சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.260   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்


Add audio link Add Audio
பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.

1


மலர்ந்த தாமரைப் பொகுட்டின் மேல் கயல் மீன்கள் துள்ளவும், விளைந்து முதிர்ந்த நெற்பயிர்களாலாகிய வயல்கள் சூழ்ந்ததும் ஆன, காவிரி நதிபாயும் சோழ நாட்டில், மங்கலம் பொருந்திய மறையவர்களுக்கு இடமாகிய முதன்மையுடைய ஊர் திருச்சாத்தமங்கையாகும். இது உலகமெல்லாம் புகழ்கின்ற தகுதி யுடையதாகும்.
*** பொகுட்டு:- கொட்டை. காடு - வயல். செந்நெல் விளைந்து மண்டிக் கிடப்பதால் காடு என்றார். திருச்சாத்தமங்கை, திருப்புகலூருக்கு அண்மையில் உள்ள ஊராகும். இப்பாடலில் 'மறையவர் முதற் பதி' என்று கூறியவர், பின்வரும் பாடல்களில் அவர்தம் வேள்விச் சிறப்பைக் கூறுவது, ஞானசம்பந்தர் இத்திருப்பதி பற்றிக் கூறியுள்ள திருவாக்கினை அடித்தளமாகக் கொண்டதாகும்.

நன்மை சாலும்அப் பதியிடை
நறுநுதல் மடவார்
மென்ம லர்த்தடம் படியமற்
றவருடன் விரவி
அன்னம் முன்துறை ஆடுவ
பாடுவ சாமம்
பன்ம றைக்கிடை யுடன்பயிற்
றுவபல பூவை.

2


நலங்கள் பலவும் பொருந்திய அப்பதியின் மணம் பொருந்திய நெற்றியினையுடைய பெண்கள், மென்மையான மலர் களையுடைய குளங்களில் நீராட, அவர்களுடன் அந்நீர் நிலையின் முன் துறையில் அன்னப் பறவைகளும் தோய்ந்து நீராடுவன. மறை யோதும் சிறுவர்களின் இருக்கையில் சாம வேதத்தைப் பாடிக் கொண் டிருக்கும் பல நாகண வாய்ப்பறவைகள், அச்சிறுவர்களின் பிழைகளை நீக்கி மறைகளைக் கற்கும்படி செய்வன.

குறிப்புரை: கிடை - மறையோதும் சிறுவர்கள் தங்கி இருக்கும் இருப்பு. பயிற்றுவ - கற்றுக் கொடுப்பன. எனவே, மறைபயிலும் சிறு வர்களுக்கு அவர்களின் ஆசிரியன்மார்களன்றி, அங்குள்ள நாகண வாய்ப் பறவைகளும் கற்றுக் கொடுக்கின்றன என்பதாம். 'பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே' (தி. 1 ப. 132 பா. 1) 'பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழைகேட்டலாற், கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே' (தி. 2 ப. 113 பா. 5) எனவரும் திருமறை வாக்குகளும் ஈண்டு நினைவு கூரத்தக்கன.

ஆய்ந்த மெய்ப்பொருள் நீறென
வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார்
இருபிறப் பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின்
வளர்க்கும்அத் தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென
வளர்ப்பர்கண் மடவார்.

3


ஆராய்ந்து தெளிந்த உண்மைப் பொருளாவது திருநீறே என்று எண்ணி, வளர்த்து வருகின்ற அக்காப்போடு, பொருந்திய முத்தீயை அங்குள்ள இரு பிறப்பாளர்கள் வளர்த்து வருவர், பிறவிப் பெருங் கடலினின்றும் நீந்தத் துணை நிற்கும் நல்ல அறங்களைப் போல, வளர்ந்து வரும் அத்தீயினை, தமக்கென அமைந்த கற்புத் தீயையும் கூட்டி அங்குள்ள பெண்கள் தீ நான்கென வளர்ப்பர்.

குறிப்புரை: திருநீற்று நெறியைக் காத்து வருவதோடு தமக்குரிய முத்தீயையும் மறையவர் காத்து வருவர். அம்முத் தீயோடு கற்புத் தீயையும் கூட்டி நான்கென வளர்த்து வருவர் அவர் மனைவியர் என்பது கருத்து. மூன்று தீ - ஆகவனீயம், தட்சிணாக்கினியம், காருக பத்தியம் என்பன. கற்பைத் தீ என்றல் மரபு. கண்ணகியின் கற்புத் தீயால் மதுரையும், சீதையின் கற்புத் தீயால் இலங்கையும் அழிந்தமை காண லாம். ''சானகி எனும் பெயர் உலகீன்ற அம்மனை, ஆனவள் கற்பி னால் வெந்ததல்லது ஒரு வானரம் சுட்டது என்றுணர்தல் மாட்சியோ'' 'கற்பினால் சுடுவன்' (கம்ப. யுத்த. மந்திரப். 74-2) என்பனவாகிய கம் பர் வாக்குகள் நினைவு கூர்தற்குரியன. 'தற்காத்து' (குறள்,56) எனத் தொடங்கும் திருக்குறளில் 'தற்காத்து' எனவரும் தொடருக்கு, கற்பினால் தன்னைக் காத்து எனப் பரிமேலழகர் உரைப்பதும் காண்க.

