நிரைத்த நித்தில(ம்) நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இணை மார் முலை மேல் அணி
நெறித்த நெய்க் குழல் வாள் விழி மா மதி முக மானார்
நெளித்த சிற்றிடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர் தமையே மயல் நிரப்பி
நித்தமும் வீதியில் நேர் உறு நெறியாலே கரைத்து இதக் குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உ(ள்)ளில் சுழலா வகையே
உன கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது உற மேவி
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழிக் குண பாதகனேன் உயர் கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் உரையாதோ
வரைத் தநுக் கரர் மா தவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு மணிச் செவிக்குள் மெய்ஞ் ஞானம் அது ஓதிய வடிவேலா
மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்துள திருவாசகம் ஆனது மனத்துள் எத்து
அழகார் புகழ் வீசிய மணி மாட திரைக் கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமெ பாய் வள நீர் பொலி செழித்த
நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ் முருகா
அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே.
வரிசையாயுள்ள முத்து மாலைகளையும், நீண்ட ரத்தின மாலைகளையும் தாங்கியுள்ளதும் மலைக்கு ஒப்பானதுமான மார்பகங்களின் மீது விளங்கும் மேலாடை, சுருண்டதும் எண்ணெய்ப் பசை உள்ளதுமான கூந்தல், வாள் போன்ற கண்கள், அழகிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட மாதர்கள், நெளியும் சிறிய இடையின் மேல் மேகலை பூண்ட ஆடையை உடுத்தி, பொருள் உள்ளவர்களுக்கு மிக்க காம மயக்கம் தந்து, நாள்தோறும் தெருவில் நைச்சியமான வழியில் கூப்பிட்டு அழைத்து, நன்மை தரும் குயில் போல் மொழி பேசுகின்ற விலைமாதர்களின் வலைக்குள்ளே விழுந்து நான் சுழலாதபடி, உனது திருவடியை வணங்கும் வாழ்வே மனத்தில் பொருந்தி, இயற்கையாகவே உண்டாகும் பக்தி நிலை நிரம்பியுள்ள அடியார்களின் கூட்டத்தை மிக இழிவாகப் பேசும் பாவியாகிய நான் உயர்ந்த நற்கதியை நாடி மேன்மை அடையவே உனது திருவருள் உபதேசம் செய்யக்கூடாதோ? மேரு மலையை வில்லாக ஏந்திய கரத்தை உடையவர், நல்ல தவத்தை மேற்கொண்டவர்களின் மனமாகிய இடத்துள் வாழ்கின்றவர் ஆகிய சிவபெருமானின் சிறப்பும் அழகும் கொண்ட காதில் மெய்ஞ்ஞான உபதேசத்தைச் சொன்ன வடிவேலனே, போற்றத் தக்க முத்தமிழை ஆய்ந்தவர்களாகிய மேலோர் சொல்லியுள்ள திருவாசகத்தில் உள்ள உபதேச மொழிகளை (அடியார்கள்) மனதில் போற்றுகின்றதும், அழகு நிறைந்த புகழ் விளங்கும் மணி மாடங்களை உடையதும், அலை வீசும் கடல் போன்ற காவேரியாகிய பெரிய ஆற்றில் வெள்ளம் பெருகிப் பாய்கின்ற வளப்பமுள்ள நீரால் பொலிவதும், நெற்பயிரும், செந்நெல் பயிரும் கும்பல் கும்பலாக விளைந்து பெருகிக் கிடப்பதும் ஆகிய வயலூரில் வாழ்கின்ற முருகனே, (காஞ்சியில் முப்பத்திரண்டு) அறங்களை வளர்த்த நித்ய கல்யாணியும், அருள் நிறைந்தவளும் ஆகிய உமாதேவி உறையும் திருத்தவத்துறை ஆகிய லால்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.
நிரைத்த நித்தில(ம்) நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இணை மார் முலை மேல் அணி ... வரிசையாயுள்ள முத்து மாலைகளையும், நீண்ட ரத்தின மாலைகளையும் தாங்கியுள்ளதும் மலைக்கு ஒப்பானதுமான மார்பகங்களின் மீது விளங்கும் மேலாடை, நெறித்த நெய்க் குழல் வாள் விழி மா மதி முக மானார் ... சுருண்டதும் எண்ணெய்ப் பசை உள்ளதுமான கூந்தல், வாள் போன்ற கண்கள், அழகிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட மாதர்கள், நெளித்த சிற்றிடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர் தமையே மயல் நிரப்பி ... நெளியும் சிறிய இடையின் மேல் மேகலை பூண்ட ஆடையை உடுத்தி, பொருள் உள்ளவர்களுக்கு மிக்க காம மயக்கம் தந்து, நித்தமும் வீதியில் நேர் உறு நெறியாலே கரைத்து இதக் குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உ(ள்)ளில் சுழலா வகையே ... நாள்தோறும் தெருவில் நைச்சியமான வழியில் கூப்பிட்டு அழைத்து, நன்மை தரும் குயில் போல் மொழி பேசுகின்ற விலைமாதர்களின் வலைக்குள்ளே விழுந்து நான் சுழலாதபடி, உன கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது உற மேவி ... உனது திருவடியை வணங்கும் வாழ்வே மனத்தில் பொருந்தி, கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழிக் குண பாதகனேன் உயர் கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் உரையாதோ ... இயற்கையாகவே உண்டாகும் பக்தி நிலை நிரம்பியுள்ள அடியார்களின் கூட்டத்தை மிக இழிவாகப் பேசும் பாவியாகிய நான் உயர்ந்த நற்கதியை நாடி மேன்மை அடையவே உனது திருவருள் உபதேசம் செய்யக்கூடாதோ? வரைத் தநுக் கரர் மா தவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு மணிச் செவிக்குள் மெய்ஞ் ஞானம் அது ஓதிய வடிவேலா ... மேரு மலையை வில்லாக ஏந்திய கரத்தை உடையவர், நல்ல தவத்தை மேற்கொண்டவர்களின் மனமாகிய இடத்துள் வாழ்கின்றவர் ஆகிய சிவபெருமானின் சிறப்பும் அழகும் கொண்ட காதில் மெய்ஞ்ஞான உபதேசத்தைச் சொன்ன வடிவேலனே, மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்துள திருவாசகம் ஆனது மனத்துள் எத்து ... போற்றத் தக்க முத்தமிழை ஆய்ந்தவர்களாகிய மேலோர் சொல்லியுள்ள திருவாசகத்தில் உள்ள உபதேச மொழிகளை (அடியார்கள்) மனதில் போற்றுகின்றதும், அழகார் புகழ் வீசிய மணி மாட திரைக் கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமெ பாய் வள நீர் பொலி செழித்த ... அழகு நிறைந்த புகழ் விளங்கும் மணி மாடங்களை உடையதும், அலை வீசும் கடல் போன்ற காவேரியாகிய பெரிய ஆற்றில் வெள்ளம் பெருகிப் பாய்கின்ற வளப்பமுள்ள நீரால் பொலிவதும், நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ் முருகா ... நெற்பயிரும், செந்நெல் பயிரும் கும்பல் கும்பலாக விளைந்து பெருகிக் கிடப்பதும் ஆகிய வயலூரில் வாழ்கின்ற முருகனே, அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே. ... (காஞ்சியில் முப்பத்திரண்டு) அறங்களை வளர்த்த நித்ய கல்யாணியும், அருள் நிறைந்தவளும் ஆகிய உமாதேவி உறையும் திருத்தவத்துறை ஆகிய லால்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.