சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

திருஞானசம்பந்தர்

  திருநாவுக்கரசர்

  சுந்தரமூர்த்தி

  திருவாசகம்

திருப்பாட்டு பாடப் பெற்ற வரலாற்று வரிசை
7.001 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்  (திருவெண்ணெய்நல்லூர்)   பண் - இந்தளம்.   ( தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்த போது சுந்தரருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த ஈசன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த ஓலையை சுந்தரர் கிழித்தெறிந்தார். முதியவர் வழக்கை திருவெண்ணெய்நல்லூருக்கு எடுத்து சென்று வென்றார். அடிமை ஆன சுந்தரர் முதியவரின் வீட்டைக் காண்பிக்க சொல்ல, முதியவர் திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திற்கு கூட்டி சென்று மறைந்தார். முதியவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக எனப் பணித்தருளினார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை பித்தா பிறைசூடீ என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார்.
7.013 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மலை ஆர் அருவித்திரள் மா  (திருத்துறையூர் (திருத்தளூர்))   பண் - தக்கராகம்   ( துறையூரப்பர் பூங்கோதையம்மை)
நம்பியாரூரர் தம்மை வலிய ஆட்கொண்டருளிய அருட்டுறை இறைவரை இறைஞ்சித் தம்முடைய ஊராகிய திரு நாவலூரை அடைந்தார். அங்குக் கோயில் கொண்டருளிய பெரு மானைப் பணிந்து செந்தமிழ்ப் பாமாலை பாடிப் போற்றினார். பின்னர் அருகில் உள்ள திருத் துறையூரை அடைந்து பெருமான் திருமுன் நின்று மலை ஆர் அருவித்திரள் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி தவநெறி தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்து திருப்பதிகம் பாடினார். பெருமான் சுந்தரர் வேண்டியவாறே தவநெறி தந்தருளினார்.
7.038 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தம்மானை அறியாத சாதியார் உளரே?  (திருவதிகை வீரட்டானம்)   பண் - கொல்லிக்கௌவாணம்   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
திருவதிகை திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யப் பெற்ற தலம். ஆதலால் அதனை மிதித்துச் செல்ல விரும்பாது அருகில் இருந்த சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார். உடன் வந்த அடியார்களோடு அதிகை வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார். உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் வைத்தனையே என்று கேட்டார். நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை என்றார் அந்தணர். நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அம் முதியவர் நாவலூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். நாவலூரர் எழுந்து இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார் என்று சினந்து கேட்டார். உடனே முதியவர் என்னை நீ இன்னும் அறிந்திலையோ என்று கூறியவாறு மறைந்தருளினார். அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே என்று வருந்தித் தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.
7.064 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீறு தாங்கிய திரு நுதலானை,  (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி))   பண் - தக்கேசி   ( திருநந்தீசுவரர் இளங்கொம்பம்மை)
7.058 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை  (சீர்காழி)   பண் - தக்கேசி   ( பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
உமையம்மையளித்த திருமுலைப்பாலாகிய அமுதத்தை உண்டு உலகம் உய்யத் திருநெறிய தெய்வத் தமிழ் பாடியருளிய திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித் தருளிய இடமாதலால் அத்தலத்தைத் தம் பாதங்களால் மிதித்தல் கூடாதெனக் கருதிப் புற எல்லையை வணங்கி வலஞ்செய்தார் சுந்தரர். ஆரூரரின் அன்பின் திறமறிந்து மகிழ்ந்து காழிப்பெருமான் அம்மையப்பராக விடைமேல் தோன்றிக் காட்சி வழங்கினான். அவ்வருட்காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர் ``சாதலும் பிறத்தலும்`` என்னும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
7.073 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கரையும், கடலும், மலையும், காலையும்,  (திருவாரூர்)   பண் - காந்தாரம்   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
திருவாரூரில் கோயில்கொண்டருளிய இறைவர் ஆரூரில் வாழும் அடியார்கள் கனவில் தோன்றி ``நம் ஆரூரனாகிய வன் றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டழைத்து வருக`` எனக் கட்டளையிட்டார். தொண்டர்கள் பெருமான் கட்டளையை யாவர்க்கும் அறிவித்தார்கள். திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கலவாத்தியங் களுடன் சென்று வன்றொண்டரை எதிர்கொண்டழைத்தார்கள். நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டழைத்த அடியார் களைத் தொழுது, ``எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்`` என்ற கருத்துக்கொண்ட ``கரையும் கடலும்`` என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயில் அணுகினார்.