சீலம் உய்த்தவத் திருமறை
யோர்செழு மூதூர்
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள்
விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்தகண் டத்தவர்
தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர்
நிகழ்ந்துளார் ஆனார்.

4


சிறந்த நல்லொழுக்கத்தில் தலைநின்று ஒழுகும் மறையவர்கள் வாழும் செழுமையான அப்பழைய ஊரில், இந் நிலவுலகத்தில் சிறந்த நான்மறைப் பொருளைத் தம் ஒழுக்கத்தால் விளக்கிய நன்மை உடையவர். நஞ்சைக் கழுத்தில் வைத்த சிவபெரு மானுக்குத் தொண்டு செய்து வரும் அன்புடையவர்; அவர் நீலநக்கர் என அழைக்கப்படுபவர். அவர் உலகம் புகழச் சிறந்து வாழ்பவர்.

குறிப்புரை: சீலம் - நல்லொழுக்கம். அது கொண்டு, மறைப்பொ ருளை விளக்குவதாவது, அதற்குத் தகநிற்கும் தம் தகைமையாம்.

வேத உள்ளுறை யாவன
விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி
யாரையும் நயந்து
பாத அர்ச்சனை புரிவதும்
பணிவதும் என்றே
காத லால்அவை இரண்டுமே
செய்கருத் துடையார்.

5


அவர், நான்மறைகளின் உட்பொருளாக இருப் பவை, கங்கை தாங்கிய சடையை உடைய தலைவரான சிவபெருமா னையும் அப்பெருமானின் அடியவர்களையும், விரும்பித் திருவடி களைப் போற்றி மகிழ்வதும், வணங்குவதுமே ஆகும்' எனத் தெரிந்து, மீதூர்ந்த அன்பினால் அவ்விரு செயல்களையுமே செய்து வரும் கருத்துடையவர்.

குறிப்புரை: உள்ளுறை - உட்பொருளாக விளங்குபவை.

Go to top
மெய்த்த ஆகம விதிவழி
வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு
நியமமுஞ் செய்தே
அத்தர் அன்பருக் கமுதுசெய்
விப்பது முதலா
எத்தி றத்தன பணிகளும்
ஏற்றெதிர் செய்வார்.

6


அவர், மெய்ப்பொருளை வெளிப்படுத்தி நிற்கும் ஆகமங்களின் நெறிப்படியே நான்மறைகளின் முதல்வராய சிவபெரு மானை வணங்கி, நாள் தோறும் வழிபட்டு வரும் கடப்பாடு உடைய வராய், சிவனடியார்களுக்கு அமுது செய்விப்பது முதலான பிறபிற பணிகளையும் மேற்கொண்டு ஒழுகுபவராய் வாழ்ந்து வந்தார்.

குறிப்புரை: ஆகமங்கள், இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் உண்மைகளையும் இறைவழிபாட்டு நெறிமுறைகளையும் விளக்கு தலின் 'மெய்த்த ஆகமம்' என்றார். எத்திறத்தன பணிகளும் - அடியவர்கள் வேண்டும் எவ்வகையான பணிகளும்.

ஆய செய்கையில் அமருநாள்
ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை
விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ
டயவந்தி அமர்ந்த
நாய னாரையும் அருச்சனை
புரிந்திட நயந்தார்.

7


இத்தகைய செயல்களில் வழுவாது ஒழுகி வருகின்ற நாள்களில், ஒரு திருவாதிரை நாளில், பொருந்திய சிவ வழிபாட்டை முறைப்படி செய்து நிறைவு பெற்ற பின்னர்த் தூய தொண்டரான நீலநக்கர், பழமையாய் நீடியுள்ள 'அயவந்தி' என்னும் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானுக்கு அருச்சனை செய்ய எண்ணினார்.

குறிப்புரை: அயவந்தி - சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலின் பெயர்.

உறையு ளாகிய மனைநின்றும்
ஒருமைஅன் புற்ற
முறைமை யால்வரு பூசைக்கும்
முற்றவேண் டுவன
குறைவ றக்கொண்டு மனைவியார்
தம்மொடுங் கூட
இறைவர் கோயில்வந் தெய்தினர்
எல்லையில் தவத்தோர்.

8


எல்லை இல்லாத தவத்தையுடைய திருநீலநக்க நாயனார், தம் இருப்பிடமான வீட்டினின்றும், ஒன்றுபட்ட அன்பு டைய முறைமையினால் வரும் பூசையைச் செய்வதற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் குறைவில்லாமல் எடுத்துக் கொண்டு, தம் மனைவியாருடன் சிவபெருமானின் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: உறையுள் - இல்லம்.

அணைய வந்துபுக் கயவந்தி
மேவிய அமுதின்
துணைம லர்க்கழல் தொழுதுபூ
சனைசெயத் தொடங்கி
இணைய நின்றங்கு வேண்டுவ
மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச்
சனைமுறை உய்த்தார்.

