வால வயதாகி அழகாகி மதனாகி
பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி
விழல் வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி
வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி
மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி
விலைமாதர்களை மேவி அவர் ஆசை தனில் சுழல சில நாள் போய்
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி
இரு கால்கள் தடுமாறி செவி மாறி
பசு பாச பதி சூழ் கதிகள் மாறி சுகம் மாறி
தடியோடு திரி உறு நாளில்
சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு
சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல்
சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ
நாலுமுகம் ஆதி அரி ஓம் என அதாரம் உரையாத பிரமாவை
விழ மோதி பொருள் ஓதுக என நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே
நாறு இதழி வேணி சிவ ரூப கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ
வனம் மீது செறி ஞான குற மாதை தின காவில் மணமேவு புகழ் மயில் வீரா
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம்
வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவே
ஓத மறை ராமெசுர மேவும் குமரா
அமரர் பெருமாளே.
கட்டிளமை வயதை அடைந்து, அழகு நிரம்பப்பெற்று, மன்மதன் போல் விளங்கி, ஊதியம் தரும் பல வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்தி, மயக்க அறிவைப்பெற்று காம விளையாட்டுக்கள் ஆடி, பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதி, அதிலேயே மனம் உறுதிபெற்று, மாட கூடம் கொண்ட செல்வனாயப் பொருளைத் தேடி, நறு மணம் உள்ள புனுகு, மற்றும் இதழ்களோடு கூடிய மலர்கள் இவற்றில் மனத்தைச் செலுத்தியவனாக, மகிழ்ச்சியுடன் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய், காமப் பற்றைக்கொண்டு பொது மகளிரை விரும்பி அவர்கள் மீது மோகம் கொண்டு அவர்கள் பின் சுழல, (அங்ஙனம்) சில நாட்கள் கழிய, உடலில் தோல் சுருங்கலுற்று, மயிர் வெண்ணிறம் பூண்டு, கண்கள் பார்வை இழந்து, இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து, காதுகள் கேட்கும் தொழில் அற்று, உயிர், தளை, கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு யாவும் மறைதலுற்று, சுகமெல்லாம் கெட்டு, கையில் தடி ஏந்தித் திரிகின்ற முதுமைப் பருவத்தில், சூலை நோய், சொறி நோய், கோழை, இழுப்பு, வாயு மிகுதலால் வரும் பிணிகள், நீரிழிவு, இரத்தமின்மையால் வரும் சோகை, கண்ட மாலை, காய்ச்சல் இவைகளுடன் சேர்ந்துள்ள கக்குவான் இருமல், இவை எல்லாம் சூழ்ந்து, அடிக்காரணமாகிய இந்தக் கூளம் போன்ற உடல் துர் நாற்றம் அடைந்து நான் மடிந்து போவேனோ? நான்கு முகங்களைக் கொண்டவனும், யாவற்றுக்கும் ஆதாரமான பிரணவத்தின் பொருளைச் சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை, விழும்படியாகத் தாக்கி, சரியான பொருளைச் சொல்லுக என்று அவனுடைய நான்கு முகங்களுடன் குடுமியும் சிதறுண்டு அலைய தாளமிடுவது போல் குட்டிய இளையவனே, நறுமணம் வீசும் கொன்றையை அணிந்த ஜடையை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள தேவி பார்வதி முதலில் ஈன்ற குழந்தையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே, வள்ளி மலைக் காட்டில் பொருந்தி இருந்த ஞானக் குறப் பெண் வள்ளியை, தினைப் புனச்சோலையில் திருமணம் செய்துகொண்ட புகழை உடைய மயில் வீரனே, கூச்சலிட்டு வந்த தாடகை, சுபாகு, வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு, வாலி மற்றும் நீலி, பகன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல், இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில் இறந்து பொடிபட்டழிய, களிப்புடன் நெருப்பு அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன் ஆகிய திருமாலின் மருகனே என்று வேதங்கள் ஓதிப் புகழும் இராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே, தேவர்களின் பெருமாளே.