7.039 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தில்லை வாழ் அந்தணர் தம்  (திருவாரூர்)   பண் - கொல்லிக்கௌவாணம்   ( )
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
7.020 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீள நினைந்து அடியேன் உமை  (திருக்கோளிலி (திருக்குவளை))   பண் - நட்டராகம்   ( கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம் என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து நீளநினைந் தடியேன் என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும் என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
7.015 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பூண் நாண் ஆவது ஓர்  (திருநாட்டியத்தான்குடி)   பண் - தக்கராகம்   ( கரிநாதேசுவரர் மலர்மங்கையம்மை)
சுந்தரர் திருவாரூரில் இனிதுறையும் நாட்களில் சோழ மன்னனுடைய சேனைத்தலைவரும் திருக்கோயில் திருவமுதுக்கு வேண்டும் செந்நெல்லைச் சேகரித்தளிக்கும் திருத்தொண்டரும் வேளாளருமாகிய கோட்புலி நாயனார் தம் ஊராகிய திருநாட்டியத் தான்குடிக்கு எழுந்தருளுமாறு சுந்தரரை வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோட்கிசைந்த சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவமுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வனப்பகை யென்னும் பெண்கள் இருவரையும அழைத்து வணங்கச்செய்து, தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் இவர்கள் என் குழந்தைகள் என்று சொல்லி அன்போடு மடிமீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளிய சுந்தரர், திருநாட்டியத்தான்குடிக் கோயிலையடைந்து பூணாண் ஆவதோர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
7.067 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,  (திருவலிவலம்)   பண் - தக்கேசி   ( மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை)
7.034 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  (திருப்புகலூர்)   பண் - கொல்லி   ( அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது தம்மையே புகழ்ந்து எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
7.087 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்  (திருப்பனையூர்)   பண் - சீகாமரம்   ( சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி அருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர், மாட மாளிகை எனறு திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுதார்.
7.098 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தண் இயல் வெம்மையினான்; தலையில்  (திருநன்னிலத்துப்பெருங்கோயில்)   பண் - பஞ்சமம்   ( )
7.088 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்  (திருவீழிமிழலை)   பண் - சீகாமரம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
7.076 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொருவனார்; புரிநூலர்; புணர் முலை  (திருவாஞ்சியம்)   பண் - பியந்தைக்காந்தாரம்   ( சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி)
7.093 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீரும் மலரும் நிலவும் சடைமேல்  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))   பண் - குறிஞ்சி   ( சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
7.009 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)   பண் - இந்தளம்   ( படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை)
7.066 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மறையவன்(ன்) ஒரு மாணி வந்து  (திருவாவடுதுறை)   பண் - தக்கேசி   ( மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.060 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கழுதை குங்குமம் தான் சுமந்து  (திருவிடைமருதூர்)   பண் - தக்கேசி   ( மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
7.099 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பிறை அணி வாள் நுதலாள்  (திருநாகேச்சரம்)   பண் - பஞ்சமம்   ( செண்பகாரணியேசுவரர் குன்றமுலையம்மை)
7.016 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -குரும்பை முலை மலர்க் குழலி  (கலயநல்லூர் (சாக்கோட்டை))   பண் - தக்கராகம்   ( அமிர்தகலைநாதர் அமிர்தவல்லியம்மை)
7.094 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அழல் நீர் ஒழுகியனைய சடையும்,  (திருச்சோற்றுத்துறை)   பண் - கௌசிகம்   ( தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
7.024 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் ஆர் மேனியனே! புலித்தோலை  (திருமழபாடி)   பண் - நட்டராகம்   ( வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய சுந்தரர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, நன்னிலம், வீழிமிழலை, திருவாஞ்சியம் நறையூர்ச்சித்தீச்சரம், அரிசிற்கரைப்புத்தூர், ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலயநல்லூர், குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவாலம்பொழிலை அடைந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது, சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ என வினவி மறைந்தார். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து, திருமழபாடி சென்று, இறைவனை வணங்கிப் பொன்னார் மேனியனே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
7.075 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மறைகள் ஆயின நான்கும், மற்று  (திருவானைக்கா)   பண் - காந்தாரம்   ( சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
7.014 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வைத்தனன் தனக்கே, தலையும் என்  (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))   பண் - தக்கராகம்   ( மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)
பின்னர் காவிரியின் இருமருங்குமுள்ள தலங்களை வழிபட விரும்பித் திருவானைக்காவை யடைந்தார். இறைவனை வழிபட்டு, அங்கிருந்து திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்து தமக்குப் பொன்னைத் தந்தருள வேண்டுமென்னும் குறிப்புடன் பெருமானை வணங்கினார். இறைவன் பொன்னைத் தந்தருளாமையால் இறைவன் பால் மனப்புழுக்கம் கொண்டு, வைத்தனன் தனக்கே என்று தொடங்கிப் பதிகம் பாடி, இவரலாதில்லையோ பிரானார் என இகழ்ந்து கூறிப் பின் அதனையே பொறுத்தருளவேண்டுமென்று திருக்கடைக் காப்பும் அருளிச்செய்தார்.
