சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1141   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1024 )  

உறவு சிங்கிகள்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தந்தன தானா தானன
     தனன தந்தன தானா தானன
          தனன தந்தன தானா தானன ...... தனதான

உறவு சிங்கிகள் காமா காரிகள்
     முறைம சங்கிக ளாசா வேசிகள்
          உதடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை
உடைய கொங்கையின் மீதே தூசிகள்
     பிணமெ னும்படி பேய்நீ ராகிய
          உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ...... கடல்ஞாலத்
தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்
     வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள்
          அணிநெ ருங்கிக ளாசா பாஷண ...... மடமாதர்
அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்
     கலவி யின்பமெ னாவே சோருதல்
          அலம லந்தடு மாறா தோர்கதி ...... யருள்வாயே
பறவை யென்கிற கூடார் மூவரண்
     முறையி டுந்தமர் வானோர் தேரரி
          பகழி குன்றவி லாலே நீறெழ ...... வொருமூவர்
பதநி னைந்துவி டாதே தாள் பெற
     அருள்பு ரிந்தபி ரானார் மாபதி
          பரவு கந்தசு வாமீ கானக ...... மதின்மேவுங்
குறவர் தங்கள்பி ரானே மாமரம்
     நெறுநெ றென்றடி வேரோ டேநிலை
          குலைய வென்றிகொள் வேலே யேவிய ...... புயவீரா
குயில்க ளன்றில்கள் கூகூ கூவென
     மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை
          குறவர் சுந்தரி யோடே கூடிய ...... பெருமாளே.
Easy Version:
உறவு சிங்கிகள் காம ஆகாரிகள் முறை மசங்கிகள் ஆசா
வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நக ரேகை உடைய
கொங்கையின் மீதே தூசிகள்
பிணம் எனும் படி பேய் நீராகிய உணவை உண்டு உடை
சோர் கோமாளிகள்
கடல் ஞாலத்து அறவு நெஞ்சு பொ(ல்)லா மா பாவிகள்
வறுமை தந்திடு பாழ் மூதேவிகள்
அணி நெருங்கிகள் ஆசா பாஷண மட மாதர் அழகு உயர்ந்த
பொய் மாயா ரூபிகள்
கலவி இன்பமே எனாவே சோருதல் அலம் அலம் தடுமாறாது
ஓர் கதி அருள்வாயே
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர்
தேர் அரி பகழி குன்ற(ம்) வி(ல்)லாலே நீறு எழ
ஒரு மூவர் பத(ம்) நினைந்து விடாதே தாள் பெற அருள்
புரிந்த பிரானார் மா பதி பரவு கந்த சுவாமீ
கானகம் அதில் மேவும் குறவர் தங்கள் பிரானே
மா மரம் நெறு நெறு என்று அடி வேரோடு நிலை குலைய
வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய
தேன் வீழ் காமிசை
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

உறவு சிங்கிகள் காம ஆகாரிகள் முறை மசங்கிகள் ஆசா
வேசிகள்
... உறவு முறை கூறி பேசிக் கொண்டேயிருக்கும் விஷமிகள்.
காமத்துக்கு இருப்பிடமானவர்கள். (மாமா, அத்தான் என்று) உறவு கூறி
மயக்கம் செய்பவர்கள். அதீதமான காமம் நிறைந்த பொது மகளிர்.
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நக ரேகை உடைய
கொங்கையின் மீதே தூசிகள்
... உதடுகள் (அதிகமாக
ஈடுபட்டதால்) நோவுற்றவர்கள். வெட்கம் இல்லாத பயனற்றவர்கள்.
நகக் குறிகளை உடைய மார்பின் மேல் ஆடை அணிந்தவர்கள்.
பிணம் எனும் படி பேய் நீராகிய உணவை உண்டு உடை
சோர் கோமாளிகள்
... பிணம் என்று சொல்லும்படி ஆவேச நீராகிய
கள்ளை உண்டு, ஆடை நெகிழக் கொண்டாட்டம் ஆடுபவர்கள்.
கடல் ஞாலத்து அறவு நெஞ்சு பொ(ல்)லா மா பாவிகள் ...
கடல் சூழ்ந்த உலகில் மிகவும் பொல்லாத நெஞ்சத்தவர்களான பெரிய
பாவிகள்.
வறுமை தந்திடு பாழ் மூதேவிகள் ... தரித்திர நிலையைச்
சேர்ப்பிக்கும் பாழான மூதேவிகள்.
அணி நெருங்கிகள் ஆசா பாஷண மட மாதர் அழகு உயர்ந்த
பொய் மாயா ரூபிகள்
... ஆபரணங்களை நெருக்கி அணிந்தவர்கள்.
ஆசைப் பேச்சுக்களைப் பேசும் இள மாதர்கள். அழகில் மேம்பட்டு
மாயை சம்பந்தப்பட்ட உருவத்தினர்.
கலவி இன்பமே எனாவே சோருதல் அலம் அலம் தடுமாறாது
ஓர் கதி அருள்வாயே
... அவர்களுடன் புணர்ச்சி இன்பமே வேண்டும்
என்று கூறியே நான் தளர்ச்சி அடைதல் போதும், போதும். (இனி நான்)
இத்தகைய தடுமாற்றம் அடையாமல் ஒப்பற்ற நற் கதியைத் தந்தருளுக.
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர்
தேர் அரி பகழி குன்ற(ம்) வி(ல்)லாலே நீறு எழ
... பறக்கும்
தன்மையுள்ள பகைவர்கள் ஆகிய திரிபுரங்களின் கொடுமையைக் குறித்து
முறையிட்ட தமக்கு வேண்டியவர்களான தேவர்கள் தேராகவும், திருமால்
அம்பாகவும், மேரு மலை வில்லாகவும் கொண்டு, (திரிபுரங்களைச்
சிரித்தே) சாம்பலாகும்படிச் செய்த சிவபிரானின்
ஒரு மூவர் பத(ம்) நினைந்து விடாதே தாள் பெற அருள்
புரிந்த பிரானார் மா பதி பரவு கந்த சுவாமீ
... திருவடியைத்
தியானித்தல் விடாதிருந்த காரணத்தால், அதிலிருந்து ஒப்பற்ற மூவர்
மாத்திரம் திருவடி நிழலைப் பெறும்படி அருள் பாலித்த சிவபெருமான்
போற்றும் கந்த சுவாமியே,
கானகம் அதில் மேவும் குறவர் தங்கள் பிரானே ... காட்டில்
இருந்த குறவர்களின் தலைவனே,
மா மரம் நெறு நெறு என்று அடி வேரோடு நிலை குலைய
வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா
... மாமரமாக நின்ற சூரன்
நெறு நெறு என்று முறிந்து அடி வேருடன் நிலை குலைந்து அழியும்படி
வெற்றி பெறும் வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய வீரனே,
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய
தேன் வீழ் காமிசை
... குயில்களும், அன்றில் பறவைகளும் கூகூகூ
என்று ஒலி எழுப்ப, மலர்களினின்றும் பொங்கி எழுந்த தேன் சொட்டும்
சோலைகளில்,
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே. ... குறவர் குலத்து
அழகியான வள்ளியுடன் சேர்ந்த பெருமாளே.

Similar songs:

876 - மகர குண்டல மீதே (திருவலஞ்சுழி)

தனன தந்தன தானா தானன
     தனன தந்தன தானா தானன
          தனன தந்தன தானா தானன ...... தனதான

1141 - உறவு சிங்கிகள் (பொதுப்பாடல்கள்)

தனன தந்தன தானா தானன
     தனன தந்தன தானா தானன
          தனன தந்தன தானா தானன ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song