9


அவர் அயவந்தி என்ற கோயிலின் உள்ளே புகுந்து, அங்கு அமுதென வீற்றிருக்கும் சிவபெருமானின் இணையடிகளை வணங்கி, பூசை செய்யத் தொடங்கி, தம்முடன் இணைந்திருந்து அங்கு வேண்டுவனவற்றை எல்லாம் மனைவியார் எடுத்துத்தர, உணர்வின் மிக்க அவர், உயர்ந்த பூசனைகளை எல்லாம் முறையாகச் செய்தார்.

குறிப்புரை: ஒத்து நிற்றல் - வழிபாட்டிற்குத் துணையாய் நிற்றல்.

நீடு பூசனை நிரம்பியும்
அன்பினால் நிரம்பார்
மாடு சூழ்புடை வலங்கொண்டு
வணங்கிமுன் வழுத்தித்
தேடு மாமறைப் பொருளினைத்
தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத் துணர்வுற
இருந்துமுன் நவின்றார்.

10


தாம் இதுகாறும் ஆற்றிய வழிபாடு நிறைவுற்றும் அன்பு நிரம்பாதவராய அவர், இறைவர் வீற்றிருக்கும் உட்புறத்தை வலமாக வந்து வணங்கிப் போற்றி நின்று, பெரிய மறைகளும் தேடு கின்ற பொருளை அகக்கண்ணால் நோக்கி, எண்ணத்தகும் திருவைந் தெழுத்தை உணர்ச்சியில் பொருந்தத் திருமுன்பு இருந்து விதிப்படி நினைந்தார்.
குறிப்புரை: மாடு சூழ்புடை - (இறைவன் எழுந்தருளியிருக்கும் திருவறைக்கும்) அருகிலுள்ள உட்சுற்று: (உட்பிரகாரம்)

Go to top
தொலைவில் செய்தவத் தொண்டனார்
சுருதியே முதலாங்
கலையின் உண்மையாம் எழுத்தஞ்சுங்
கணிக்கின்ற காலை
நிலையின் நின்றுமுன் வழுவிட
நீண்டபொன் மேருச்
சிலையி னார்திரு மேனிமேல்
விழுந்ததோர் சிலம்பி.

11


அளவற்ற தவத்தைச் செய்த தொண்டரான அந்நீலநக்கர், நான்மறைகளை முதலாகக் கொண்ட எல்லாக் கலை களும் எடுத்துச் சொல்லும் உண்மைப் பொருளான திருவைந் தெழுத்தை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, சிலந்தியொன்று தான் நின்ற நிலையினின்றும் வழுவியதால், உயர்ந்த அழகிய மேரு மலையை வில்லாக வளைத்த இறைவரின் அருட் குறியான சிவலிங்கத் திருமேனி மீது விழுந்தது.
குறிப்புரை: கலையின் உண்மை - கலைகளின் உட்பொருள்: திருவைந்தெழுத்து. 'வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே' (தி. 3 ப. 49 பா. 1) எனவரும் திருவாக்கும் காண்க.

விழுந்த போதில்அங் கயல்நின்ற
மனைவியார் விரைவுற்
றெழுந்த அச்சமோ டிளங்குழ
வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதிமுன்
துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதிமேல்
துமிந்தனர் போக.

12


அங்ஙனம் சிலந்தி சிவலிங்கத் திருமேனியில் விழுந்த போது, அயலில் நின்றிருந்த மனைவியார், விரைவு மிக எழுந்த அச்சத்துடன், இளங் குழந்தையின் மீது விழுந்த சிலந்தி ஒழியு மாறும் அதன் நச்சுத் தன்மை நீங்குமாறும் ஊதி முன் துமிக்கும் தாய் போன்று, பொங்கி, மீதூர்ந்த அன்பினால் ஊதித் திருமேனியினின்றும் அச்சிலந்தி நீங்குமாறு செய்தனர்.
குறிப்புரை: துமித்தல் - காற்றுடன் துமியையொத்த உமிழ்நீர்த் துளிகளும் சேர்ந்து விழுமாறு வாயினால் ஊதுதல்.

பதைத்த செய்கையால் மனைவியார்
முற்செயப் பந்தஞ்
சிதைக்கு மாதவத் திருமறை
யவர்கண்டு தங்கண்
புதைத்து மற்றிது செய்ததென்
பொறியிலாய் என்னச்
சுதைச்சி லம்பிமேல் விழஊதித்
துமிந்தனன் என்றார்.

13


மனம் பதைத்தலால் உண்டாகிய செய்கையால் மனைவியார் தம் முன் இவ்வாறு செய்ய, மலங்கள் நீங்க மாதவம் செய்யும் மறையவரான திருநீலநக்கனார் அதைக் கண்டு ஆற்ற மாட்டாதவராய்த், தம் கண்களைப் பொத்திக் கொண்டு, 'அறிவற்ற வளே! தகாத இச்செயலைச் செய்தது என்ன காரணம்?' என வினவ, 'சுதைச் சிலம்பி இறைவரின் திருமேனி மீது விழ, அதனை நீக்க ஊதினன்' எனக் கூறினர் அம்மையார்.
குறிப்புரை: பொறி - அறிவு. சுதைச் சிலந்தி - வெண்மையான சிலந்தி.