7.036 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கார் உலாவிய நஞ்சை உண்டு  (திருப்பைஞ்ஞீலி)   பண் - கொல்லி   ( மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
7.048 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மற்றுப் பற்று எனக்கு இன்றி,  (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம்)   பண் - பழம்பஞ்சுரம்   ( கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை)
இறைவர் சுந்தரர் வேண்டியவாறே பெரும் பொருட்குவியலை வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர், அத்தலத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞ்லி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்குநாட்டை அடைந்தார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள கறையூர்த்திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி மற்றுப்பற்றெனக்கின்றி யென்னும் நமச்சிவாயத் திருப்பதிகம்பாடிப் போற்றினார்.
7.042 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எறிக்கும் கதிர் வேய் உரி  (திருவெஞ்சமாக்கூடல்)   பண் - கொல்லிக்கௌவாணம்   ( விகிர்தேசுவரர் விகிர்தேசுவரி)
7.027 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -விடை ஆரும் கொடியாய்! வெறி  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))   பண் - நட்டராகம்   ( உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை)
7.035 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி  (திருப்புறம்பயம்)   பண் - கொல்லி   ( சாட்சிவரதேசுவரர் கரும்படுசொல்லம்மை)
7.085 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வடிவு உடை மழு ஏந்தி,  (திருக்கூடலையாற்றூர்)   பண் - புறநீர்மை   ( நெறிகாட்டுநாயகர் புரிகுழலாளம்மை)
பின்பு காஞ்சிவாய்ப் பேரூரை அடைந்து திருக்கோயில் சென்று வழிபட்டார். அங்குப் பெருமான், தில்லை மன்றுள் நின்றாடும் தமது திருக்கோலத்தோடு காட்சி வழங்கியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், தில்லையம்பலவன் திருக் கூத்தைக் கும்பிடப்பெற்றால் புறம்போய் எய்துதற்கு யாதுளது என்று எண்ணிப் பேரூரினின்றும் புறப்பட்டுத் தில்லையை நோக்கிச் செல்வராயினார். வெஞ்சமாக்கூடல், கற்குடி, ஆறை மேற்றளி, இன்னம்பர், புறம்பயம் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டே நடுநாட்டுக் கூடலையாற்றுரை அணுகியவர், அங்கு செல்லாமல் திருமுதுகுன்றை நோக்கிச் சென்றார். அப்பொழுது கூடலையாற்றுார் இறைவன், மறையவர் வடிவம் தாங்கி வழிப் போக்கராய் வன்றொண்டரை அணுகினார். சுந்தரர் மறையவரைப் பணிந்து திருமுதுகுன்றத்திற்குச் செல்லும் வழியை வினவினார். மறையவர், கூடலையாற்றுரை அடையச் சென்றது இவ்வழி எனக் கூறித் துணையாய்த் தாமும் ஊர் எல்லையளவும் உடன் சென்று மறைந்தருளினார். உடன் வந்த அந்தணரைக் காணாத சுந்தரர், மறையவர் உருவில் வந்தவர் பெருமானே யென்பதறிந்து திருக்கோயிலை யடைந்து வடிவுடை மழுவேந்தி யென்று தொடங்கி, வழித்துணையாய் வந்த பெருமானை வணங்கிப் போற்றித் திருமுதுகுன்றத்தை அடைந்தார்.
7.043 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நஞ்சி, இடை இன்று நாளை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   பண் - கொல்லிக்கௌவாணம்   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.063 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மெய்யை முற்றப் பொடிப் பூசி  (பொது -திருமுதுகுன்றம்)   பண் - தக்கேசி   ( )
7.090 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,  (கோயில் (சிதம்பரம்))   பண் - குறிஞ்சி   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
திருமுதுகுன்றத்தில் வழங்கிய பொன்னை, திருவாரூரில் தரும் படி வேண்டிக் கொண்டார். அப்பொழுது இப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. மாற்றறிதற்கு மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு, அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன் என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார். தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கிக் கோயிலினுட் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தவராய் மடித்தாடும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
7.030 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))   பண் - நட்டராகம்   ( குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை)
7.022 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முன்னவன், எங்கள் பிரான், முதல்  (திருப்பழமண்ணிப்படிக்கரை)   பண் - நட்டராகம்   ( நீலகண்டேசுவரர் வடிக்கண்ணமுதகரநாயகியம்மை)
7.057 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை  (திருவாழ்கொளிபுத்தூர்)   பண் - தக்கேசி   ( மாணிக்கவண்ணர் வண்டமர்பூங்குழலம்மை)
7.040 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வள் வாய மதி மிளிரும்  (திருக்கானாட்டுமுள்ளூர்)   பண் - கொல்லிக்கௌவாணம்   ( பதஞ்சலியீசுவரர் கானார்குழலம்மை)
7.007 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மத்தயானை ஏறி, மன்னர் சூழ  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))   பண் - இந்தளம்   ( அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை)
7.018 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)   பண் - நட்டராகம்   ( )
7.025 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   பண் - நட்டராகம்   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது.
