சீத வாசனை மலர்க் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ
தேமல் மார்பின் இள பொன் கிரி பளப்பள என தொங்கல் ஆரம் சேரும் ஓவியம் எனச் சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இடை உற்ற வரி சேலை காலில் விழவிட்டு
நடை இட்டு மயிலின் கலாபச் சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே
தாவி மூழ்கி மதி கெட்டு அவலம் உற்றவனை பாவமான பிறவிக் கடல் உழப்பவனை தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு
நரியின் குழுவை வாசியாம் என நடத்து உவகை உற்று அரசன் அன்பு காண மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து
வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்க(ம்) முறை இட்டு அலற வேலை ஏவி அவுணக் குலம் இறக்க நகை கொண்ட சீலா
வேதம் மீண கமலக் க(ண்)ணர் மெய் பச்சை ரகு ராமர் ஈண மயில் ஒக்க மதுரைப் பதியில் மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே.
குளிர்ந்த மணம் பொருந்திய மலர் அணிந்த கூந்தலை அலங்கரித்து, முகத்தில் உள்ள மயக்குவதான வேல் போன்ற கண்களைச் சுழற்றி, புன் சிரிப்பு முத்துப் போன்ற பற்களினின்று தோன்ற, தேமல் படர்ந்த மார்பகத்தில் உள்ள இளமை விளங்கும் மலை பொன்ற மார்பகங்களின் மீது பளபள என்று விளங்கும் முத்து மாலை சேர்ந்துள்ள சித்திரப் பதுமையோ என்னும்படி உடலை மினுக்கி, அதிக காமப் பற்றையும் நட்பையும் உண்டாக்கி, அரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டு, நடந்துவந்து, தோகை விளங்கும் மயிலின் இனமாம் என்று சொல்லும்படி, வந்தவர்களை விரட்டியும், நடித்தும் தங்கள் வலையில் வீழ்ந்த பேர்வழிகளை தம்மை இரந்து வேண்டும்படியான வழிக்குக் கொண்டுவர முயற்சித்து, இறப்பதற்கே நோயும் பிணியும் வரும்படிச் செய்து துன்பம் உண்டு பண்ணுபவர்களாகிய விலைமாதர்கள் பால், பாய்ந்து, காமத்தில் மூழ்கி, அறிவு கெட்டு துன்பம் அடைந்தவனை, பாவத்துக்குக் காரணமான பிறவிக் கடலில் உழல்பவனாகிய என்னை, மாலைகள் விளங்கும் திருவடிப் பத்தியில் நீ இருத்தி வைப்பதும் என்றைக்கோ? திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று (முக்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்தும், நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில் மகிழ்ச்சி பூண்டு பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட பொன்னாடையைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு மன்னனின் முன்பு சிரித்தும், வைகையாற்றங்கரை மீது கூத்தாடியும், (ஆற்றில் அணைகட்ட) மண் சுமந்து மகிழ்வுற்றும், மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டும் விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான் பெற்றருளிய கந்த வேளே, வேதம் ஓதும் நன் மக்கள், பொன்னுலகத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த ஒழுக்கம் நிறைந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டுக் கூச்சலிட, வேலைச் செலுத்தி அசுரர்களின் கூட்டம் இறக்கும்படி சிரித்த தூயவனே, (அவுணர்களால் கவரப்பட்ட) வேதத்தை மீட்டுத் தந்த தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுடையவரும் ஆகிய ராமர் பெற்ற மயில் போன்ற பெண்களான தேவயானை, வள்ளி இவர்கள் இருவருடன் மதுரை நகரில் வீற்றிருந்து வாழ்கின்றவனே, தேவர்களும், ஜீவன் முக்தர்களும், சிவனடியார்களும் வணங்குகின்ற தலைவனே.
சீத வாசனை மலர்க் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ ... குளிர்ந்த மணம் பொருந்திய மலர் அணிந்த கூந்தலை அலங்கரித்து, முகத்தில் உள்ள மயக்குவதான வேல் போன்ற கண்களைச் சுழற்றி, புன் சிரிப்பு முத்துப் போன்ற பற்களினின்று தோன்ற, தேமல் மார்பின் இள பொன் கிரி பளப்பள என தொங்கல் ஆரம் சேரும் ஓவியம் எனச் சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இடை உற்ற வரி சேலை காலில் விழவிட்டு ... தேமல் படர்ந்த மார்பகத்தில் உள்ள இளமை விளங்கும் மலை பொன்ற மார்பகங்களின் மீது பளபள என்று விளங்கும் முத்து மாலை சேர்ந்துள்ள சித்திரப் பதுமையோ என்னும்படி உடலை மினுக்கி, அதிக காமப் பற்றையும் நட்பையும் உண்டாக்கி, அரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டு, நடை இட்டு மயிலின் கலாபச் சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே ... நடந்துவந்து, தோகை விளங்கும் மயிலின் இனமாம் என்று சொல்லும்படி, வந்தவர்களை விரட்டியும், நடித்தும் தங்கள் வலையில் வீழ்ந்த பேர்வழிகளை தம்மை இரந்து வேண்டும்படியான வழிக்குக் கொண்டுவர முயற்சித்து, இறப்பதற்கே நோயும் பிணியும் வரும்படிச் செய்து துன்பம் உண்டு பண்ணுபவர்களாகிய விலைமாதர்கள் பால், தாவி மூழ்கி மதி கெட்டு அவலம் உற்றவனை பாவமான பிறவிக் கடல் உழப்பவனை தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ ... பாய்ந்து, காமத்தில் மூழ்கி, அறிவு கெட்டு துன்பம் அடைந்தவனை, பாவத்துக்குக் காரணமான பிறவிக் கடலில் உழல்பவனாகிய என்னை, மாலைகள் விளங்கும் திருவடிப் பத்தியில் நீ இருத்தி வைப்பதும் என்றைக்கோ? வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு ... திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று (முக்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்தும், நரியின் குழுவை வாசியாம் என நடத்து உவகை உற்று அரசன் அன்பு காண மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து ... நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில் மகிழ்ச்சி பூண்டு பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட பொன்னாடையைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு மன்னனின் முன்பு சிரித்தும், வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே ... வைகையாற்றங்கரை மீது கூத்தாடியும், (ஆற்றில் அணைகட்ட) மண் சுமந்து மகிழ்வுற்றும், மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டும் விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான் பெற்றருளிய கந்த வேளே, வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்க(ம்) முறை இட்டு அலற வேலை ஏவி அவுணக் குலம் இறக்க நகை கொண்ட சீலா ... வேதம் ஓதும் நன் மக்கள், பொன்னுலகத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த ஒழுக்கம் நிறைந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டுக் கூச்சலிட, வேலைச் செலுத்தி அசுரர்களின் கூட்டம் இறக்கும்படி சிரித்த தூயவனே, வேதம் மீண கமலக் க(ண்)ணர் மெய் பச்சை ரகு ராமர் ஈண மயில் ஒக்க மதுரைப் பதியில் மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே. ... (அவுணர்களால் கவரப்பட்ட) வேதத்தை மீட்டுத் தந்த தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுடையவரும் ஆகிய ராமர் பெற்ற மயில் போன்ற பெண்களான தேவயானை, வள்ளி இவர்கள் இருவருடன் மதுரை நகரில் வீற்றிருந்து வாழ்கின்றவனே, தேவர்களும், ஜீவன் முக்தர்களும், சிவனடியார்களும் வணங்குகின்ற தலைவனே.