மனைவி யார்செய்த அன்பினை
மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல்மணி மார்பர்தம்
பூசனைத் திறத்தில்
இனைய செய்கைஇங் கநுசித
மாம்என எண்ணும்
நினைவி னால்அவர் தம்மைவிட்
டகன்றிட நீப்பார்.

14


மனைவியார் செய்த செயலில் உள்ள அன்பை மனத்தில் கொள்ளாதவராய முந்நூல் அணிந்த மார்பினராய திருநீல நக்கர், இது தகாத செயலாகும் என்ற எண்ணங் கொண்டதனால், அம்மனைவியார் தம்மை விட்டு நீங்குமாறு துறப்பவர்,

குறிப்புரை: அநுசிதம் - தகாதது. இதன் மறுதலைச்சொல் உசிதம் என்பதாகும். உசிதம் - தக்கது.

மின்நெ டுஞ்சடை விமலர்மேல்
விழுந்தநூற் சிலம்பி
தன்னை வேறொரு பரிசினால்
தவிர்ப்பது தவிர
முன்அ ணைந்துவந் தூதிவாய்
நீர்ப்பட முயன்றாய்
உன்னை யான்இனித் துறந்தனன்
ஈங்கென உரைத்தார்.

15


'மின் என ஒளிவீசுகின்ற நீண்ட சடையுடைய குற்றமற்றவரான இறைவரின் திருமேனியின் மேல் விழுந்த நூல் சிலந்தியை, வேறு ஒருவகையினால் தவிர்க்காது முன் வந்து வாய் நீர் படுமாறு முயன்றாய்! ஆதலின் இனி நான் உன்னைத் துறந்தனன்' என மொழிந்தார்.
குறிப்புரை: வேறுபரிசு - வேறு வகையால்: கையால் அல்லது வேறு கருவிகளால் அகற்றல். நூற்சிலம்பி - நூலை நூற்கும் இயல்பினதாய சிலந்தி. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபுடையன.

Go to top
மற்ற வேலையிற் கதிரவன்
மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார்
ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுதுதீர்
பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங்
கடிமனை புகுந்தார்.

16


அதுபொழுது கதிரவன் மேற்கு மலையில் மறைந்தான். கணவனார் இட்ட கட்டளையின் வழியே நின்ற மனைவி யார் ஒரு மருங்கு நீங்கத், தம் பூசை முற்றுதற்கு வேண்டிய குற்றம் நீங்கும் பூசை முறைகளைச் செய்து முடித்துக், கற்றையாக முடித்த சடையுடைய சிவபெருமானின் அடியாரான நீலநக்கரும் தம் இல்லத்துக்குள் புகுந்தார்.
குறிப்புரை: பழுது தீர் பூசனை - தம் வழிபாட்டின் இடையே வாயுமிழ்ந்ததால் வந்த மாசு நீங்கச் செய்யும் பூசனை. கழுவாயாகச் செய்த வழிபாடு. வடநூலார் பிராயச் சித்தம் என்பர்.

அஞ்சும் உள்ளமோ டவர்மருங்
கணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில்
நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல
நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற்
பள்ளிகொள் கின்றார்.

17


நீலநக்கரின் மனைவியார் அஞ்சிய உள்ளத்துடன் அவரது அருகே சேராதவராய், நஞ்சை உண்ட பெருமானின் கோயிலில் தங்கியிருந்தார். செம்மையான சொற்களாலாய நான்மறை களில் வல்ல திருநீலநக்கர் தனியாய் அன்றிரவு பஞ்சு இட்ட மெல்லிய அணையில் துயிலலானார்.
குறிப்புரை: இணைந்த உள்ளத்தினராய் வழிபாடாற்றிய இருவரில், ஒருவர் அதிலும் மனைவியார், திருக்கோயிலில் இருக்க, கணவனார் இல்லம் சென்றுதம் பள்ளியறையில் துயின்றார் என்றது, அவ்விருவர் மீதும் கொள்ளத்தகும் இரக்கவுணர்வு தோன்ற நின்றது.

பள்ளி கொள்பொழு தயவந்திப்
பரமர்தாங் கனவில்
வெள்ள நீர்ச்சடையோடுதம்
மேனியைக் காட்டி
உள்ளம் வைத்தெமை ஊதிமுன்
துமிந்தபால் ஒழியக்
கொள்ளும் இப்புறஞ் சிலம்பியின்
கொப்புள்என் றருள.

18


அவ்வாறு அவர் உறங்கும் பொழுதில், அயவந்தி எனும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், அவரது கனவில் எழுந்தருளிக், கங்கை தாங்கிய சடையுடன் தம் திருமேனி யைக் காட்டி, 'மனத்தில் அன்பு வைத்து, நின்மனைவி எம்மை முன்பு ஊதித் துமிந்த பக்கம் ஒழிய, மற்ற இந்தப் பக்கம் எல்லாம் சிலந்தியின் கொப்புளங்கள் எழுந்துள்ளன, காண்பாயாக!' என்று உரைத்தருள.
குறிப்புரை: துமிந்த பால் - உமிழ்நீர்த் துளிகள் கலந்த காற்றை ஊதிய பகுதி.