7.033 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?  (திருவாரூர்)   பண் - கொல்லி   ( )
பொன்னை எடுத்த சுந்தரர் அதனையும் தாம் முன்னே மாற்றறிதற்கு வெட்டி வைத்த மச்சத்தையும் உரையிட்டுப்பார்த்தார். எடுத்தபொன் உரையில் தாழ்ந்துகாணப்பட்டது. அதைக்கண்ட சுந்தரர் மீண்டும் திருப்பதிகம்பாடி மாற்றுயரப்பெற்றார்.
7.068 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செம்பொன் மேனி வெண் நீறு  (திருநள்ளாறு)   பண் - தக்கேசி   ( தெர்ப்பாரணியயீசுவரர் போகமார்த்தபூண்முலையம்மை)
7.053 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மரு ஆர் கொன்றை மதி  (திருக்கடவூர் மயானம்)   பண் - பழம்பஞ்சுரம்   ( பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
7.028 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொடி ஆர் மேனியனே! புரி  (திருக்கடவூர் வீரட்டம்)   பண் - நட்டராகம்   ( அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
7.072 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எனக்கு இனித் தினைத்தனைப் புகல்  (திருவலம்புரம்)   பண் - காந்தாரம்   ( வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
7.006 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -படம் கொள் நாகம் சென்னி  (திருவெண்காடு)   பண் - இந்தளம்   ( சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
7.097 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்  (திருநனிப்பள்ளி)   பண் - பஞ்சமம்   ( நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
7.065 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திருவும், வண்மையும், திண் திறல்  (திருநின்றியூர்)   பண் - தக்கேசி   ( இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
7.019 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை  (திருநின்றியூர்)   பண் - நட்டராகம்   ( மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.056 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊர்வது ஓர் விடை ஒன்று  (திருநீடூர்)   பண் - தக்கேசி   ( சோமநாதேசுவரர் வேயுறுதோளியம்மை)
7.062 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -புற்றில் வாள் அரவு ஆர்த்த  (திருக்கோலக்கா)   பண் - தக்கேசி   ( சத்தபுரீசுவரர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
7.029 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;  (திருக்குருகாவூர் வெள்ளடை)   பண் - நட்டராகம்   ( வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
பின்பு சீகாழிப் பதியைப் புறத்தே வலம் வந்து வணங்கித் திருஞானசம்பந்தர் திருவடிகளைப் போற்றிப் பரவிக் குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கிச் செல்வராயினார். வழியிடையே வன்றொண்டர் பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்தினார். அதனை உணர்ந்த இறைவன், மறையவர் வடிவில் தண்ணிரும் பொதிசோறும் கொண்டுவந்து வேனில் வெம்மை நீங்க நிழல் தரும் பந்தரையும் உண்டாக்கி நம்பியாரூரரின் வருகையை எதிர்பார்த்திருந்தார். சுந்தரர் அடியார் கூட்டத்துடன் அங்கு வந்து திருவைந்தெழுத்தோதி அமர்ந்தார். மறையவர் சுந்தரரை நோக்கி, நீர்மிகவும் பசியுடையவராகக் காணப்படுகின்றீர், யாம் கொண்டு வந்த இப்பொதி சோற்றை உண்டு இளைப்பாறுவீராக எனக் கூறி, சுந்தரரும் அடியார்களுடன் தாமும் உண்டு உணவளித்துபசரித்த மறையவரைப் பாராட்டி, அடியார்களுடன் இளைப்பாறித் துயில்கொண்டார். மறையவராய் வந்த இறைவன் பந்தருடன் மறைந்தார். துயிலுணர்ந் தெழுந்த சுந்தரர் மறையவரைக் காணாது அதிசயித்து, இவ்வாறருள் புரிந்தவர் குருகாவூர் இறைவனேயெனத் தெளிந்து இத்தனையா மாற்றை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டே திருக்கோயில் சென்று உணவளித்து உண்வித்த பெருமானைப் போற்றினார்.
