வாசனை மங்கையர் போற்று(ம்) சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட
மா மலை (இ)ரண்டு என நாட்டு மத்தக முலை யானை வாடை மயங்கிட நூற்ற சிற்று இழை நூல் இடை நன் கலை தேக்க
இக்கு வில் மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர்
விரும்புவர் போல் சுழற்றியே நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான நீரின் மிகுந்து உழல் ஆக்கையில்
திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே
தேசம் அடங்கலும் ஏத்து(ம்) மைப் புயல் ஆய நெடும் தகை வாழ்த்த வச்சிர தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே
தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்த்த வெற்பு உடல் தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா
மூசு அளி பம்பிய நூற்று இதழ்க் கமல ஆசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு வேதன் அகந்தையை மாற்றி
முக்க(ண்)ணர் அறிவாக மூது அறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி
அற்புத மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே.
நறு மணம் கொண்ட விலைமாதர்களின் விரும்பத்தக்க சிற்றடியில் ஆபரணமாய் விளங்கும் பாத சதங்கை ஒலி செய்ய, அழகிய மலைகள் இரண்டு என்று சொல்லும்படியாக நிறுத்தப்பட்டு, மத்தகத்தைக் கொண்ட யானை போன்ற மார்பின் வாசனை கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழை நூலை ஒத்த இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க, கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் ஏவும் தாமரைப் பூவைப் போல் சிவந்து விளங்கும் கண்களை உடையவர்கள். யாருடனும் நேசம் பாராட்டுபவர்கள். பயனிலிகள். (வந்தவரை) பலவிதமான கூத்தாட்டங்கள் ஆடும்படி ஆட்டுவிப்பவர்கள். பொல்லாதவர்கள். விரும்பி நேசிப்பவர் போல் அலைய வைத்து இழிந்தோன் என்னும்படி என்னை ஆக்கிவிட்டு ஒரு நோயாளன் என்னும்படியான நிலைமையில் விடப்பட்டு நிரம்பவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில், கலங்காத சிவ யோக நிலை மேம்பட்டு எழ, என்னை கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மார்பகத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் எனக்கு விடியுமா? தேசம் எல்லாம் போற்றும் கரிய மேக நிறத்தினனான பெருந்தகையாகிய திருமால் வாழ்த்த, அழியாத திருமேனி விளங்கும் பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே, வீரன் என்னும்படி பேர் பெற்றிருந்த வலிமையாளனே, சூரன் நடுங்கும்படி, வரத்தினால் கிடைத்த அவனது மலை போன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி, (போரை) நடத்தி புகழை அடைந்த ஒளி வீசும் வேலனே, மொய்க்கின்ற வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும், தோன்றி உலகங்களைப் படைத்து வைத்துள்ளவனுமாகிய, வேதம் ஓதும் பிரமனுடைய ஆணவத்தை நீக்கி, முக்கண்ணராகிய சிவ பெருமான் தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கிய உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே, அற்புதக் கடவுளராகிய (பிரமன், திருமால், சிவன் ஆகிய) திரிமூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறை என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே.
வாசனை மங்கையர் போற்று(ம்) சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட ... நறு மணம் கொண்ட விலைமாதர்களின் விரும்பத்தக்க சிற்றடியில் ஆபரணமாய் விளங்கும் பாத சதங்கை ஒலி செய்ய, மா மலை (இ)ரண்டு என நாட்டு மத்தக முலை யானை வாடை மயங்கிட நூற்ற சிற்று இழை நூல் இடை நன் கலை தேக்க ... அழகிய மலைகள் இரண்டு என்று சொல்லும்படியாக நிறுத்தப்பட்டு, மத்தகத்தைக் கொண்ட யானை போன்ற மார்பின் வாசனை கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழை நூலை ஒத்த இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க, இக்கு வில் மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் ... கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் ஏவும் தாமரைப் பூவைப் போல் சிவந்து விளங்கும் கண்களை உடையவர்கள். யாருடனும் நேசம் பாராட்டுபவர்கள். பயனிலிகள். (வந்தவரை) பலவிதமான கூத்தாட்டங்கள் ஆடும்படி ஆட்டுவிப்பவர்கள். பொல்லாதவர்கள். விரும்புவர் போல் சுழற்றியே நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான நீரின் மிகுந்து உழல் ஆக்கையில் ... விரும்பி நேசிப்பவர் போல் அலைய வைத்து இழிந்தோன் என்னும்படி என்னை ஆக்கிவிட்டு ஒரு நோயாளன் என்னும்படியான நிலைமையில் விடப்பட்டு நிரம்பவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில், திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே ... கலங்காத சிவ யோக நிலை மேம்பட்டு எழ, என்னை கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மார்பகத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் எனக்கு விடியுமா? தேசம் அடங்கலும் ஏத்து(ம்) மைப் புயல் ஆய நெடும் தகை வாழ்த்த வச்சிர தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே ... தேசம் எல்லாம் போற்றும் கரிய மேக நிறத்தினனான பெருந்தகையாகிய திருமால் வாழ்த்த, அழியாத திருமேனி விளங்கும் பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே, தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்த்த வெற்பு உடல் தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா ... வீரன் என்னும்படி பேர் பெற்றிருந்த வலிமையாளனே, சூரன் நடுங்கும்படி, வரத்தினால் கிடைத்த அவனது மலை போன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி, (போரை) நடத்தி புகழை அடைந்த ஒளி வீசும் வேலனே, மூசு அளி பம்பிய நூற்று இதழ்க் கமல ஆசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு வேதன் அகந்தையை மாற்றி ... மொய்க்கின்ற வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும், தோன்றி உலகங்களைப் படைத்து வைத்துள்ளவனுமாகிய, வேதம் ஓதும் பிரமனுடைய ஆணவத்தை நீக்கி, முக்க(ண்)ணர் அறிவாக மூது அறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி ... முக்கண்ணராகிய சிவ பெருமான் தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கிய உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே, அற்புத மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே. ... அற்புதக் கடவுளராகிய (பிரமன், திருமால், சிவன் ஆகிய) திரிமூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறை என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே.