மனையவள் நகைக்க வூரின் அனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை தமரோடும்
மனமது சலிப்ப நாயன் உளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளும் அடியேனை
அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின்
அகமதை யெடுத்த சேமம் இதுவோவென்று
அடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும்
அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே
தனதன தனத்த தான என முரசொலிப்ப வீணை
தமருக மறைக்குழாமும் அலைமோத
தடிநிகர் அயிற்கடாவி அசுரர்கள் இறக்குமாறு
சமரிடை விடுத்த சோதி முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி உமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே.
மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும் நகைக்கவும், உலகத்திலுள்ள மாதர்களெல்லாம் நகைக்கவும், தந்தையும் சுற்றத்தாரும் உள்ளம் வெறுப்படையவும், என்னுடைய மனமும் மிகச் சலிப்படையவும், எல்லோரும் பழிமொழிகளை ஆராயாமல் கூறி, தினம்தோறும் என்னை அனைவரும் இகழவும், எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து யோசித்துப் பார்த்தால் நான் பிறந்து பெற்ற பயன் இதுதானோ என்று நானும் நாள்தோறும் நினைத்து கடைசியில் உடலினின்றும் உயிரை விடத் துணிந்த சமயத்தில் என்னருகே வந்து முன்பு நீ அளித்த பாத தீக்ஷையை இப்போதும் அருள்வாயாக. தனதன தனத்த தான என்ற தாளத்தில் முரசு ஒலிக்க, வீணை, உடுக்கை, வேத கோஷங்கள் இவையாவும் அலைமோதுவது போலப் பெருக, மின்னல் போன்ற ஒளிவிடும் வேலாயுதத்தை வீசி அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய ஜோதி முருகனே, என் மனத்தை உருக்கி, யோக அநுபூதியை அளித்த திருவடிகளை உடையவனே, எழுதுதற்கு அரியதான மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே, தேவர்கள் துதிக்க ஞானமலையில் வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின் மணவாளனே, விளங்குகின்ற இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே.