சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1150   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1033 )  

கலவியி னலமுரை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனதன தானன தானந்
  தனத் தனந்தன தனன தான தனதன
    தானான தான தனனந் தானந்
      தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான

கலவியி னலமுரை யாமட வார்சந்
  தனத் தனங்களில் வசம தாகி யவரவர்
    பாதாதி கேச மளவும் பாடுங்
      கவிஞ னாய்த்திரி வேனைக் காமக் ரோதத் ...... தூர்த்தனை யபராதக்
கபடனை வெகுபரி தாபனை நாளும்
  ப்ரமிக் குநெஞ்சனை உருவ மாறி முறைமுறை
    ஆசார வீன சமயந் தோறுங்
      களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ...... சாத்திர நெறிபோயைம்
புலன்வழி யொழுகிய மோகனை மூகந்
  தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு
    மாதேச வாழ்வை நிலையென் றேயம்
      புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ...... பூக்கழ லிணைசேரப்
பொறியிலி தனையதி பாவியை நீடுங்
  குணத் ரயங்களும் வரும நேக வினைகளு
    மாயாவி கார முழுதுஞ் சாடும்
      பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ...... காப்பது மொருநாளே
குலகிரி தருமபி ராம மயூரம்
  ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு
    வாராவு லாவி யுணரும் யோகங்
      குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ...... பார்த்தரு ளியபார்வைக்
குரிசிலு மொருசுரர் பூசுர னோமென்
  றதற் கநந்தர மிரணி யாய நமவென
    நாராய ணாய நமவென் றோதுங்
      குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ...... றோற்றிய வசபாணிப்
பலநக நுதியி னிசாசர னாகங்
  கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல்
    தோண்மாலை யாக அணியுங் கோவும்
      பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப் ...... பாற்பணி யிறைவாகைப்
படமுக வடலயி ராபத மேறும்
  ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட
    வேலேவி வாவி மகரஞ் சீறும்
      பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத் ...... தாக்கிய பெருமாளே.
Easy Version:
கலவியின் நலம் உரையா மடவார் சந்தனத் தனங்களில்
வசமது ஆகி அவரவர் பாதாதி கேசம் அளவும் பாடும்
கவிஞனாய் திரிவேனைக் காம க்ரோத தூர்த்தனை
அபராதக் கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு
நெஞ்சனை உருவ மாறி முறை முறை ஆசார ஈன சமயம்
தோறும் களவு சாத்திரம் ஓதிச் சாதித்தேனை
சாத்திர நெறி போய் ஐம்புலன் வழி ஒழுகிய மோகனை
மூகம் தனில் பிறந்து ஒரு நொடியின் மீள அழி தரும் ஆதேச
வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே
பட்டேனை
பூக்கழல் இணை சேரப் பொறியிலிதனை அதி பாவியை
நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளு(ம்) மாயா
விகார(ம்) முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது
ஆசைப்பாடு அற்றேனைக் காப்பதும் ஒருநாளே
குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும் படி குவளை
வாச மலர் கொடு வாரா உலாவி உணரும் யோகம் குலைய
வீக்கிய வேளைக் கோபித்து ஏறப் பார்த்து அருளிய பார்வை
குரிசிலும்
ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய
நம என நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய்ச்
சிறியோனுக்காகத் தூணில் தோற்றிய
வச பாணிப் பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து
அளைந்து அணி துளசியோடு சிறு குடல் தோள் மாலையாக
அணியும் கோவும்
பரவி வாழ்த்திடவே கற்று ஆரச் சோதிப்பான் பணி இறை
வாகைப் பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபுப் பயம்
கெட
வட பராரை வரை கெட வேல் ஏவி வாவி மகரம் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர் கெட்டு ஓடத் தாக்கிய
பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கலவியின் நலம் உரையா மடவார் சந்தனத் தனங்களில்
வசமது ஆகி அவரவர் பாதாதி கேசம் அளவும் பாடும்
கவிஞனாய் திரிவேனைக் காம க்ரோத தூர்த்தனை
...
புணர்ச்சியின் இன்பங்களை எடுத்துப் பேசி, விலைமாதர்களுடைய
சந்தனம் அணிந்த மார்பகங்களில் வசப்பட்டு, அந்த மாதர்களுடைய
பாதம் முதல் கூந்தல் வரையும் பாடும் பாவலனாய் திரிகின்ற
எண்ணம் கொண்ட, காம ஆசையும், கோபமும் கொண்ட
காமுகனான என்னை,
அபராதக் கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு
