மகர குண்டல(ம்) மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ
மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை மறலி என்பவனோ மானோ மது நுகர் கீத(ம்) முகர வண்டினமோ
வான் மேல் எழு நிலவு அருந்து பு(ள்)ளோ மா தேவர் உண் முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார் முடிவு எனும் கடலோ யாதோ என
உலவு கண் கொடு நேரே சூறை கொள் முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ
நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள் தசமுகன் படை கோடா கோடிய நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே அடு போர் செய் நெடியன்
அங்கு அனுமானோடு எழுபது வெ(ள்)ளம் கவி சேனா சேவித நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே
சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள் சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனர் தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ
காமரு திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
(முதல் 11 வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மகர மீன் போலச் செய்யப்பட்ட குண்டலத்தின் மேல் வந்து தாக்குவனவாய் தாமரைக் குளத்தில் உள்ள சிவந்த தாமரையோ? பொருந்தி உள்ள செங்கழு நீர்ப் பூவோ? நீ செலுத்தும் கூரிய வேலோ? மன்மதன் செலுத்தும் பாணமோ? வாள் தானோ? சில கயல் மீன்களோ, கெண்டை மீன்களோ, சேல் மீன்களோ? கொலைத் தொழில் புரியும் யமன் எனப்பட்டவனோ? மானோ? தேன் உண்டு இசை ஒலிக்கும் வண்டின் கூட்டமோ? ஆகாயத்தில் எழுந்து நிலவை உண்ணும் சந்திரமுகிப் புள்ளோ? சிவ பெருமான் உண்ட பழைய கொடிய ஆலகால விஷமோ? தித்திக்கும் மாம்பழ வடுவின் பிளவோ? உலகின் முடியும் பொழுது எழும் ஊழிக் கடலோ? எதுவோ என்று சொல்லும்படி உலவுகின்ற கண்களைக் கொண்டு நேரே உயிரைக் கொள்ளை அடிக்கும் வழியைத் தெரிந்துள்ள, பிசாசைப் போன்ற விலைமாதர்களின் உறவு நல்லதோ? வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மாரீசன் முதலிய அரக்கர்கள், ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும், அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப் பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே, மேலான தேவர்கள், பகீரதன் முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள் பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே, அழகிய நகராகிய திருவலஞ்சுழியில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.
(முதல் 11 வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மகர குண்டல(ம்) மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ ... மகர மீன் போலச் செய்யப்பட்ட குண்டலத்தின் மேல் வந்து தாக்குவனவாய் தாமரைக் குளத்தில் உள்ள சிவந்த தாமரையோ? பொருந்தி உள்ள செங்கழு நீர்ப் பூவோ? நீ செலுத்தும் கூரிய வேலோ? மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை மறலி என்பவனோ மானோ மது நுகர் கீத(ம்) முகர வண்டினமோ ... மன்மதன் செலுத்தும் பாணமோ? வாள் தானோ? சில கயல் மீன்களோ, கெண்டை மீன்களோ, சேல் மீன்களோ? கொலைத் தொழில் புரியும் யமன் எனப்பட்டவனோ? மானோ? தேன் உண்டு இசை ஒலிக்கும் வண்டின் கூட்டமோ? வான் மேல் எழு நிலவு அருந்து பு(ள்)ளோ மா தேவர் உண் முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார் முடிவு எனும் கடலோ யாதோ என ... ஆகாயத்தில் எழுந்து நிலவை உண்ணும் சந்திரமுகிப் புள்ளோ? சிவ பெருமான் உண்ட பழைய கொடிய ஆலகால விஷமோ? தித்திக்கும் மாம்பழ வடுவின் பிளவோ? உலகின் முடியும் பொழுது எழும் ஊழிக் கடலோ? எதுவோ என்று சொல்லும்படி உலவு கண் கொடு நேரே சூறை கொள் முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ ... உலவுகின்ற கண்களைக் கொண்டு நேரே உயிரைக் கொள்ளை அடிக்கும் வழியைத் தெரிந்துள்ள, பிசாசைப் போன்ற விலைமாதர்களின் உறவு நல்லதோ? நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள் தசமுகன் படை கோடா கோடிய நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே அடு போர் செய் நெடியன் ... வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மாரீசன் முதலிய அரக்கர்கள், ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும், அங்கு அனுமானோடு எழுபது வெ(ள்)ளம் கவி சேனா சேவித நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே ... அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப் பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே, சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள் சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனர் தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ ... மேலான தேவர்கள், பகீரதன் முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள் பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே, காமரு திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே. ... அழகிய நகராகிய திருவலஞ்சுழியில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.