வால வயதாகி அழகாகி மதனாகி ... கட்டிளமை வயதை அடைந்து, அழகு நிரம்பப்பெற்று, மன்மதன் போல் விளங்கி, பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி ... ஊதியம் தரும் பல வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்தி, மயக்க அறிவைப்பெற்று காம விளையாட்டுக்கள் ஆடி, விழல் வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி ... பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதி, அதிலேயே மனம் உறுதிபெற்று, மாட கூடம் கொண்ட செல்வனாயப் பொருளைத் தேடி, வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி ... நறு மணம் உள்ள புனுகு, மற்றும் இதழ்களோடு கூடிய மலர்கள் இவற்றில் மனத்தைச் செலுத்தியவனாக, மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி ... மகிழ்ச்சியுடன் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய், காமப் பற்றைக்கொண்டு விலைமாதர்களை மேவி அவர் ஆசை தனில் சுழல சில நாள் போய் ... பொது மகளிரை விரும்பி அவர்கள் மீது மோகம் கொண்டு அவர்கள் பின் சுழல, (அங்ஙனம்) சில நாட்கள் கழிய, தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி ... உடலில் தோல் சுருங்கலுற்று, மயிர் வெண்ணிறம் பூண்டு, கண்கள் பார்வை இழந்து, இரு கால்கள் தடுமாறி செவி மாறி ... இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து, காதுகள் கேட்கும் தொழில் அற்று, பசு பாச பதி சூழ் கதிகள் மாறி சுகம் மாறி ... உயிர், தளை, கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு யாவும் மறைதலுற்று, சுகமெல்லாம் கெட்டு, தடியோடு திரி உறு நாளில் ... கையில் தடி ஏந்தித் திரிகின்ற முதுமைப் பருவத்தில், சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு ... சூலை நோய், சொறி நோய், கோழை, இழுப்பு, வாயு மிகுதலால் வரும் பிணிகள், நீரிழிவு, சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல் ... இரத்தமின்மையால் வரும் சோகை, கண்ட மாலை, காய்ச்சல் இவைகளுடன் சேர்ந்துள்ள கக்குவான் இருமல், சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ ... இவை எல்லாம் சூழ்ந்து, அடிக்காரணமாகிய இந்தக் கூளம் போன்ற உடல் துர் நாற்றம் அடைந்து நான் மடிந்து போவேனோ? நாலுமுகம் ஆதி அரி ஓம் என அதாரம் உரையாத பிரமாவை ... நான்கு முகங்களைக் கொண்டவனும், யாவற்றுக்கும் ஆதாரமான பிரணவத்தின் பொருளைச் சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை, விழ மோதி பொருள் ஓதுக என நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே ... விழும்படியாகத் தாக்கி, சரியான பொருளைச் சொல்லுக என்று அவனுடைய நான்கு முகங்களுடன் குடுமியும் சிதறுண்டு அலைய தாளமிடுவது போல் குட்டிய இளையவனே, நாறு இதழி வேணி சிவ ரூப கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ ... நறுமணம் வீசும் கொன்றையை அணிந்த ஜடையை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள தேவி பார்வதி முதலில் ஈன்ற குழந்தையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே, வனம் மீது செறி ஞான குற மாதை தின காவில் மணமேவு புகழ் மயில் வீரா ... வள்ளி மலைக் காட்டில் பொருந்தி இருந்த ஞானக் குறப் பெண் வள்ளியை, தினைப் புனச்சோலையில் திருமணம் செய்துகொண்ட புகழை உடைய மயில் வீரனே, ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் ... கூச்சலிட்டு வந்த தாடகை, சுபாகு, வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு, வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக ... வாலி மற்றும் நீலி, பகன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல், இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில் இறந்து பொடிபட்டழிய, ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவே ... களிப்புடன் நெருப்பு அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன் ஆகிய திருமாலின் மருகனே என்று ஓத மறை ராமெசுர மேவும் குமரா ... வேதங்கள் ஓதிப் புகழும் இராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே, அமரர் பெருமாளே. ... தேவர்களின் பெருமாளே.