சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.135   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு சேர்வது ஒர் மேனியர்,
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nkTMgUi7HWk
5.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=YohZYGl7318

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.135   நீறு சேர்வது ஒர் மேனியர்,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருப்பராய்துறை ; (திருத்தலம் அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி )
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

[1]
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,
வந்த பூம்புனல், வைத்தவர்
பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தம் இல்ல அடிகளே.

[2]
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்;
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை
ஆதி ஆய அடிகளே.

[3]
தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை,
ஆல நீழல் அடிகளே.

[4]
விரவி நீறு மெய் பூசுவர், மேனிமேல்;
இரவில் நின்று எரி ஆடுவர்;
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.

[5]
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

[6]
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்;
சடையில் கங்கை தரித்தவர்;
படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

[7]
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார், விரல் ஒன்றினால்;
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை, அடிகளே.

[8]
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த்
தோற்றமும் அறியாதவர்;
பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.

[9]
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,
உரு இலா உரை கொள்ளேலும்!
பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை
மருவினான் தனை வாழ்த்துமே!

[10]
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.030   கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருப்பராய்துறை ; (திருத்தலம் அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி )
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;-
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.

[1]
மூடினார், களியானையின் ஈர் உரி;
பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்;
சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.

[2]
பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்;
நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்;
சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்;
இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.

[3]
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர்,
என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்-
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்;
அன்பராய் இருப்பாரை அறிவரே.

[4]
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!

[5]
நல்ல நால்மறை ஓதிய நம்பனை,
பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை,
தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை,
வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!

[6]
நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை;
பருப்பதம் மதயானை உரித்தவன்,
திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.

[7]
எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்,
விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.

[8]
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி;
திருப் பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே.

[9]
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.

[10]
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!
பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list