சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AZ_kpWQFf_Q
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=61iq2NzFuUI
4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.054   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[1]
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக்
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்;
ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம்
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

[2]
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,
அப்பர் போல் ஐவர் வந்து(வ்), அது தருக, இது விடு! என்று(வ்)
ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்-
செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே!

[3]
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி,
நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும்
அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும்
செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[4]
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி,
களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[5]
இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[6]
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்;
வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்-
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!

[7]
நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி,
ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்),
ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற,
தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே.

[8]
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால;
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

[9]
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.056   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[1]
மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்;
குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்;
கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[2]
உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்;
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்;
கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[3]
மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்;
எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்;
தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[4]
பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்;
கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்;
வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே.

[5]
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்;
துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்;
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[6]
விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்;
படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

[7]
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த;
நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப;
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே.

[8]
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும்,
தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்,
தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்;
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே.

[9]
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.058   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[1]
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[2]
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[3]
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[4]
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.

[5]
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.

[6]
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.

[7]
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.

[8]
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.

[9]
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list