கண்ட அப்பெருங் கனவினை
நனவெனக் கருதிக்
கொண்ட அச்சமோ டஞ்சலி
குவித்துடன் விழித்துத்
தொண்ட னார்தொழு தாடினார்
பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப்
போற்றிநின் றழுதார்.

19


தாம் கண்ட அக்கனவை நனவு என்றே எண்ணி, அடைந்த அச்சத்துடனே, அஞ்சலியாகத் தலை மேல் குவித்த கைகளுடனே விழித்து, எழுந்து, அடியவரான திருநீலநக்க நாயனார், தொழுது ஆடினார், பாடினார், தேவர் தலைவரான இறைவரின் பெருங்கருணையைப் போற்றி நின்று அழுதார்.
குறிப்புரை:

போது போயிருள் புலர்ந்திடக்
கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந்
தெழுந்துமுன் பரவி
மாத ராரையுங் கொண்டுதம்
மனையில்மீண் டணைந்தார்.

20


இருட்காலமாகிய இரவு புலர்ந்திட, திருக்கோயி லினுட் சென்று, ஆதி நாயகராய அயவந்தியில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் அடிகளில் வணங்கிக் கீழே விழுந்து, திருமுன்பு போற்றி செய்து, அம்மையாரையும் உடன் அழைத்துக் கொண்டு தம் வீட்டிற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். கு-ரை: ஆதிநாயகர் - உயிர்களின் வாழ் முதலாய தலைவர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
குறிப்புரை:

Go to top
பின்பு முன்னையிற் பெருகிய
மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில்
பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர்
மிகஅணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ
விருப்புடன் முடிப்பார்.

21


அதன்பின்பு, முன்பு இருந்ததைவிடப் பெரு மகிழ்ச்சி வந்து அடைய, இன்பம் மிகுதற்குக் காரணமாய எண்ணில் லாத பூசனைகளை இறைவற்குச் செய்து, அன்புமிக்க அடியவர்கள் தம்பால் மிகுதியாக வர, அவர்க்கெல்லாம் முன்போலவே வேண்டிய வற்றையெல்லாம் விருப்புடன் கொடுப்பாராயினார்.

குறிப்புரை: அன்பு மேம்படும் அடியவர் - இறைவனிடத்தும் ஏனைய உயிர்களிடத்தும் அன்பு மீதூர்ந்து நிற்கும் அடியவர்கள்.

அன்ன தன்மையில் அமர்ந்தினி
தொழுகும்அந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப்
பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட
மற்றவர் பாதம்
சென்னி வைத்துடன் சேர்வுறும்
விருப்பினிற் சிறந்தார்.

22


அங்ஙனம் அவர் ஒழுகி வந்த நாள்களில், நிலைபெற்ற சீகாழிப்பதியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தரின் பெருமைகளைப் பலவகையாய்ச் சொல்லி உலகம் பாராட்டிப் போற் றக் கேட்டு, அவருடைய திருவடிகளை மனத்தால் வணங்கி, அவரு டன் கூடியிருக்கும் விருப்பம் கொண்டார்.

குறிப்புரை: பூந்தராய் - சீகாழி. ஊழிக்காலத்திலும் நீரில் அமிழ்ந்து விடாது மிதந்து நிலை பெற்று இருத்தலின் 'மன்னு பூந்தராய்' என்றார். பன்னுதல் - பலபடப் பாராட்டிப் போற்றுதல். 'பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்' (தி. 2 ப. 106 பா. 1) எனவரும் திருமுறைத் திரு வாக்கும் காண்க.

பண்பு மேம்படு நிலைமையார்
பயிலும்அப் பருவம்
மண்பெ ருந்தவப் பயன்பெற
மருவுநற் பதிகள்
விண்பி றங்குநீர் வேணியார்
தமைத்தொழ அணைவார்
சண்பை மன்னருஞ் சாத்தமங்
கையில்வந்து சார்ந்தார்.

23


பண்பினால் மேம்பட்ட திருநீலநக்கர் முற்கூறிய உணர்வுடன் வாழும் காலத்தில், உலகினர் பெருந்தவப் பயனை அடையும் பொருட்டு இறைவன் எழுந்தருளியிருக்கும் நற்பதிகள் பலவற்றிற்கும் சென்று, விண்ணில் விளங்கும் கங்கை தங்கிய சடையை யுடைய சிவபெருமானைத் தொழுவதற்குச் சேர்வாராய்ச், சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தரும் திருச்சாத்தமங்கைக்கு வந்து அடைந்தார்.

குறிப்புரை: சண்பை - சீகாழி

நீடு சீர்த்திரு நீலகண்
டப்பெரும் பாணர்
தோடு லாங்குழல் விறலியார்
உடன்வரத் தொண்டர்
கூடும் அப்பெருங் குழாத்தொடும்
புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டுளம்
மகிழ்நீல நக்கர்.

