வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர் செத்தபோது, செறியார் பிரிவதே; நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.
|
1
|
தேடிவைத்த செல்வமும் , மனைவியும் , மக்களும் நீர் செத்தபோது உம்மைச் செறியார் ; பிரிவதே இயல்பாம் ; நாள் தோறும் நீலக்குடியரனை நினையும் சித்தம் ஆகின்சிவகதி சேர்வீர் . | |
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்- நெய் அது ஆடிய நீலக்குடி அரன், மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம் கையில் ஆமலகக்கனி ஒக்குமே.
|
2
|
சிவந்த திருமேனியனாய்த் தேனும் , பாலும் , தயிரும் , நெய்யும் கொண்டு திருமுழுக்காடும் நீலக்குடி அரனின்மேல் காதல் கொண்டு மறவாத மனத்தினர்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனி போல அப்பெருமான் புலப்பட்டு அருள்புரிவான் . | |
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு- கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய நீற்றன் நீலக்குடி உடையான்; அடி போற்றினார் இடர் போக்கும் புனிதனே.
|
3
|
நீலக்குடி உடைய பெருமான் , கங்கையாற்றுடன் கூடிய நீண்ட சடையையுடையவன் . உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன் . திருமேனிக்கு அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன் . திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும் புனிதன் . | |
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல் ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் நீலன் -நீலக்குடி உறை நின்மலன்; காலனார் உயிர் போக்கிய காலனே.
|
4
|
நான்கு முனிவர்களுக்கு இன்னருள் புரிய ஆலமரத்தின் நன்னிழலின் கீழ் இருந்தோன் ; ஆலகால நஞ்சு உண்ட கண்டத்துடன் பொருந்திய நீலநிறம் உடையவன் . நீலக்குடி உறையும் மலமற்றவன் ; காலன் உயிர் போக்கிய கடவுள் . | |
நேச நீலக்குடி அரனே! எனா நீசராய், நெடுமால் செய்த மாயத்தால், ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய், நாசம் ஆனார், திரிபுரநாதரே.
|
5
|
`நேசத்துக்குரிய நீலக்குடி அரனே !` என்னாத கீழ்மை உடையவராய் நெடுமால் செய்த மாயத்தால் திரிபுரத்து அசுரர்கள் ஈசன் ஓரம்பு எய்ய எரிந்து சாம்பலாய்ப் போய் நாசமாயினர் . | |
| Go to top |
கொன்றை சூடியை, குன்றமகளொடும் நின்ற நீலக்குடி அரனே! எனீர்- என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்; பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?
|
6
|
என்றும் பொய்யாகிய உலக வாழ்வை உகந்து இறுமாப்பு அடைகின்ற நீர் இறக்கும்போது நுமக்கு அறியவொண்ணுமோ ? ஒண்ணாதாதலால் கொன்றை சூடும் கடவுளுமாகிய மலை மகளோடும் நின்ற நீலக்குடி அரனே என்று உரைப்பீர்களாக ! | |
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால், நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!
|
7
|
கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக - நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் . | |
அழகியோம்; இளையோம் எனும் ஆசையால் ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே, நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!
|
8
|
` யாம் அழகியவர்கள் ; இளையவர்கள் ` எனும் ஆசையால் ஒழுகி , உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே , நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக . | |
கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள் பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன் நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்; சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.
|
9
|
கற்றையாகிய செஞ்சடையில் , குளிர்ந்த கதிர்களை வீசும் வெண்திங்களைப்பற்றிப் பாம்புடன் வைத்த கடவுளாகிய நெற்றிக்கண்ணுடைய நீலக்குடி அரன் , தேவர் சுற்றிவந்து தொழும் கழலணிந்த சோதிவடிவினன் ஆவன் . | |
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால் நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும் இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.
|
10
|
நீலக்குடி அரன் தருக்கடைந்து திருக் கயிலையைத் தாங்கிய செறிந்த தோளை உடைய இராவணன் உடலை ஓர் திரு விரலால் நெரித்துப் பின்னையும் இரக்கமாகி அருள் புரிந்த கருணைத் திறம் உடையவன் என்பர் . | |
| Go to top |