7.023 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,  (திருக்கழிப்பாலை)   பண் - நட்டராகம்   ( பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
7.017 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கோவலன் நான்முகன் வானவர் கோனும்  (திருநாவலூர் (திருநாமநல்லூர்))   பண் - நட்டராகம்   ( நாவலீசுவரர் சுந்தராம்பிகை)
7.031 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்  (திருவிடையாறு)   பண் - கொல்லி   ( )
7.081 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கொன்று செய்த கொடுமையால் பல,  (திருக்கழுக்குன்றம்)   பண் - நட்டபாடை   ( வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
7.041 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முது வாய் ஓரி கதற,  (திருக்கச்சூர் ஆலக்கோயில்)   பண் - கொல்லிக்கௌவாணம்   ( தினம்விருந்திட்டநாதர் கன்னியுமையம்மை)
தொண்டைநாட்டுத் தலங்களை வழிபட விரும்பிய சுந்தரர், திருநாவலூரினின்றும் புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்து வணங்கித் திருக்கச்சூர் ஆலக்கோயிலைப் பணிந்து போற்றிக் கோயிற் புறத்தே வந்தார். அப்பொழுது வெயில் வெம்மை மிக்க நண்பகற் பொழுதாகியும் அவருக்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லை. அடியார் பசித்திருக்கப் பொறாத இறைவன், மறையவர் வடிவுடன் வந்து, வன்றொண்டரை நோக்கி, நீர் பசியால் மிகவும் வாட்டமடைந்துள்ளீர். யான் சிறிது நேரத்தில் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவு கொண்டுவருமளவும் இங்கேயே இருப்பீராக என்று கூறிச்சென்று, அருகில் உள்ள வீடுகளில் கறியும் சோறும் இரந்து பெற்று வந்து, நம்பியாரூரர்க்கு வழங்கி, இதனை உண்டு பசிதீரும் என்று உபசரித்தார். சுந்தரர், அந்தணர் தந்த அமுதை அடியார்களோடு உண்டு மகிழ்ந்தார். மறையவர் விரைவில் மறைந்தார். அந்நிலையில் வன்றொண்டர் தமக்கு உணவு இரந்து பெற்று உண்பித்தவர் இறைவனே யெனத் துணிந்து, இறைவன் பெருங்கருணையை வியந்து ஆலக்கோயில் பெருமானை, முதுவாயோரி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
7.021 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;  (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))   பண் - நட்டராகம்   ( திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)
7.005 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நெய்யும் பாலும் தயிரும் கொண்டு  (திருஓணகாந்தன்தளி)   பண் - இந்தளம்   ( ஓணகாந்தீசுவரர் காமாட்சியம்மை)
கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து, திரு வேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார். தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத் தங்கினார். காஞ்சியில் காமகோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கி நெய்யும் பாலும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார்.
7.010 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தேன் நெய் புரிந்து உழல்  (திருக்கச்சிஅனேகதங்காவதம்)   பண் - இந்தளம்   ( காவதேசுவரர் காமாட்சியம்மை)
7.086 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -விடையின் மேல் வருவானை; வேதத்தின்  (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்))   பண் - சீகாமரம்   ( பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)
7.026 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செண்டு ஆடும் விடையாய்! சிவனே!  (திருக்காளத்தி)   பண் - நட்டராகம்   ( காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)
7.079 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மானும், மரை இனமும், மயில்  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))   பண் - நட்டபாடை   ( பருவதநாதர் பருவதநாயகியம்மை)
7.078 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வாழ்வு ஆவது மாயம்(ம்); இது  (திருக்கேதாரம்)   பண் - நட்டபாடை   ( கேதாரேசுவரர் கேதாரேசுவரியம்மை)
7.091 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பாட்டும் பாடிப் பரவித் திரிவார்  (திருவொற்றியூர்)   பண் - குறிஞ்சி   ( படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.051 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்  (திருவாரூர்)   பண் - பழம்பஞ்சுரம்   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
வன்றொண்டர் சங்கிலியாரோடு மகிழ்ந்துறையும் அந்நாளில் தென்றற் காற்றுத் திருவொற்றியூரில் வந்து உலாவிற்று. தென்றல் வீசக் கண்டதும் திருவாரூரில் தியாகேசப் பெருமான் வசந்த காலத்து எழுந்தருளிவரும் காட்சியும் அக்காட்சியைக் கண்டு பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதும் சுந்தரர் தம் எண்ணத்திரையில் உலா வந்தன. புற்றிடங் கொண்டாரையும் தம்மை விரும்பும் அடியார்களையும் மறந்திருந்தேனே என்று மனமயங்கி, ஆரூர்ப்பெருமானை எண்ணிப் பிரிவாற்றாமையினால், பத்திமையும் அடிமையையும் என்று திருப்பதிகம் தொடங்கி, எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனை என்ற குறிப்புடன் பதிகம் பாடினார்.
7.054 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அழுக்கு மெய் கொடு உன்  (திருவொற்றியூர்)   பண் - தக்கேசி   ( படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
ஒரு நாள் திருவாரூரை மிக நினைந்து, ஒற்றியூர்ப் பெருமானை வணங்கிக்கொண்டு, ஒற்றியூரைக் கடந்து அடிபெயர்த்து வைத்தார். சங்கிலியார்க்குச் செய்த சபதம் பிழைத்த காரணத்தால், சுந்தரர்க்குக் கண்ணொளி மறைந்தது. சத்தியம் பிழைத்த காரணத்தான் இது நிகழ்ந்த தென்றெண்ணி ஒற்றியூர்ப் பெருமானை நினைந்து, அழுக்கு மெய்கொடு என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் தொழுதார்.
