சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.008   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா

திருக்கயிலாயம்
Add audio link Add Audio
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்


1


பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்


2


ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல்


3


ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகாது அணுகியான் ஆதி


4


அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய


5


Go to top
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே


6


எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்


7


தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத


8


சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து


9


செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள்


10


Go to top
பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள்


11


ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்


12


நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா


13


வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள்


14


குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த


15


Go to top
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து விற்பகரும்


16


சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா


17


மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னாண் பணிபெரிய


18


ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன
வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய


19


எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் கொண்டு


20


Go to top
கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல்


21


நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர்


22


எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒண்ணிறத்த


23


பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்


24


அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்


25


Go to top
நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் தெருவெலாம்


26


வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப மேவியசீர்


27


ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய


28


உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் கருத்தமைந்த


29


கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடைஇரட்டத் தங்கிய


30


Go to top
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக


31


மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத் துருமு முரசறையப் போகம்சேர்


32


தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்


33


விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்


34


கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய


35


Go to top
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத


36


அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய


37


மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய


38


சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான்


39


காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய நாமஞ்சேர்


40


Go to top
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல்


41


மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய


42


விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும்


43


சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை நல்லிலயத்


44


தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும்


45


Go to top
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் இடவிய


46


மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே


47


மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய


48


ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த


49


காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி மேலை


50


Go to top
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி எமைஆளும்


51


தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச்


52


சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள்


53


ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய


54


மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி


55


Go to top
போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக ஏற்றுக்


56


கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும்


57


பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் சேமேலே


58


வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே தூமாண்பில்


59


வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா


60


Go to top
வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய


61


மாட நடுவில் மலர்ஆர் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில்


62


சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும்


63


கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய


64


கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் செங்கேழ்நற்


65


Go to top
பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகப்புனைந்து பொற்புடைய


66


பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் சோதிசேர்


67


சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக மாளிகையின்


68


மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு


69


தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள்


70


Go to top
ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் பூமன்னும்


71


பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம்


72


ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த


73


கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற்


74


கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த


75


Go to top
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் தீதில்


76


இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்உருக்க கில்லாள் நடையாலும்


77


கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் செவ்வன்நேர்


78


நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள் பூக்குழலும்


79


பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும்


80


Go to top
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள் நன்றாகத்


81


தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் கோலஞ்சேர்


82


பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ அந்தமில்சீர்


83


ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன


84


இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் பொற்புடைய


85


Go to top
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் சீரொளிய


86


தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு


87


முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் ஒத்தமைந்த


88


கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் ஒண்கேழ்நல்


89


அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து


90


Go to top
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் மடல்பட்ட


91


மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும்


92


வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா


93


மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணிஆர் வளைதோள்மேல் மின்ன மணியார்ந்த


94


தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரவெழுதிக் காமன்


95


Go to top
கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும்


96


தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் தானமர


97


நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக்


98


கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட


99


மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய


100


Go to top
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார்


101


இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு மட்டுவிரி


102


கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் வாய்ந்தசீர்


103


வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள்


104


காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள்


105


Go to top
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு


106


வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர்


107


தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழொளியான்


108


தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும் பேரருளான்


109


தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண்நோக்காது


110


Go to top
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய


111


தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர்


112


ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய


113


வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப்


114


புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் மருவினிய


115


Go to top
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் ஒண்கேழல்


116


வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் ஊழித்


117


திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய


118


முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்பெருகி வித்தகத்தால்


119


கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய


120


Go to top
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் தோளெங்கும்


121


தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள்


122


தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும்


123


விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு அடல்வல்ல


124


வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல


125


Go to top
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த


126


கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள்


127


எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று மெல்லவே


128


செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்
சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் நல்லாகம்


129


காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம்


130


Go to top
புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே
அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் மெல்லியலாள்


131


தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி


132


செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண்கேழ்நல்


133


திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் பொங்கொளிசேர்


134


மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும்


135


Go to top
இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே


136


அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்


137


இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் அடியிணைமேல்


138


பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப்


139


பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள்


140


Go to top
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் முன்னமே


141


பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய


142


இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையையுங் கைவிட்டுப் பொன்னனையீர்


143


இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று சென்றவன்தன்


144


ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் ஒண்கேழ்நல்


145


Go to top
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தம் திமிரும் முலையார்க்கும் பூந்துகிலைச்


146


சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழொளிய


147


அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி


148


ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா


149


மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்சீர் புலரியே ஒப்பாள் அருளாலே


150


Go to top
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பந்தீர்ந்


151


தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில்


152


சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும்


153


கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர்


154


மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர்


155


Go to top
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு முறைமையால்


156


சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று சீராலே


157


அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே


158


பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி வாய்ந்தசீர்


159


நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப்பகரும்


160


Go to top
காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி யாவரையும்


161


ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப்


162


பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய வாகிக் கலைகரந்


163


துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய


164


செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் பொங்கெழிலார்


165


Go to top
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் விற்பகரும்


166


தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேளாய


167


நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை
ஏணார் ஒழிக எழிலொழிக பேணும்


168


குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய


169


தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது போவானேல்


170


Go to top
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு


171


பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல்


172


கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர்


173


கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் கட்டரவம்


174


அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் எஞ்சாத


175


Go to top
பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச்


176


சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கொத்த


177


கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் அங்கையால்


178


காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்துடனே


179


ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு


180


Go to top
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து


181


வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய


182


தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த


183


குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் வண்டலம்ப


184


யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப்


185


Go to top
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த


186


பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல்


187


கண்அவனை அல்லாது காணா செவியவன
தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா அண்ணல்


188


கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் றெழிலுடைய


189


வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால்


190


Go to top
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் எரிஇரவில்


191


ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு கேடில்சீர்


192


வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே


193


வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று நொந்தாள்போல்


194


கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் கொட்டிமைசேர்


195


Go to top
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி


196


மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.


197



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கயிலாயம்
1.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாள வரி கோள புலி
Tune - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   கனகம் மா வயிரம் உந்தும்
Tune - திருநேரிசை   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
Tune - குறிஞ்சி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொறை உடைய பூமி, நீர்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
7.100   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தான் எனை முன் படைத்தான்;
Tune - பஞ்சமம்   (திருக்கயிலாயம் )
11.008   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா   திருக்கயிலாய ஞான உலா
Tune -   (திருக்கயிலாயம் )
11.009   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
Tune -   (திருக்கயிலாயம் )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE pathigam no 11.008