நெஞ்சனை உருவ மாறி முறை முறை ஆசார ஈன சமயம்
தோறும் களவு சாத்திரம் ஓதிச் சாதித்தேனை
... பிழைகள்
செய்கின்ற வஞ்சகனாகிய என்னை, மிகவும் வருந்தத் தக்க என்னை,
தினந்தோறும் திகைத்து நிற்கும் உள்ளம் கொண்டவனாகிய என்னை,
வடிவமும் அழகும் அப்போதைக்கப்போது மாறுதல் அடைந்து, ஒன்றன்
பின் ஒன்றாக ஒழுக்கக் குறைவு உள்ள சமயங்கள் ஒவ்வொன்றையும்
ஆராய்ந்து வஞ்சனைக்கு இடமான வழிகளைக் கற்று நான் பேசுவதே
சரி என்று சாதித்துப் பேசும் என்னை,
சாத்திர நெறி போய் ஐம்புலன் வழி ஒழுகிய மோகனை
மூகம் தனில் பிறந்து ஒரு நொடியின் மீள அழி தரும் ஆதேச
வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே
பட்டேனை
... நன்னடையைக் கூறும் வேத நூல்களில் கூறப்பட்ட
வழிகளை விட்டு விலகி, ஐம்புலன்கள் இழுத்துக் கொண்டு போகும்
வழியிலே சென்று காமுகனாகிய என்னை ஊமையின் கனவுக்கு ஒப்பாகத்
தோன்றி ஒரு நொடிப் பொழுதில் மாண்டு அழிவுறும் நிலையாமை உடைய
இந்த வாழ்க்கையை நிலைத்திருக்கும் என்று நினைத்து, இந்த அழகிய
பூமியில் பதி ஞானம் இல்லாமல், ஜீவான்மா சம்பந்தப்பட்ட பந்தங்களில்
கட்டுப்பட்ட என்னை,
பூக்கழல் இணை சேரப் பொறியிலிதனை அதி பாவியை
நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளு(ம்) மாயா
விகார(ம்) முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது
ஆசைப்பாடு அற்றேனைக் காப்பதும் ஒருநாளே
... உனது மலர்
நிறைந்த திருவடி இணைகளில் சேர அறிவில்லாத என்னை, மகா
பாபியாகிய என்னை, நெடியதாய் இருக்கும் சத்துவம், தாமதம், ராசதம்
எனப்படும் மூன்று குணங்களையும் என்னைப் பீடிக்க வரும் பல
வினைகளையும், உலக மாயையால் ஏற்படும் (காமம், குரோதம், லோபம்,
மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை ஆகிய) துர்க்குணங்கள்
யாவற்றையும் துகைத்து அழிக்க வல்ல மெய்ப் பொருளின் மேல் சிறிதளவும்
கூட ஆசை இல்லாத என்னை காத்தருளும் ஒரு நாள் கிடைக்குமா?
குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும் படி குவளை
வாச மலர் கொடு வாரா உலாவி உணரும் யோகம் குலைய
வீக்கிய வேளைக் கோபித்து ஏறப் பார்த்து அருளிய பார்வை
குரிசிலும்
... இமய மலை ஈன்ற அழகுள்ள மயிலான பார்வதி
ஆசைப்படும்படி குவளை மலராகிய பாணத்தை எடுத்துக் கொண்டு வந்து
உலாவி, சகலத்தையும் உணர வல்ல ஞான யோக நிலை தடுமாற அந்தப்
பாணத்தைத் தன் மீது செலுத்திய மன்மதனை கோபித்து மேலே நெரித்து
நோக்கிய பார்வையால் எரித்து, பின் அருளிய பெருமையைக் கொண்ட
சிவபெருமானும்,
ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய
நம என நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய்ச்
சிறியோனுக்காகத் தூணில் தோற்றிய
... ஒரு தெய்வ வேதியன் ஓம்
என்று தொடங்கிய பின்னர் இரணியாய நம என்று பாடம் ஆரம்பிக்க,
நாராயணாய நம என்று ஓதிய சிறு பிள்ளையாகிய பிரகலாதனுக்காக
தூணில் இருந்து வெளிப்பட்ட
வச பாணிப் பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து
அளைந்து அணி துளசியோடு சிறு குடல் தோள் மாலையாக
அணியும் கோவும்
... நர சிம்ம வடிவத்தில் கொண்டிருந்த கைகளில்
இருந்த பல நகங்களின் நுனியைக் கொண்டு அந்த அரக்கனாகிய
இரணியனின் தேகத்தைக் கிழித்து துளாவிக் கலக்கி, தாம் அணிந்திருந்த
துளசி மாலையோடு (இரணியனின்) சிறு குடலையும தோளில் மாலையாக
அணிந்து விளங்கிய தலைவனான திருமாலும்,
பரவி வாழ்த்திடவே கற்று ஆரச் சோதிப்பான் பணி இறை
வாகைப் பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபுப் பயம்
கெட
... போற்றி வாழ்த்தவும், கற்று நிரம்ப ஆராய்ச்சி உடைய
பிரகஸ்பதியைப் பணிகின்ற அரசனும், வெற்றி கொண்டதும் முக படாம்
அணிந்துள்ளதும் வலிமை வாய்ந்ததுமான ஐராவதம் என்னும் யானையின்
மேல் ஏறும் தலைவனுமான இந்திரனுடைய பயம் நீங்கவும்,
வட பராரை வரை கெட வேல் ஏவி வாவி மகரம் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர் கெட்டு ஓடத் தாக்கிய
பெருமாளே.
... வடக்கே உள்ள பருத்த அடியை உடைய கிரௌஞ்ச
மலை அழிய வேலாயுதத்தைச் செலுத்தி, தாண்டிப் பாய்ந்து மகர மீன்கள்
சீறுகின்ற கடல் கோ கோ எனக் கூச்சலிட அதைத் தாக்கி, சூரன்
(கடலில்) ஓட்டம் பிடித்து அழியும்படி அவனையும் தாக்கிய பெருமாளே.

Similar songs:

1150 - கலவியி னலமுரை (பொதுப்பாடல்கள்)

தனதன தனதன தானன தானந்
  தனத் தனந்தன தனன தான தனதன
    தானான தான தனனந் தானந்
      தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song