மாதர் கொங்கையில் வித்தாரத் திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் வாச மென் குழலில் சேலைப் பொரும் விழி வேலில்
மாமை ஒன்று(ம்) மலர்த் தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய்த் தாமத்தினில் வான் இளம் பிறையைப் போல் நெற்றியில் மயலாகி
ஆதரம் கொ(ண்)டு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும் ஆகி நின்று தவித்தே நித்தலும் அலைவேனோ
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை க(ர்)த்தா மத்திபனாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் புரிவாயே
சாதனம் கொ(ண்)டு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா உத்தரம் ஏது எனும் படி தன் காய் நிற்பவர் சபை ஊடே
தாழ்வு இல் சுந்தரனைத் தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே
வேதமும் கிரியைச் சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள் வேர் விழும்படி செய்த ஏர் மெய்த் தமிழ் மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா வித்தக
வேலொடும் படை குத்தா ஒற்றிய வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே.
(விலை) மாதர்களுடைய மார்பகங்களிலும், விரிந்த அழகிய மார்பில் விளங்கும் தன்மையை உடைய முத்து மாலையிலும், நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும், சேல் மீன் போன்ற கண்ணாகிய வேலிலும், மகிமை பொருந்திய மலருக்கு ஒப்பான பாதமாகிய இடத்திலும், அழகிய வஞ்சிக் கொடி போன்ற இடையிலும், உடலில் அணிந்துள்ள மாலையிலும், வானில் உள்ள இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மோகம் கொண்டவனாய், பற்று வைத்துக் கெட்டுப் போய், ஆசைக் கடலுக்கே மிகவும் ஈடுபட்டவனாய் தவிப்புற்று, நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? பன்னிரண்டு பெருமை வாய்ந்த தோள்களை உடைய அற்புதமானவனே, ஆயிரக் கணக்கான கலைகளுக்குத் தலைவனே, சாமானிய மனிதனாய் திரிந்து அலைகின்ற எனக்கு அருள் புரிவாயாக. ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மிகத் தத்தி தத்தி நடந்து போய், பொய் பேசும் பித்தனே மறு மொழி என்ன பேசுவாய் என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி (திருமணப் பந்தலின் கீழ்) நிற்பவராய்ச் சபை நடுவில், தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை, தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, கிருபை மிகவும் கொண்டு சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவ பெருமானின் செல்வக் குழந்தையே, வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படிச் செய்த அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத் தக்க அறிவாளனே, வேற்படை முதலிய படைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே, பக்தர்களுடைய பெருமாளே.
மாதர் கொங்கையில் வித்தாரத் திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் வாச மென் குழலில் சேலைப் பொரும் விழி வேலில் ... (விலை) மாதர்களுடைய மார்பகங்களிலும், விரிந்த அழகிய மார்பில் விளங்கும் தன்மையை உடைய முத்து மாலையிலும், நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும், சேல் மீன் போன்ற கண்ணாகிய வேலிலும், மாமை ஒன்று(ம்) மலர்த் தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய்த் தாமத்தினில் வான் இளம் பிறையைப் போல் நெற்றியில் மயலாகி ... மகிமை பொருந்திய மலருக்கு ஒப்பான பாதமாகிய இடத்திலும், அழகிய வஞ்சிக் கொடி போன்ற இடையிலும், உடலில் அணிந்துள்ள மாலையிலும், வானில் உள்ள இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மோகம் கொண்டவனாய், ஆதரம் கொ(ண்)டு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும் ஆகி நின்று தவித்தே நித்தலும் அலைவேனோ ... பற்று வைத்துக் கெட்டுப் போய், ஆசைக் கடலுக்கே மிகவும் ஈடுபட்டவனாய் தவிப்புற்று, நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை க(ர்)த்தா மத்திபனாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் புரிவாயே ... பன்னிரண்டு பெருமை வாய்ந்த தோள்களை உடைய அற்புதமானவனே, ஆயிரக் கணக்கான கலைகளுக்குத் தலைவனே, சாமானிய மனிதனாய் திரிந்து அலைகின்ற எனக்கு அருள் புரிவாயாக. சாதனம் கொ(ண்)டு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா உத்தரம் ஏது எனும் படி தன் காய் நிற்பவர் சபை ஊடே ... ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மிகத் தத்தி தத்தி நடந்து போய், பொய் பேசும் பித்தனே மறு மொழி என்ன பேசுவாய் என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி (திருமணப் பந்தலின் கீழ்) நிற்பவராய்ச் சபை நடுவில், தாழ்வு இல் சுந்தரனைத் தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே ... தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை, தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, கிருபை மிகவும் கொண்டு சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவ பெருமானின் செல்வக் குழந்தையே, வேதமும் கிரியைச் சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள் வேர் விழும்படி செய்த ஏர் மெய்த் தமிழ் மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா வித்தக ... வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படிச் செய்த அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத் தக்க அறிவாளனே, வேலொடும் படை குத்தா ஒற்றிய வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே. ... வேற்படை முதலிய படைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே, பக்தர்களுடைய பெருமாளே.