24


சொலத்தகும் சிறப்புக்கள் மிக்க திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், மலர்கள் அணிந்த கூந்தலையுடைய பாணினி யான மதங்கசூளாமணியாருடன் வர, தொண்டர்கள் சூழும் அப் பெருங் கூட்டத்துடன் சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தர் தம் நகருக்கு அருகே எழுந்தருளுவதைக் கேட்டு, உளம் மகிழ்ந்த திருநீல நக்க நாயனார்,

குறிப்புரை: தோடு - இதழ்கள்; அவற்றையுடைய மலர்க்காயிற்று. மாடு - தம் நகரின் அருகில்

கேட்ட அப்பொழு தேபெரு
மகிழ்ச்சியிற் கிளர்ந்து
தோட்ட லங்கலுங் கொடிகளும்
புனைந்துதோ ரணங்கள்
நாட்டி நீள்நடைக் காவண
மிட்டுநற் சுற்றத்
தீட்ட முங்கொடு தாமுமுன்
பெதிர்கொள எழுந்தார்.

25


கேள்வியுற்ற அப்பொழுதே, பெருமகிழ்ச்சி பொங்க, மலர் மாலைகளையும் கொடிகளையும் தூக்கி, தோரணங்கள் நாட்டி, நீண்ட தொலைவு வரை நடைப் பந்தர் இட்டு, நகரை அணி செய்து, உள்ளம் ஒன்றிய சுற்றத்தாரின் கூட்டத்தையும் உடன் அழைத் துக் கொண்டு அவர் முன்பு எதிர் கொள்ளும் பொருட்டு எழுந்த வராய்,

குறிப்புரை: தோட்டு அலங்கல் - மலர் மாலைகள்.
நடைக்காவணம் - நடைப்பந்தர்.

Go to top
சென்று பிள்ளையார் எழுந்தரு
ளுந்திருக் கூட்டம்
ஒன்றி அங்கெதிர் கொண்டுதங்
களிப்பினால் ஒருவா
றன்றி ஆடியும் பாடியும்
தொழுதெழுந் தணைவார்
பொன்ற யங்குநீள் மனையிடை
யுடன்கொடு புகுந்தார்.

26


சென்று, ஞானசம்பந்தர் எழுந்தருளும் அக் கூட்டத்தைச் சேர்ந்து, அங்கு அவரை எதிர் கொண்டு வரவேற்று, தம் மகிழ்ச்சியின் மேலீட்டால் ஒரு தன்மைத் தாகவன்றிப் பலவகையா னும் ஆடியும் பாடியும் தொழுது, எழுந்து, அணைபவராய்ப், பொன் மயமாக விளங்கும் பெரிய தம் மனையிடத்து உடனே அழைத்துக் கொண்டு புகுந்தார்.

குறிப்புரை: ஆடுதலும் பாடுதலும் மகிழ்ச்சி மிகுதியால் எழுந்த மெய்ப் பாடுகளாகும்.
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பிள்ளை யாரெழுந் தருளிய
பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய அடியவர்
கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதர வோங்கிட
ஓங்குசீர்க் காழி
வள்ள லாரைத்தம் மனையிடை
அமுதுசெய் வித்தார்.

27


திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருக்கும் பெருமைக்கு ஏற்றவாறு, பெருந்திரளாகக் கூடிய அடியவர் கூட்டமும் விரும்பி வர, மனத்தில் அன்பு மிகத் தம் இல்லத்தில், சீகாழியில் தோன்றிய வள்ளலாரான அத் திருஞானசம்பந்தரை உணவு உண்ணு மாறு செய்தார்.

குறிப்புரை: நீலநக்கர் தாம் கொண்டிருந்த அன்பிற்கேற்பச் சம்பந்தர், தாமே வந்து தம்மைத் தலையளித்து ஆட்கொண்டமை பற்றி, வள்ளலார் என்றார்.

அமுது செய்தபின் பகலவன்
மேல்கடல் அணையக்
குமுத வாவியிற் குளிர்மதிக்
கதிரணை போதில்
இமய மங்கைதன் திருமுலை
அமுதுண்டார் இரவும்
தமது சீர்மனைத் தங்கிட
வேண்டுவ சமைத்தார்.

28


திருஞானசம்பந்தரும் அடியவர் கூட்டமும் திருவமுது செய்த பின்பு, கதிரவன் மேல்கடலினை அடைய, ஆம்பல் மலர்களையுடைய பொய்கைகளில் குளிர்ந்த மதியின் கதிர்கள் சேரும் இரவுக் காலத்தில், உமையம்மையாரின் முலைப் பாலையுண்ட அந்த ஞானசம்பந்தர் அன்றிரவும் சிறப்பு மிக்க தம் திருமனையில் தங்கு தற்கு வேண்டியவற்றை நீலநக்கர் அமைத்தார்.

குறிப்புரை: இமய மங்கை - இமயத்தில் வளர்ந்த பெண்: இமவான் மகளாய்த் தோன்றியமையின் இவ்வாறு கூறினார்.

