ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர் ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந் தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.
|
1
|
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச் செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
|
2
|
இன்புறு காலத் திருவர்முன்பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.
|
3
|
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்த துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.
|
4
|
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம் ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.
|
5
|
Go to top |
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும் தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே.
|
6
|
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் விடானெனிற் பன்றியு மாமே.
|
7
|
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும் மாற எதிர்க்கில் அரியவன் றானாகும் நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும் பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே.
|
8
|
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே.
|
9
|
கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம் சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
|
10
|
Go to top |
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும் நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.
|
11
|
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன் இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான் விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.
|
12
|
ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
|
13
|
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும் புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.
|
14
|
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும் மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.
|
15
|
Go to top |
பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும் பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.
|
16
|
இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன் அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.
|
17
|
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண் துன்பக் கலசம் வனைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே.
|
18
|
அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும் பிறியீரதனில் பெருகுங் குணங்கள் செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே.
|
19
|
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.
|
20
|
Go to top |
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர் மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன் கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.
|
21
|
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும் நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
|
22
|
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும் கட்டிய மூன்று கரணமு மாய்விடும் ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக் கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.
|
23
|
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப் பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண்முத லாகவகுத்துவைத் தானே.
|
24
|
அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத் தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
|
25
|
Go to top |
வகுத்த பிறவியை மாதுநல் லாளும் தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும் பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம் வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.
|
26
|
மாண்பது வாக வளர்கின்ற வன்னியும் காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை பூண்பது மாதா பிதாவழி போலவே ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே.
|
27
|
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும் பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்; பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
|
28
|
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.
|
29
|
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.
|
30
|
Go to top |
மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
|
31
|
குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
|
32
|
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடும் கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.
|
33
|
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும் தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம் பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப் போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.
|
34
|
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில் பருவம தாகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவம தாவதிங் காரறி வாரே.
|
35
|
Go to top |
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன் கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே!
|
36
|
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத் துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய தொண்புற நாடிநின் றோதலு மாமே
|
37
|
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
|
38
|
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின் அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும் அதற்கது வாய்இன்ப மாவது போல அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
|
39
|
பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம் உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின் திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. 15,
|
40
|
Go to top |