தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்;
கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;
மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்,
அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்;
வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்,
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி,
ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,
ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;
உத்தரகோசமங்கையுள் இருந்து,
வித்தக வேடம் காட்டிய இயல்பும்;
பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
தூ வண மேனி காட்டிய தொன்மையும்;
வாதவூரினில் வந்து, இனிது அருளி,
பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;
குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்;
பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும்;
வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,
காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;
மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;
ஓரியூரில் உகந்து, இனிது அருளி,
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;
தேன் அமர் சோலைத் திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
இடைமருது அதனில் ஈண்ட இருந்து,
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;
சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,
பாவகம் பல பல காட்டிய பரிசும்;
கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;
ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;
அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,
இந்திர ஞாலம் போல வந்தருளி,
எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,
தானே ஆகிய தயாபரன், எம் இறை,
சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,
அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;
மந்திர மா மலை மகேந்திர வெற்பன்,
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,
எம்தமை ஆண்ட பரிசுஅது பகரின்
ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,
நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;
ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்
மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,
தூய மேனி, சுடர்விடு சோதி
காதலன் ஆகி, கழுநீர் மாலை
ஏல் உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,
இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,
எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,
அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி;
நாயினேனை நலம் மலி தில்லையுள்,
கோலம் ஆர்தரு பொதுவினில், வருக' என,
ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி;
அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்
நாத! நாத!' என்று அழுது அரற்றி,
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்
தில்லையாகிய பழைய நகரில் நிருத்தம் செய்தருளிய திருவடிகளால், பல உயிர்களில் எல்லாம் தங்கிப் பல அருட் செயல்களைச் செய்தவனாகி, அளவில்லாத பல குணங்களோடு அழகு பெற விளங்கி மண்ணுலகிலும், விண்ணுலகிலும் மற்றைய தேவருலகிலும் பொருந்திய கல்வியைத் தோற்றுவித்தும், நீக்கியும், என்னுடைய அஞ்ஞான இருளை முழுதும் ஒழித்தும் அடியாருடைய உள்ளத்தில் அன்பானது பெருக, அதனைக் குடியிருப்பாகக் கொண்ட அருளும் தலைமையும் உடையவனாய், மேலுலகத்தில் தான் சொல்லிய ஆகமத்தை நிலைபெற்ற மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து நிலவுலகத்திற்கு வெளிப்படுத்தியும், கல்லாடம் என்னும் திருப்பதியில் இனிதாக உமாதேவியோடு, யாவரும் விரும்பும்படி ஒருமித்து எழுந்தருளியிருந்தும், பஞ்சப் பள்ளியென்னும் திருப் பதியில் பால் போன்ற மொழியையுடையவளாகிய உமாதேவி யோடும், குறையாமல் மிகும் இனிய அருள் செய்தும், வேடவுருவத் துடன் முருக்கம்பூப் போன்ற உதட்டையுடைய உமாதேவியின் நெருங்கின அழகான தனங்களாகிய குளத்தில் மூழ்கியும், வலைய ராகிக் கெளிற்று மீனைப் பிடித்து, பெருமை வாய்ந்த விருப்பத்தினை யுடைய ஆகமங்களை அக்கெளிற்றினிடமிருந்து