(கம்) முதலான ... வண்டு விடு தூது1, தண்டகம்2 முதலான, சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி ... இனிமையான கவி மாலைகள், சிந்து3, கலித்துறைகள்4, ஏசல்5, இன்பமான தரு6 முதலிய செவ்விய பா வகைகளைப் பாடி, மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் ... அடிக்கடி வந்து போவதையும் சொல்லித் தெரிவித்து, அவர்களுடைய அடி முதல் முடி வரையும் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வந்தாலும், இவர் வீதம் எங்களிடம் ஆக வரும் அதுவொ போதும் என்று ... (அவர்கள்) அமைதியாக எங்களிடத்தில் (நீங்கள்) வருவது போதும் என்று கூறி, ஒரு பணம் உதாசினம் சொல் ... ஒரு பணம் கூடத் தராமல் அலட்சிய வார்த்தை பேசுவார்கள். மடையரிடமே நடந்து மனம் வேறாய் உருகி மிகவாக வெந்து ... அத்தகைய முட்டாள்களிடத்தில் நான் நடந்து, மனம் உடைந்து வேறுபட்டு, உள்ளம் உருகி மிகவும் வெந்து, கவிதை சொ(ல்)லியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே ... பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைச்சல் உறுவது ஒழிவதற்காகவே, நல் உபய பத மால் விளங்கி இக பரமும் ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே ... உனது நல்ல இரு திருவடிகளிலும் ஆசை மேலிட்டு விளங்கி, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்படியான இன்பத்தை நான் பெற உதவி, என்னை ஆட்கொள்ள அன்பு தருவாயாக. குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி ... கொக்கினோடு நாரை, அன்றில் என்னும் நீர்ப் பறவைகள் இரையை விரும்பித் தேடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக ... (காவிரியின் நீர் நிலையில்) குதிக்கின்றதை, இள வாளை மீன்கள் கண்டு பயம் கொள்ள, குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு ... ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவதுபோல காவிரி ஆறு வந்து விளங்கும் குரு மலையின் மேல் அமர்ந்த பெருமாளே. ... சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.