உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை உ(ள்)ளாகிய பேர் வரில்
உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார்
உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய தோதகம் ஆடியும்
உவமை மாமயில் போல் நிற மேனியர் உரை ஆடும் கரவு அது ஆம் மன மாதர்கள்
நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி கருத ஒணா அதி பாதகன்
நேசமது அறியாத கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே
இரு நாயகி கணவனே உனது தாளிணை மாமலர் தருவாயே
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி
நல் துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் வருவோனே
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே
அரன் அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே
அணி பொன் மேரு உயர் கோபுரம் மாமதில் அதிரும் ஆரணம் வாரண வீதியுள
அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே.
உருகி ஒழுகும் பெரிய மெழுகு போல மோகம் அதிகமாகி காமத்தில் வசப்பட்ட பேர்வழிகள் (பொது மகளிர் இல்லம்) வந்தால், நல்ல மெத்தை மேடையில் இருந்து தமது நீண்ட கூந்தலை விரித்து வேகமாக வாரிக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள், உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால் மார்பகங்களை மூடியும், அந்த ஆடை நெகிழும்படியாக வேண்டுமென்றே வஞ்சனையான ஆடல்களை ஆடியும் உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நிறம் கொண்ட உடலை உடையவர்களும், பேசுவதிலேயே மறைமுகமாக கருத்தை அமைக்கும் மனத்தை உடையவர்களுமான விலைமாதர்களின் பெரிய வலையாகிய சச்சரவுக் கடலில் வீழ்கின்ற அடியேனாகிய நான் நன்னெறியைக் கருதமாட்டாத அதி பாதகச் செயல் புரிபவன். அன்பு என்பதையே அறியாத குற்றமுள்ள முட்டாளாகிய என்னையும் ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே, வள்ளி, தேவயானை என்ற இரண்டு நாயகிகளின் கணவனே, உனது இரு தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக. வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை ஏந்தியவன், நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே, அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி) வலம் வருபவனே, கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே, சிவபெருமான் அணையும் உமா தேவியின் குழந்தையே, நிறைந்த கலைப் புலவனே, அழகிய பொன் மலை போல் உயர்ந்த கோபுரம், பெரிய மதில், ஒலிபெருகும் வேதங்கள் முழங்கும் வீதி, யானைகள் செல்லும் தெருக்கள் இவைகள் உள்ள திருவண்ணாமலையாகிய சிறந்த நகரில் விரும்பி உலவும் பெருமாளே.
உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை உ(ள்)ளாகிய பேர் வரில் ... உருகி ஒழுகும் பெரிய மெழுகு போல மோகம் அதிகமாகி காமத்தில் வசப்பட்ட பேர்வழிகள் (பொது மகளிர் இல்லம்) வந்தால், உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார் ... நல்ல மெத்தை மேடையில் இருந்து தமது நீண்ட கூந்தலை விரித்து வேகமாக வாரிக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள், உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய தோதகம் ஆடியும் ... உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால் மார்பகங்களை மூடியும், அந்த ஆடை நெகிழும்படியாக வேண்டுமென்றே வஞ்சனையான ஆடல்களை ஆடியும் உவமை மாமயில் போல் நிற மேனியர் உரை ஆடும் கரவு அது ஆம் மன மாதர்கள் ... உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நிறம் கொண்ட உடலை உடையவர்களும், பேசுவதிலேயே மறைமுகமாக கருத்தை அமைக்கும் மனத்தை உடையவர்களுமான விலைமாதர்களின் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி கருத ஒணா அதி பாதகன் ... பெரிய வலையாகிய சச்சரவுக் கடலில் வீழ்கின்ற அடியேனாகிய நான் நன்னெறியைக் கருதமாட்டாத அதி பாதகச் செயல் புரிபவன். நேசமது அறியாத கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே ... அன்பு என்பதையே அறியாத குற்றமுள்ள முட்டாளாகிய என்னையும் ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே, இரு நாயகி கணவனே உனது தாளிணை மாமலர் தருவாயே ... வள்ளி, தேவயானை என்ற இரண்டு நாயகிகளின் கணவனே, உனது இரு தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக. சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி ... வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை ஏந்தியவன், நல் துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே ... நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே, தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் வருவோனே ... அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி) வலம் வருபவனே, அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே ... கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே, அரன் அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே ... சிவபெருமான் அணையும் உமா தேவியின் குழந்தையே, நிறைந்த கலைப் புலவனே, அணி பொன் மேரு உயர் கோபுரம் மாமதில் அதிரும் ஆரணம் வாரண வீதியுள ... அழகிய பொன் மலை போல் உயர்ந்த கோபுரம், பெரிய மதில், ஒலிபெருகும் வேதங்கள் முழங்கும் வீதி, யானைகள் செல்லும் தெருக்கள் இவைகள் உள்ள அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே. ... திருவண்ணாமலையாகிய சிறந்த நகரில் விரும்பி உலவும் பெருமாளே.