சீல மெய்த்திருத் தொண்டரோ
டமுதுசெய் தருளி
ஞாலம் உய்ந்திட நாயகி
யுடன்நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர்
அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்தடி
பணிந்துமுன் நின்றார்.

29


தவ ஒழுக்கமுடைய மெய்த்தொண்டர்களுடனே திருவமுது செய்த பின்பு, உலகம் உய்தற் பொருட்டுப் பெரிய நாயகி அம்மையாருடன் தோணியப்பர் வெளிப்பட்டருளுமாறு முன் அழுதவரான திருஞானசம்பந்தர் அழைக்க, திருநீலநக்கர் விரைவில் வந்து அடிவணங்கித் திருமுன்பு நின்றார்.
குறிப்புரை:

நின்ற அன்பரை நீலகண்
டயாழ்ப் பாணர்க்
கின்று தங்கஓர் இடங்கொடுத்
தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை
வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடங்கொடுத்
தனர்திரு மறையோர்.

30


அங்ஙனம் வந்து நின்ற அடியவரான திருநீல நக்கரைப் பார்த்துத் 'திருநீல கண்ட யாழ்ப்பாணருக்கு இன்று இங்குத் தங்குதற்குத் தக்கதொரு இடத்தை அளித்தருளுக' என்று திருஞான சம்பந்தர் கூற, மகிழ்ச்சியுற்று, அவ்வருளிப் பாட்டை ஏற்றுச் சென்று, அத்திருநீலகண்ட யாழ்ப்பாணருக்குத் தம் நடுமனையில், வேதிகையின் அருகில், மறையவரான திருநீலநக்கர் இடம் அமைத்துத் தந்தார்.

குறிப்புரை: வேதி - வேள்வித் தீ வளர்த்தற்குரிய இடம்.

Go to top
ஆங்கு வேதியில் அறாதசெந்
தீவலஞ் சுழிவுற்
றோங்கி முன்னையில் ஒருபடித்
தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச்
சகோடயாழ்த் தலைவர்
பாங்கு பாணியா ருடன்அரு
ளாற்பள்ளி கொண்டார்.

31


அவ்விடத்து அவ்வேதிகையில் என்றும் நீங்காது வளர்க்கப்பட்டு வரும் செந்தீயானது வலமாகச் சுழித்து எழுந்து, மேல் ஓங்கி, முன்னையினும் பலவகையாய் விளக்கம் செய்ய, சகோட யாழ்த் தலைவரான திருநீலகண்டர், தம் அருகிருக்கும் மதங்க சூளாமணியாருடனே திருவருள் சிந்தனையோடு பள்ளி கொண்டார்.

குறிப்புரை: பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டியாழ் எனஅழைக்கப்படுவனவற்றுள், சகோடயாழ் 14 நரம்புகளை உடையது. இதுவே பாணனார் வைத்திருந்ததாகும். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

கங்கு லிற்பள்ளி கொண்டபின்
கவுணியர் தலைவர்
அங்கு நின்றெழுந் தருளுவார்
அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக்
கரைச்சிறப் பித்தே
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி
கத்தொடை புனைந்தார்.

32


கவுணியர் குலத் தலைவரான திருஞானசம்பந்தர் அன்று இரவு அங்குப் பள்ளி கொண்ட பின், எழுந்து அங்கிருந்தும் புறப்படுவாராகித் திருநீலநக்கரைச் சிறப்பாக எடுத்துக் கூறி, அயவந்தியில் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானைப் பொங்கும் செந்தமிழான திருப்பதிகமான மாலையைப் புனைந்து பாடினார்.

குறிப்புரை: 'கடி மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்த மங்கை அடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே' (தி. 3 ப. 58 பா. 2) எனவரும் திருஞானசம்பந்தர் வாக்கைக் காண்க.

பதிக நாண்மலர் கொண்டுதம்
பிரான்கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்
கருக்களித் தருளி
எதிர்தொ ழும்பதி களில்எழுந்
தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை
மொழிந்தபூ சுரனார்.

33


திருப்பதிகமான புதிய மலர் மாலை கொண்டு தம் இறைவரின் திருவடிகளைப் போற்றிப், பெருநட்பினை நீலநக்கருக் குத் தந்தருளி, பழமையுடைய மறைகளை என்றும் புதிதாய் உள்ள செந்தமிழால் கூறியருளிய அந்தணரான ஞானசம்பந்தர், மேலும் தொழச் செல்லும் பதிகளை நோக்கிச் செல்வாராயினர்.

குறிப்புரை: பூ - நிலம், சுரர் - தேவர். நிலத்தேவர் - சம்பந்தர்.

பிள்ளை யார்எழுந் தருளஅத்
தொண்டர்தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும்
தவிர்ப்பில எனினும்
வள்ள லார்திரு வருளினை
வலியமாட் டாமை
உள்ளம் அங்குடன் போக்கிமீண்
டொருவகை இருந்தார்.