7.069 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்,  (வடதிருமுல்லைவாயில்)   பண் - தக்கேசி   ( மாசிலாமணியீசுவரர் கொடியிடைநாயகியம்மை)
7.089 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பிழை உளன பொறுத்திடுவர் என்று  (திருவெண்பாக்கம் (பூண்டி))   பண் - சீகாமரம்   ( வெண்பாக்கத்தீசுவரர் கனிவாய்மொழியம்மை)
திருவாரூர் செல்லும் உறுதியோடு நடந்தார். உடன் வருவோர் வழி காட்ட, வடதிருமுல்லைவாயிலைத் தொழுது அங்குத் திருப்பதிகம் பாடிப் பரவி, திருவெண்பாக்கம் என்ற ஊரினை அடைந்தார். தொண்டர்கள் எதிர்கொள்ளச் சென்று திருவெண்பாக்கத் திறைவரை வழிபட்டுத், தேவரீர் மகிழும் இத்திருக்கோயிலினுள் இருக்கின்றீரோ என்று விண்ணப்பம் செய்ய, பெருமானும் ஊன்று கோல் ஒன்று கொடுத்து, உளோம் போகீர் என்று கூறியருளினார். நம்பிகளும், பிழையுளன பொறுத்திடுவர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
7.052 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முத்தா! முத்தி தர வல்ல  (திருவாலங்காடு (பழையனூர்))   பண் - பழம்பஞ்சுரம்   ( ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
7.061 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஆலம் தான் உகந்து அமுது  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - தக்கேசி   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
வன்றொண்டர், திருக்கச்சிக் காமக்கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஎகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி, தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் ஆலந்தானுகந்து என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக்கூத்தாடினார்.
7.083 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,  (திருவாரூர்)   பண் - புறநீர்மை   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.045 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்  (திருஆமாத்தூர்)   பண் - கொல்லிக்கௌவாணம்   ( அழகியநாதர் அழகியநாயகியம்மை)
7.003 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கல்வாய் அகிலும் கதிர் மா  (திருநெல்வாயில் அரத்துறை)   பண் - இந்தளம்   ( அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
7.070 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!  (திருவாவடுதுறை)   பண் - தக்கேசி   ( மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.074 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மின்னும் மா மேகங்கள் பொழிந்து  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)   பண் - காந்தாரம்   ( )
திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு, அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித்தருளவேண்டுமென்று வேண்டித் துதித்தார். சிவபிரான், இக் கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும் என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார் நீராடி எழும்போது, உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக்கோயிலுக்குச் சென்று. மின்னுமா மேகங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
7.096 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தூ வாயா! தொண்டு செய்வார்  (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி)   பண் - பஞ்சமம்   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.037 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -குருகு பாய, கொழுங் கரும்புகள்  (திருவாரூர்)   பண் - கொல்லி   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.095 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மீளா அடிமை உமக்கே ஆள்  (திருவாரூர்)   பண் - செந்துருத்தி   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
7.012 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த  (திருவாரூர்)   பண் - இந்தளம்   ( )
7.047 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!  (திருவாரூர்)   பண் - பழம்பஞ்சுரம்   ( )
7.055 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,  (திருப்புன்கூர்)   பண் - தக்கேசி   ( சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாட மழை பெய்தது. கூறியபடி மன்னனும் பன்னிரண்டு வேலி நிலத்தை ஆலயத்துக்கு அளித்தான். ஆனால், பெய்த மழை பெய்ததுதான். நில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. இடைவெளிவிட்டுக்கூட நிற்கவில்லை. பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த மேலும் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்துக்கு அளித்தால், பதிகம் பாடி மழையை நிறுத்தலாம் என்று மன்னனிடம் கூற….மன்னனும் ஒப்புக் கொள்ள… பதிகம் பாடி மழை நிற்க, அடுத்து பன்னிரண்டு வேலி நிலத்தை மன்னனிடமிருந்து பெறப்பட்டு இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார் சுந்தரர். இந்த வரலாற்றை சுந்தரர் அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த என்று தொடங்கும் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே
7.046 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பத்து ஊர் புக்கு, இரந்து,  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   பண் - கொல்லிக்கௌவாணம்   ( காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
7.101 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் ஆம் இதழி விரை  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   பண் -   ( )
7.071 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -யாழைப் பழித் தன்ன மொழி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பண் - காந்தாரம்   ( மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
7.032 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கடிது ஆய்க் கடல் காற்று  (திருக்கோடிக்குழகர்)   பண் - கொல்லி   ( அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை)
7.011 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திரு உடையார், திருமால் அயனாலும்  (திருப்பூவணம்)   பண் - இந்தளம்   ( பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
7.002 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;  (திருப்பரங்குன்றம்)   பண் - இந்தளம்   ( பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)
நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார். திரு மறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களைப் பணிந்து பாண்டிநாடடைந்து திருப்புத்தூரை வழிபட்டு மதுரையை அடைந்தார்கள். அப்பொழுது பாண்டியனும், பாண்டியன் மகளை மணம் புரிந்து வேட்டகத்திலிருந்த சோழனும் சுந்தரரையும் சேரமான் பெரு மாளையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சுந்தரர் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சேரமான் தமக்குத் திருமுகமனுப்பிய ஆலவாயண்ணலை வழிபட்டார். பாண்டியன் இவ்விருவரையும் தம் அரண்மனைக்கு அழைத்து உபசரித்தான். இருவரும் சிலநாள் தங்கி ஆலவாயண்ணலை வழிபட்டினி துறைந்தனர். சுந்தரர் மூவேந்தருடன் திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம் முதலிய தலங்களையிறைஞ்சித் திருப்பரங்குன்றத்தை யடைந்து திருப்பதிகம் பாடிப் பரவினார்.
