எனக்கு புத்தி ஏது ஐயனே? இனிமேல் நான் யாரைச் சென்று விரும்பி நாடுவேன்? வீணாக இறப்பதுதான் என் தலைவிதியோ? எனக்கு நீயே தாயும் தந்தையுமாக இருந்தும் நான் இந்த விதமாகவே தவித்திடலாமா? உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான் ஆளாகலாமா? என்னை இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள் ஐயனே, என் நிலை தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில், உலகோர் நகைப்பார்கள் ஐயனே, தந்தையின் முன் குழந்தை ஓடிச்சென்று, பால் மணம் மாறாத வாயால் குரலெழுப்பி அழுதால், இந்தக் குழந்தையை யார் எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக இப்பூமியிலே விட்டு விடுவார்களோ? எனக்கு இந்த உண்மை சிந்தையிலே தோன்றலாகாதோ? வெள்ளமாய்ப் பெருகி எழும் பாற்கடல் பொங்கியது போல எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான அசுரர்களை ஓடும்படி வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே கொண்ட எங்கள் அரசனே, கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த சடாமுடி ஆடவும், பொருந்தி அமர்ந்த மானும், மழுவும் ஏந்திய கரங்கள் ஆடவும், அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார் தந்தளித்த செல்வமே, பெரிய தினைப்புனத்தின் மீது இருந்தவளும், மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை உடையவளுமான குறப்பெண் வள்ளியை, உன் அழகிய மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம் கந்த வேளே, மன்மதன் வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய மாதர்கள் ஆச்சரியப்படும்படியான பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே.
ஏது புத்திஐ யாஎனக்கு ... எனக்கு புத்தி ஏது ஐயனே? இனி யாரை நத்திடுவேன் ... இனிமேல் நான் யாரைச் சென்று விரும்பி நாடுவேன்? அவத்தினிலே யிறத்தல்கொலோ ... வீணாக இறப்பதுதான் என் தலைவிதியோ? எனக்குனி. தந்தைதாயென்றேயி ருக்கவு ... எனக்கு நீயே தாயும் தந்தையுமாக இருந்தும் நானு மிப்படியே தவித்திடவோ ... நான் இந்த விதமாகவே தவித்திடலாமா? சகத்தவரேசலிற்படவோ ... உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான் ஆளாகலாமா? நகைத்தவர் கண்கள்காணப் பாதம் வைத்திடு ஐயா ... என்னை இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள் ஐயனே, தெரித்தெனை தாளில் வைக்கநியேம றுத்திடில் ... என் நிலை தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில், பார்நகைக்குமையா ... உலகோர் நகைப்பார்கள் ஐயனே, தகப்பன்முன் மைந்தனோடி ... தந்தையின் முன் குழந்தை ஓடிச்சென்று, பால்மொழிக் குரல் ஓல மிட்டிடில் ... பால் மணம் மாறாத வாயால் குரலெழுப்பி அழுதால், யாரெ டுப்பதெனாவெ றுத்தழ ... இந்தக் குழந்தையை யார் எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக பார்வி டுப்பர்களோ ... இப்பூமியிலே விட்டு விடுவார்களோ? எ னக்கிது சிந்தியாதோ ... எனக்கு இந்த உண்மை சிந்தையிலே தோன்றலாகாதோ? ஓத முற்றெழு பால்கொதித்தது போல ... வெள்ளமாய்ப் பெருகி எழும் பாற்கடல் பொங்கியது போல எட்டிகை நீசமுட்டரை ... எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான அசுரர்களை ஓட வெட்டிய பாநு சத்திகை யெங்கள்கோவே ... ஓடும்படி வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே கொண்ட எங்கள் அரசனே, ஓத மொய்ச்சடையாட ... கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த சடாமுடி ஆடவும், உற்றமர் மான்மழுக்கர மாட ... பொருந்தி அமர்ந்த மானும், மழுவும் ஏந்திய கரங்கள் ஆடவும், பொற்கழலோசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே ... அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார் தந்தளித்த செல்வமே, மாதினைப்புன மீதிருக்கு ... பெரிய தினைப்புனத்தின் மீது இருந்தவளும், மைவாள்விழிக்குற மாதினை ... மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை உடையவளுமான குறப்பெண் வள்ளியை, திருமார்ப ணைத்த மயூர அற்புத கந்தவேளே ... உன் அழகிய மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம் கந்த வேளே, மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார்வியப்புற ... மன்மதன் வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய மாதர்கள் ஆச்சரியப்படும்படியான நீடு மெய்த்தவர் வாழ்திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. ... பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே.