சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரணக் கழல் காட்டியே என் ஆணவ
மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணைக் கடல் காட்டிய கோலமும் அடியேனை
கனகத்தினும் நோக்கி இனிதாய் அடி
யவர் முத்தமிழால் புகவே பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே
சிதறத் தரை நால்திசை பூதர(ம்)
நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே
சிவ பத்தினி கூற்றினை மோதிய
பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா
விதுரற்கும் அராக் கொடி யானையும்
விகடத் துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே
வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே.
நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) குளிர்ந்து தழைய, சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து, உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன். பூமி அதிர, நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ, கடல் ஒலி செய்து வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே, சிவனது பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில் படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே, விதுரனுக்கும், பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும், (மனம்) வேறுபடும்படியான பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான், அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே, வெளியிலே எட்டுத் திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை (இறுதியில் வென்று, அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க உலவிய (பெருமாளே), வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
சதுரத்தரை நோக்கிய பூவொடு ... நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய ... முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) குளிர்ந்து தழைய, சிவ பாக்கிய நாடக அநுபூதி ... சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய சரணக் கழல் காட்டியே ... திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ... என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் ... (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் ... ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் புறம் நோக்கியனாம் என ... மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடல் காட்டிய கோலமும் ... கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய் ... அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து, அடியவர் முத்தமிழால் புகவே ... உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே ... (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன். சிதறத் தரை நால்திசை பூதர(ம்) நெரிய ... பூமி அதிர, நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறை மூர்க்கர்கள் மா முடி சிதற ... பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ, கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே ... கடல் ஒலி செய்து வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே, சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி ... சிவனது பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா ... யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில் படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே, விதுரற்கும் அராக் கொடி யானையும் ... விதுரனுக்கும், பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும், விகடத் துறவு ஆக்கிய மாதவன் ... (மனம்) வேறுபடும்படியான பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான், விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே ... அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே, வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய ... வெளியிலே எட்டுத் திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய ... (இறுதியில் வென்று, அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க உலவிய (பெருமாளே), விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே. ... வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.