7.080 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நத்தார் புடை ஞானன்; பசு  (திருக்கேதீச்சரம்)   பண் - நட்டபாடை   ( கேதீசுவரர் கௌரியம்மை)
7.082 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊன் ஆய், உயிர் புகல்  (திருச்சுழியல் (திருச்சுழி))   பண் - நட்டபாடை   ( இணைத்திருமேனிநாதர் துணைமாலைநாயகியம்மை)
7.084 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,  (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்))   பண் - புறநீர்மை   ( காளைநாதேசுவரர் பொற்கொடியம்மை)
7.050 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சித்தம்! நீ நினை! என்னொடு  (திருப்புனவாயில்)   பண் - பழம்பஞ்சுரம்   ( பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
7.008 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு  (திருவாரூர்)   பண் - இந்தளம்   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.077 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பரவும் பரிசு ஒன்று அறியேன்  (திருவையாறு)   பண் - காந்தாரபஞ்சமம்   ( செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
பலநாட்களுக்குப் பின் சேரமான் பெருமாள் தம் தோழராகிய சுந்தரரைத் தன்னுடைய நாட்டிற்கு எழுந்தருளவேண்டுமென வேண்டிக்கொண்டார். அதற்கிசைந்த சுந்தரர் ஆரூர்ப் பெருமானைப் பணிந்து சேரர்கோனுடன் காவிரியின் தென்கரை வழியே திருக்கண்டி யூரை அடைந்தார். ஐயாறு எதிரே தோன்றிற்று. காவிரியாற்றிலோ வெள்ளம் கரை புரண்டோடிற்று. ஆற்றைக் கடந்து ஐயாறு சென்று தொழ நினைந்த சுந்தரர் பரவும் பரி சொன்றறியேன் என்று தொடங்கிப் பதிகம்பாடி ஐயாற்றிறைவனை அழைத்து நின்றார். வெள்ளம் இரு புறமும் ஒதுங்கி நின்று நடுவே வழிகாட்டிற்று. சுந்தரர் சேரர்கோனு டனும் அடியார்களுடனும் ஆற்றைக் கடந்து சென்று வழிபட்டனர். பின்னர் இருபெருமக்களும் பல தலங்களை வணங்கிக் கொண்டு கொங்குநாட்டைக் கடந்து சேர நாடடைந்தனர்.
7.044 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது  (திருஅஞ்சைக்களம்)   பண் - கொல்லிக்கௌவாணம்   ( )
7.059 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்  (திருவாரூர்)   பண் - தக்கேசி   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.049 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,  (திருமுருகன்பூண்டி)   பண் - பழம்பஞ்சுரம்   ( ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை)
சுந்தரர் வழி பலவும் கடந்து கொங்குநாட்டுத் திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் பூதகணங்களை வேடு வராகச் சென்று, வழிப்பறி செய்து வருமாறு பணித்தருள, அவ் வண்ணமே பூதகணங்கள் வேடர்களாய்ச் சென்று அச்சுறுத்திப் பொருள்களைப் பறித்துக்கொணர்ந்தன. இதையறிந்த சுந்தரர் திரு முருகன்பூண்டித் திருக்கோயிலிறைவரை யணுகி, எற்றுக்கு இங்கிருந் தீர் என்ற மகுடத்தோடு பதிகம் பாடிப் பரவினார். கொள்ளையிடப் பெற்ற பொருள்களை வேடுவர்கள் மீளக் கொண்டுவந்து முன்றிலிற் குவித்தனர். அவற்றை முன்போற் பொதி செய்து எடுத்துச் செல்லுமாறு ஏவலர்க்குக் கூறிவிட்டுக் கொங்குநாட்டைக் கடந்து திருவாரூரை அடைந்தார். பரவையார் மாளிகையில் இனிது எழுந்தருளியிருந்தார்.
