கயலைச் சருவிப் பிணை ஒத்து அலர் பொன் கமலத்து இயல் மைக் க(ண்)ணினாலே
கடி மொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர் விட்டு எழு மைக் குழலாலே
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ
புயல் உற்ற இயல் மைக் கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும்
பொருதிட்டு அமரர்க்கு உறு துக்கமும் விட்டு ஒழியப் புகழ் பெற்றிடுவோனே
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே
சிவதைப் பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய்க் குமரப் பெருமாளே.
கயல் மீனோடு போர் செய்து, பெண் மானை ஒத்து, மலராகிய அழகிய தாமரையின் தன்மையைக் கொண்ட, மை தீட்டிய கண்களாலும், விளக்கமுற்று நெருங்கிய கருமேகத்தை நோக்கிக் கோபித்து, ஒளி வீசி எழுந்துத் திகழும் கரிய கூந்தலாலும், இனிமையும் அழகும் கொண்ட குடத்தையும், மலையையும் விட மேம்பாடு உள்ள நல்ல பெரிய இரு மார்பகங்களாலும், இன்பம், அழகு முதலிய நலன்களை இழந்து, அறிவு போய், உணர்வையும் இழந்த நான் நற் கதியை எவ்வாறு பெறுவேன்? மேகம் படியும் தன்மை வாய்ந்த கருங் கடலில் புகுந்து நின்ற மாமரமாகிய சூரன் வேரோடு சாயும்படி முன்பு வேலாயுதத்தை விட்டு அடக்கி ஆழ்த்திய ஆற்றலோடு, சண்டை செய்து தேவர்களுக்கு இருந்த துன்பத்தை விட்டு நீங்கச் செய்த புகழைப் பெற்றவனே, வெற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் பாக்கள் மூலமாக வெளித்தோன்றும் சிறந்த தேவார மந்திரங்களையும், மேலான பொருளையும் அனுபவித்து (சம்பந்தராக வந்து) உலகுக்கு அருளிய செல்வமே, சிவாயம் எனப்படும் ரத்தின கிரியில் விளங்கும் உண்மை வடிவாகிய குமரப் பெருமாளே.
கயலைச் சருவிப் பிணை ஒத்து அலர் பொன் கமலத்து இயல் மைக் க(ண்)ணினாலே ... கயல் மீனோடு போர் செய்து, பெண் மானை ஒத்து, மலராகிய அழகிய தாமரையின் தன்மையைக் கொண்ட, மை தீட்டிய கண்களாலும், கடி மொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர் விட்டு எழு மைக் குழலாலே ... விளக்கமுற்று நெருங்கிய கருமேகத்தை நோக்கிக் கோபித்து, ஒளி வீசி எழுந்துத் திகழும் கரிய கூந்தலாலும், நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே ... இனிமையும் அழகும் கொண்ட குடத்தையும், மலையையும் விட மேம்பாடு உள்ள நல்ல பெரிய இரு மார்பகங்களாலும், நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ ... இன்பம், அழகு முதலிய நலன்களை இழந்து, அறிவு போய், உணர்வையும் இழந்த நான் நற் கதியை எவ்வாறு பெறுவேன்? புயல் உற்ற இயல் மைக் கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் ... மேகம் படியும் தன்மை வாய்ந்த கருங் கடலில் புகுந்து நின்ற மாமரமாகிய சூரன் வேரோடு சாயும்படி முன்பு வேலாயுதத்தை விட்டு அடக்கி ஆழ்த்திய ஆற்றலோடு, பொருதிட்டு அமரர்க்கு உறு துக்கமும் விட்டு ஒழியப் புகழ் பெற்றிடுவோனே ... சண்டை செய்து தேவர்களுக்கு இருந்த துன்பத்தை விட்டு நீங்கச் செய்த புகழைப் பெற்றவனே, செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே ... வெற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் பாக்கள் மூலமாக வெளித்தோன்றும் சிறந்த தேவார மந்திரங்களையும், மேலான பொருளையும் அனுபவித்து (சம்பந்தராக வந்து) உலகுக்கு அருளிய செல்வமே, சிவதைப் பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய்க் குமரப் பெருமாளே. ... சிவாயம் எனப்படும் ரத்தின கிரியில் விளங்கும் உண்மை வடிவாகிய குமரப் பெருமாளே.