சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
566   இரத்னகிரி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 147 - வாரியார் # 347 )  

சுற்ற கபடோடு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
     கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி
          சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு ...... துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
     செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
          சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
     தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
          சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
     சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
          தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
     தத்ததன தானதன தானனன தானனன
          திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
     னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
          திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
     மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
          எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
     சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
          ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே.
Easy Version:
சுற்ற கபடோடு பல சூது வினையான பல
கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை
என
மூளும் ஒரு தீயில் மெழுகான உடல்
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில்
தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர்
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி
தக்க மடவார் மனையை நாடி அவரோடு
பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல்
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு எனதாளம்
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட
சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட
பல திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட
எதிர் களம் மீதே எத்திசையும் நாடி யமனார் நிணமொடு
ஆட
பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட
சமர் எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடிவேலா
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவை தனை
சித்தம் அலை காமுக குகா
நம சிவாயனொடு ரத்ன கிரி வாழ் முருகனே
இளையவா அமரர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

சுற்ற கபடோடு பல சூது வினையான பல ... சூழ்ந்துள்ள
வஞ்சனைகள் பலவும் சூது நிறைந்த தொழில்கள் பலவும் கொண்டு,
கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி ... கற்ற கள்ளத்
தொழிலொடு பழிக்கு இடம் தருபவர்கள், கொலை செய்பவர்கள்
இவர்களுடன் கூடிச் சலிப்புற்று,
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி ...
அலைந்து, வீணான பெருமையோடு வாழ்க்கைக் கடலில் மூழ்கி, அதில்
உண்டான துன்பங்களை அடைந்து,
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை
என
... துக்கம் தரும் சம்சாரம் என்னும் கடலில் வீசப்பட்ட வலையில்
சிக்கிய மீன் போல, கூழில் விழுந்த குப்பை போலக் கிடந்து,
மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் ... மூண்டு எரியும் பெரிய
நெருப்பில் பட்ட மெழுகுபோல் உருகும் உடல்,
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே ...
சுத்தம் என்பதையே அறியாத பாரம் வாய்ந்த உடலில் பொருந்தி வேலை
செய்யும் ஐந்து இந்திரியங்களின் காரணமாக,
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் ... சிறிதேனும்
இரக்கமில்லாமல் வருகின்ற, வலியும் செருக்கும் கொண்ட யமன்
நெருங்கும் சமயத்தில்,
தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் ... ஆபத்து (சாவின்
உருவில்) வருகின்றதே என்பதை அறியாமல் ஓடியும் ஆடியும் வருகின்ற
சூதாடிகளான ஐவர்,
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி ...
சப்தம், தொடுகை, வாசனை, வடிவம், ரசம் எனப்படும் ஐம்புலன்களின்
பொய் இன்பங்களில் திளைத்து விளையாடி,
தக்க மடவார் மனையை நாடி அவரோடு ... இந்த உடலுக்குத்
தகுந்த மாதர்களையும், அவர்கள் வீடுகளையும் தேடிச் சென்று,
அம்மாதர்களோடு
பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் ... பல (காம)
மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும்
வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற, (என்னுடைய) உடல்
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே ...
நைந்துபோய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது
அழிவில்லாத திருவடியைத் தந்து அருளுக.
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு எனதாளம்
... (இதே
ஒலியில்) தாளம்
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட ... எல்லா திசைகளிலும்
இடியென ஒலிக்க, திருமால் ஆட, பிரமன் ஆட,
சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட ... சிவனும்
மகிழ்ந்து களி கூர்ந்து ஆட, தேவியும் உடன் ஆட, சிறந்த முனிவர்கள்
ஆட,
பல திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட ... பல திக்குகளில்
இருந்த அசுரர்கள் வாடி மயங்க, தேவர்கள் பாட, வேதங்கள் பாடித்
துதிக்கப்பட,
எதிர் களம் மீதே எத்திசையும் நாடி யமனார் நிணமொடு
ஆட
... எதிர்த்து வந்த போர்க்களத்தில் எல்லாத் திசைகளையும் தேடிச்
சென்று, கால தூதுவர்கள் போர்க் களத்தில் கிடந்த மாமிசக் கொழுப்பில்
நடை செய்ய,
பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட ... பலம் மிக உள்ள
நரி உணவு கிடைக்கின்றது என்று கூத்தாட, பேய்கள் ஆட, காக்கைகள்
ஆட,
சமர் எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடிவேலா ...
போரில் மோதி வருகின்ற பூத கணங்கள் ஆட, ஒளியை வீசும்படி
செலுத்திய கூர்மையான வேலனே,
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவை தனை ... (வேலன்,
வேங்கை, செட்டி, விருத்தன் ஆகிய வேடங்களைக் காட்டி) ஏமாற்றி,
ஒப்பற்ற மான் போன்றவளும் தினைப் புனம் காப்பதில் வல்லவளும்
நாகண வாய்ப்புள் போன்றவளுமாகிய வள்ளியின்
சித்தம் அலை காமுக குகா ... உள்ளத்தை அலைபாயச் செய்த
காதலனே, குகனே,
நம சிவாயனொடு ரத்ன கிரி வாழ் முருகனே ...
சிவபெருமானோடு ரத்தின கிரி எனப்படும் வாட்போக்கித் தலத்தில்
வாழும் முருகனே,
இளையவா அமரர் பெருமாளே. ... என்றும் இளையவனே,
தேவர்கள் பெருமாளே.

Similar songs:

503 - தத்தை மயில் (சிதம்பரம்)

தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

566 - சுற்ற கபடோடு (இரத்னகிரி)

தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

Songs from this thalam இரத்னகிரி

565 - கயலைச் சருவி

566 - சுற்ற கபடோடு

567 - பத்தியால் யானுனை

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song