பந்தம் பொன் பார பயோதரம் உந்திச் சிற்று ஆடு அகை மேகலை பண்பு உற்றுத் தாளொடு மேவிய துகிலோடே
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியெ
பங்குக்கைக் காசு கொள் வேசியர் பனி நீர் தோய் கொந்துச்சிப்பூ அணி கோதையர்
சந்தச் செந்தாமரை வாயினர் கும்பிட்டுப் பாணியர் வீணியர்
அநுராகம் கொண்டு உற்றுப் பாயலில் மூழ்கினும் மண்டிச் செச்சே என வானவர் கொஞ்சு உற்றுத் தாழ் பத தாமரை மறவேனே
அந்தத் தொக்காதியும் ஆதியும் வந்திக்கத் தான் அவர் வாழ்வு உறும் அண்டத்துப் பால் உற மா மணி ஒளி வீசி
அங்கத்தைப் பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத உவந்துக் கிட்டார் கழு ஏறிட
ஒரு கோடிச் சந்தச் செக் காள நிசாசரர் வெந்து உக்கத் தூளி படாம் எழ
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற தங்கச் செங்கோல் அசை சேவக
கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில் தண்டைச் சிங்கார அயில் வேல் விடு பெருமாளே.
திரண்ட, அழகிய, கனத்த மார்பகம், வயிற்றில் கட்டப்பட்டுள்ள சிறிதாக அசைந்து விளங்கும் மேகலை என்ற இடை அணி (இவை) நன்கு பொருந்தி பாதம் வரைக்கும் தொங்குகின்ற ஆடையுடன், பழமையாயிருக்கும் பரத்தையர் வசிக்கும் சேரியில் உள்ள தெருவில் (வருபவர்களைப்) பார்த்து, தம்மை இச்சித்து விரும்புவர்களுடன் கூடியே, தம்முடைய பங்குக்கு உரிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் விலைமாதர், பன்னீர் தோய்ந்துள்ள உச்சியில் கொத்துப் பூக்களை அணிந்த பெண்கள், அழகிய செந்தாமரை போன்ற வாயிதழை உடையவர்கள், வணக்கத்தைக் காட்டும் கைகளை உடையவர்கள், வீண் காலம் போக்குபவர்கள், காம இச்சை (நான் அவர்கள் மீது) கொண்டு, அவர்களிடமே பொருந்தி படுக்கையில் முழுகிய போதிலும், உன்னை நெருங்கி தேவர்கள் ஜே ஜே என்று வாழ்த்தி கொஞ்சுதல் செய்து வணங்கும் திருவடித் தாமரைகளை நான் மறக்க மாட்டேன். அந்த உடலைப் படைக்கும் தலைவனான பிரமனும், திருமாலும் துதிக்கவே தான், அவரவர் வாழ்கின்ற அண்டங்களாகிய இடங்களில் வாழவும், அழகிய இரத்தின மாலையின் ஒளி வீசவும், எலும்பினின்று பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப் பாடலை நீ ஓதவும் , உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும், ஒரு கோடிக் கணக்கான, (ரத்தம் ஒழுகுவதால்) சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும், விஷம் நிறைந்த குணம் உடையவர்களும் ஆகிய அசுரர்களை (தீயைக் கக்கும் பாணங்களால்) வெந்து சிதற அடிக்கவும், (போர்க்களத்தில்) தூசி போர்வை போல் கிளம்பி எழவும், போரில் இளைத்தவர்களாகிய தேவர்கள் அவர்கள் ஊராகிய அமராவதியில் குடி புகவும், தங்க மயமான செங்கோல் ஆட்சியைப் புரிந்த வலிமையாளனே, கொங்கு நாட்டில் சேர்ந்துள்ள அவிநாசி என்னும் ஊரில் வீற்றிருந்து, தண்டை அணிந்து, அழகிய, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
பந்தம் பொன் பார பயோதரம் உந்திச் சிற்று ஆடு அகை மேகலை பண்பு உற்றுத் தாளொடு மேவிய துகிலோடே ... திரண்ட, அழகிய, கனத்த மார்பகம், வயிற்றில் கட்டப்பட்டுள்ள சிறிதாக அசைந்து விளங்கும் மேகலை என்ற இடை அணி (இவை) நன்கு பொருந்தி பாதம் வரைக்கும் தொங்குகின்ற ஆடையுடன், பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியெ ... பழமையாயிருக்கும் பரத்தையர் வசிக்கும் சேரியில் உள்ள தெருவில் (வருபவர்களைப்) பார்த்து, தம்மை இச்சித்து விரும்புவர்களுடன் கூடியே, பங்குக்கைக் காசு கொள் வேசியர் பனி நீர் தோய் கொந்துச்சிப்பூ அணி கோதையர் ... தம்முடைய பங்குக்கு உரிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் விலைமாதர், பன்னீர் தோய்ந்துள்ள உச்சியில் கொத்துப் பூக்களை அணிந்த பெண்கள், சந்தச் செந்தாமரை வாயினர் கும்பிட்டுப் பாணியர் வீணியர் ... அழகிய செந்தாமரை போன்ற வாயிதழை உடையவர்கள், வணக்கத்தைக் காட்டும் கைகளை உடையவர்கள், வீண் காலம் போக்குபவர்கள், அநுராகம் கொண்டு உற்றுப் பாயலில் மூழ்கினும் மண்டிச் செச்சே என வானவர் கொஞ்சு உற்றுத் தாழ் பத தாமரை மறவேனே ... காம இச்சை (நான் அவர்கள் மீது) கொண்டு, அவர்களிடமே பொருந்தி படுக்கையில் முழுகிய போதிலும், உன்னை நெருங்கி தேவர்கள் ஜே ஜே என்று வாழ்த்தி கொஞ்சுதல் செய்து வணங்கும் திருவடித் தாமரைகளை நான் மறக்க மாட்டேன். அந்தத் தொக்காதியும் ஆதியும் வந்திக்கத் தான் அவர் வாழ்வு உறும் அண்டத்துப் பால் உற மா மணி ஒளி வீசி ... அந்த உடலைப் படைக்கும் தலைவனான பிரமனும், திருமாலும் துதிக்கவே தான், அவரவர் வாழ்கின்ற அண்டங்களாகிய இடங்களில் வாழவும், அழகிய இரத்தின மாலையின் ஒளி வீசவும், அங்கத்தைப் பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத உவந்துக் கிட்டார் கழு ஏறிட ... எலும்பினின்று பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப் பாடலை நீ ஓதவும் , உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும், ஒரு கோடிச் சந்தச் செக் காள நிசாசரர் வெந்து உக்கத் தூளி படாம் எழ ... ஒரு கோடிக் கணக்கான, (ரத்தம் ஒழுகுவதால்) சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும், விஷம் நிறைந்த குணம் உடையவர்களும் ஆகிய அசுரர்களை (தீயைக் கக்கும் பாணங்களால்) வெந்து சிதற அடிக்கவும், (போர்க்களத்தில்) தூசி போர்வை போல் கிளம்பி எழவும், சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற தங்கச் செங்கோல் அசை சேவக ... போரில் இளைத்தவர்களாகிய தேவர்கள் அவர்கள் ஊராகிய அமராவதியில் குடி புகவும், தங்க மயமான செங்கோல் ஆட்சியைப் புரிந்த வலிமையாளனே, கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில் தண்டைச் சிங்கார அயில் வேல் விடு பெருமாளே. ... கொங்கு நாட்டில் சேர்ந்துள்ள அவிநாசி என்னும் ஊரில் வீற்றிருந்து, தண்டை அணிந்து, அழகிய, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.