34


அவ்வகையில் அப்பதியினின்றும் திருஞான சம்பந்தர் எழுந்தருள, திருநீலநக்கரும் ஞானசம்பந்தரைத் தொடர்ந்து செல்லுமாறு தம்மை உந்திச் செலுத்தும் அன்பும், நட்பும் தவிர்க்க இய லாதவையாய் இருப்பினும், வள்ளலாரான ஆளுடைய பிள்ளையாரின் அருளிப் பாடான திருவாணையை மறுக்க இயலாததால், தம் மனத் தைத் தாம் மீட்டு, ஒருவாறு மன அமைதி பெற்றுத் தங்கியிருந்தனர்.

குறிப்புரை: திருநீலநக்கர் ஞானசம்பந்தருடன் செல்லவே ஒருப்பட்டாரேனும், அவர் தம் ஆணையால் அதனை மறுக்க இயலாத வராய்த் தங்கினார். இதனால் ஞானசம்பந்தரிடத்து அவருக்கு இருந்த பத்திமையும், பேரன்பும் நன்கு விளங்கும்.

மேவு நாளில்அவ் வேதியர்
முன்புபோல் விரும்புந்
தாவில் பூசனை முதற்செய்கை
தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராந்
திருமறைச் சிறுவர்
பூவ டித்தலம் பொருந்திய
உணர்வொடும் பயின்றார்.

35


ஒருவாறு அமைதி பெற்று தம்பதியில் தங்கியிருந்த நாள்களில், அவ்வேதியரான நீலநக்கர், முன்புபோல் மறைகளால் போற்றப்பெறும் குற்றம் இல்லாத இறைவழிபாடாற்றல், அடியவரைப் பேணல் முதலான செயல்களை எல்லாம் மேன்மேலும் சிறப்பாக ஆற்றி, ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் இறைவரின் மைந்தரான ஞானசம்பந்தரின் அழகிய திருவடிகளை, பொருந்திய உணர்வுடன் வணங்கி வாழ்ந்து வருவாராயினார்.

குறிப்புரை: சே - காளை, ஆனேறு.

Go to top
சண்பை யாளியார் தாமெழுந்
தருளும்எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச்
செலவிட்டு நண்ணி
வண்பெ ரும்புக ழவருடன்
பயின்றுவந் துறைந்தார்
திண்பெ ருந்தொண்ட ராகிய
திருநீல நக்கர்.

36


இவ்வாறு வாழ்ந்து வந்த உறைப்புடைய நீலநக்கர், இடையிட்ட பல நாள்கள் செல, அன்பு மேலிடச் சீகாழியின் தலைவரான ஞானசம்பந்தர் எழுந்தருளும் திருப்பதிகளுக்கெல்லாம் தாமும் சென்று சேர்ந்து அவருடன் வழிபட்டுக், கொடைத் தன்மையும் பெரும்புகழும் உடைய காழிப் பிள்ளையாருடன் கூடியிருந்து, மீண்டும் தம்பதிக்கு வந்து அமர்ந்திருந்தார்.

குறிப்புரை:

பெருகு காதலில் பின்நெடு
நாள்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர்
வாழிசீ காழி
ஒருவர் தந்திருக் கல்லியா
ணத்தினில் உடனே
திரும ணத்திறஞ் சேவித்து
நம்பர்தாள் சேர்ந்தார்.

37


பெருகும் அன்பினால் பின்னர் நீண்ட நாள்கள் இவ்வாறு வாழ்ந்து வந்த பெருந்தவமுடைய வேதியரான திருநீல நக்கர், எந்நாளும் வாழ்வுடைய சீகாழிப் பதியில் தோன்றிய ஒப்பில் லாத ஞானசம்பந்தரின் திருமணச் சிறப்பில் கலந்து கொண்டு, மகிழ்ந்து, அப்பெருமகனாரை வணங்கிய நற்பேற்றால் அவருடன் கூடிச் சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.

குறிப்புரை: ஞானசம்பந்தர் திருமணத்தில் மறைவிதிப்படி வேள்விச் சடங்குகளைச் செய்வித்தும், அவரைவழிபட்டும் நின்ற குறிப்புத் தோன்றத் 'திருமணத் திறம் சேவித்து' என்றார். சேவித்து - வழிபட்டு.

தருதொ ழில்திரு மறையவர்
சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல
நக்கர்தாள் வணங்கி
இருபி றப்புடை அந்தணர்
ஏறுயர்த் தவர்பால்
ஒருமை உய்த்துணர் நமிநந்தி
யார்தொழில் உரைப்பாம்.

38


அடிமைத் திறத்தில் சிறந்தவரான திருச்சாத்த மங்கையில் தோன்றியருளிய முதன்மையுடைய பெரிய திருநீல நக்கரின் திருவடிகளை வணங்கி, அத் துணையினால் இரு பிறப்பு டைய அந்தணராயும் விடைக்கொடியை உயர்த்திய சிவபெருமா னிடத்து மன ஒருமை கொண்டு உணர்கின்றவராயும் வாழ்ந்த நமிநந்தியார் செய்த திருத்தொண்டினைச் சொல்லத் தொடங்குவோம்.

குறிப்புரை: ஒருமையுய்த்து உணர்தல் - மனம் ஒன்றியிருந்து உணர்தல்.


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95 pathigam no 12.260