7.092 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?  (திருப்புக்கொளியூர் (அவிநாசி))   பண் - குறிஞ்சி   ( அவிநாசியப்பர் பெருங்கருணைநாயகி)
திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து, கொங்குநாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார். அதுகேட்ட வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினர். ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப்பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. இவர்கள் வீட்டில் எழும் மங்கல ஒலி முதலை வாயில் அகப்பட்டிறந்த சிறுவனுடைய பெற்றோர்க்கு, புதல்வனை நினைப்பித்தமையால் அவர்கள் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்ட சுந்தரர் வேதனைகொண்டார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரர் வருகையை அறிந்து முகமலர்ச்சியோடு வரவேற்றனர். இவர்கள் புதல்வனை முதலைவாயினின்று அழைத்துத் தந்த பின்னரே அவிநாசிப் பெரு மானை வழிபடவேண்டுமென்று உறுதிகொண்டார். அம் மடு இருக்கு மிடத்தைக் கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டுவந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி, எற்றான் மறக்கேன் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார். உரைப்பார் உரை என்னும் நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றுள் புதல்வன் உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சி யுடையதாகச் செய்து புகுத்தினன். முதலை கரையிலே வந்து தான் முன் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவியெடுத்தாள். தாயும் தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினர். இந் நிகழ்ச்சியைக் கண்டோர் அனைவரும் திரு வருள் திறத்தை வியந்தனர். சுந்தரர் சிறுவனை அவிநாசித் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவரைத் தொழுது வேதியர் வீட்டிற்கு வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உபநயனம் செய்வித் தருளினார்
7.004 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தலைக்குத் தலை மாலை அணிந்தது  (திருஅஞ்சைக்களம்)   பண் - இந்தளம்   ( அஞ்சைக்களத்தீசுவரர் உமையம்மை)
ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்து இறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிலமிசை வீழ்ந்து அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும் என்னும் குறிப்புடன் தலைக்குத் தலைமாலை என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினர்.
7.100 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தான் எனை முன் படைத்தான்;  (திருக்கயிலாயம்)   பண் - பஞ்சமம்   ( )
பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார். சிவபிரானினருளாணை மேற்கொண்டு வெள்ளையானை யுடன் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயில்வாயிலை அடைந்தனர் தேவர்கள். இறைவனை வழிபட்டுக் கோயில் வாயிலை யடைந்த சுந்தரரை வணங்கி நின்று தேவர்கள் திருக்கயிலைமலைக்கு வருமாறு இறைவனருளிய கட்டளையைத் தெரிவித்தனர். தேவர் கள் சுந்தரரை வலம்வந்து அவரை வெள்ளையானை மேலேற்றினர். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார். சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. சுந்தரர், தானெனை முன் படைத்தான் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தவாறு திருக்கயிலையை அடைந்து தென்திசை வாயிலை அணுகினார். சேரர்கோனும் சுந்தரரும் தத்தம் ஊர்தி களினின்று கீழிறங்கிப் பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரர்கோன் உள்ளே செல்ல அனுமதியின்றித் தடைப்பட்டு நின்றார். சுந்தரர், உள்ளே சென்று அம்மையப்பராய பெருமான் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்று, சேரமான் பெருமாள் வருகையை விண்ணப்பித்தார். சிவபிரான் மகிழ்ந்து சேரமானை வரவிடுக என நந்திதேவர்க்குப் பணித்தார். அவரும் இறைவனருளிப்பாட்டைக் கூறிச் சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து வந்தார். உள்ளேவந்த சேரர்கோன் சிவபிரானை வீழ்ந்திறைஞ்சி நின்றார். பெருமான் சேரர்கோனை நீ இங்கு நாம் அழையாமை வந்ததேன் என வினவினார். அதுகேட்ட சேரவேந்தர் அடியேன் ஆரூரர் கழல்போற்றி அவரைச் சேவித்து வந்தேன். திரு வருள்வெள்ளம் இங்கு என்னை ஈர்த்து நிறுத்தியது. அடியேன் பாடிய திருக்கயிலாய ஞான உலா என்ற நூலைச் செவிமடுத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். திருக்கயிலாய ஞான உலா எடுத்துரைத்து அரங்கேற் றினார். பெருமான் அவரை நோக்கிச் சேரனே நீ நம்பியாரூரராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக எனத் திருவருள் பாலித்தார். சுந்தரர், வெள்ளையானையிலமர்ந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றபொழுது பாடிய தானெனைமுன் படைத்தான் என்ற திருப்பதிகத்தை, வருணனிடத்துக் கொடுத்தருள அவன் அத் திருப்பதிகத்தினைத் திருவஞ்சைக் களத்தில் கொண்டுவந்து சேர்ப் பித்தான்.

This page was last modified on Sat, 11 May 2024 01:36:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai historical order