கவர்ந்தும், அவ் வாகமங்களை மகேந்திரமலையில் இருந்து பொருந்திய ஐந்து திரு முகங்களாலும் உபதேசித்தருளியும், நந்தம்பாடி என்னும் திருப் பதியில் வேதியனாய், முடிவற்ற ஆசிரியனாய் எழுந்தருளியும், வெவ் வேறு திருவுருவங்களும் வெவ்வேறு குணங்களும், நூறு இலட்சம் வகையினையுடையனவாகி இடப வாகனத்தையுடைய சிவபெருமான், இவ்வுலகத்தை உய்விக்கும் பொருட்டு, தனது இடப் பாகத்தையுடைய உமாதேவியும் தானுமாய் எழுந்தருளி மேல் நாட்டுக் குதிரைகளைக் கொண்டு, அழகு பொருந்த வாணிகக் கூட்டமாய் தானே எழுந்தருளி வந்தும், வேலம்புத்தூர் என்னும் திருப்பதியில் வேற்படையைக் கொடுத்தருளித் தன் திருக்கோலத்தைச் சிறப்பாகக் காணுமாறு செய்த கோட்பாடும், சாந்தம்புத்தூரில் வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்குக் கண்ணாடியில் வாட்படை முதலியவற்றைக் கொடுத்த பயனும், ஓர் அன்பர்க்கு அருளுதற் பொருட்டுக் குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் தோற்பையில், மிக்க நெருப்புத் தோன்றத் தனது உருவத்தை அழகாகக் காட்டிய பழைமையும், திருமாலுக்கும் பிரமனுக் கும் அளவு அறியப்படாதவனாகிய சிவபெருமான், நரியைக் குதிரை களாகச் செய்த நன்மையும், பாண்டியனை ஆட்கொண்டருள, அப் பாண்டியனுக்குக் குதிரையை விற்று, அதற்கு அவன் கொடுத்த மிக்க பொன்னைப் பெறக் கருதாது, என்னை ஆண்டவனாகிய எம் இறைவனது அருள் வழியையே நான் நாடியிருக்குமாறு அழகு பொருந்திய பாதங்களை, மிக்க ஒளியுடன் காட்டியருளிய பழைமையும், வேதியனாகி, அடியேனை ஆட்கொண்டருளி மாயம் செய்து மறைந்த தன்மையும்; மதுரையாகிய பெரிய நல்ல பெருமை வாய்ந்த நகரத்திலிருந்து, குதிரை வீரனாய் வந்த கோட்பாடும், அந்த மதுரை நகரத்தில் அடியவளாகிய வந்தி என்பவள் பொருட்டு, மற்றவர்களுடன் மண் சுமந்தருளிய விதமும், திருவுத்தரகோச மங்கையிலிருந்து வித்தக வேடம் காட்டிய இயற்கையும், திருப்பூவணத்தில் விளங்கியிருந்தருளி, தூய்மையான அழகிய திருமேனியைப் பொன்னனையாள் என்பவளுக்குக் காட்டிய பழைமையும், திருவாதவூரில் எழுந்தருளி இனிய திருவருள் புரிந்து பாதச் சிலம்பு ஓசையைக் காட்டிய செயலும், அழகு நிறைந்த பெருந்துறைக்கு இறைவனாகி, மேன்மை பொருந்திய ஒளியில் மறைந்த வஞ்சகமும், திருப்பூவணத்தில் இனிதாக விளங்கியருளிப் பாவத்தை அழித்த விதமும், தண்ணீர்ப் பந்தலை வெற்றியுண்டாக வைத்து நல்ல நீரைத் தரும் ஆளாகியிருந்த நன்மையும், விருந்தாளியாகி, திருவெண்காட்டில் குருந்த மரத்தின் அடியில் அன்று வீற்றிருந்த கோலமும், திருப்பட்ட மங்கை என்னும் திருப்பதியில் சிறப்பாய் இருந்து அவ்விடத்தில் அட்டமா சித்திகளை அருளிய விதமும், வேடுவனாய் வந்து வேண்டும் வடிவைக் கொண்டு காட்டில் ஒளித்த வஞ்சகமும், படைகளின் உண்மையைக் காட்டச் செய்து, அதற்கு வேண்டிய வடிவம் கொண்டு மேன்மையுடைய ஒருவனாய்த் தோன்றிய தன்மையும், ஓரியூரில், இனிதாக எழுந்தருளி, பூமியில் பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய தன்மையும், பாண்டூரில் மிக இருந்தும், தேவூருக்குத் தென்திசையில் விளங்குகின்ற தீவில் அரசக் கோலம் கொண்ட கோட்பாடும், தேன் பொருந்திய மலர்ச் சோலை சூழ்ந்த திருவாரூரில் ஞானத்தைக் கொடுத்த நன்மையும், திருவிடைமருதூரில் மிக இருந்து பரிசுத்தமான திருவடியை வைத்த அந்தத் தன்மையும், திருவேகம்பத்தில் இயற்கையாய் எழுந்தருளி யிருந்து பெண்ணை இடப்பாகத்தில் கொண்ட தன்மையும், திரு வாஞ்சியம் என்னும் தலத்தில் சிறப்புப் பொருந்த எழுந்தருளி மணம் நிறைந்த கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருந்த விதமும்; வீரனாகி, வலிய வில்லைத் தாங்கி, பலப்பல வீரச் செயல் களைக் காட்டிய தன்மையும், திருக்கடம்பூரில் இடமுண்டாக இருந் தும், திருவீங்கோய் மலையில் அழகைக் காட்டியும், திருவையாற்றில் சைவனாய் வந்தும், திருத்துருத்தி என்னும் திருப்பதியில் விருப்பத் தோடிருந்தும், திருப்பனையூர் என்னும் பதியில் விருப்பமுடைய வனாய் இருந்தும், சீகாழியில் திருவுருவினைக் காட்டியும், திருக்கழுக் குன்றத்தில் நீங்காது இருந்தும், திருப்புறம்பயத்தில் பல அறச்செயல் களை அருளிச் செய்தும், திருக்குற்றாலத்தில் அடையாளமாய் இருந்தும், முடிவில்லாத பெருமையையுடைய, நெருப்புப் போலும் உருவத்தை மறைத்து, அழகிய கோலத்தினையுடைய ஒப்பற்ற முதற் பொருளின் உருவம் கொண்டு இந்திர ஞாலம் போல எழுந்தருளி, எல்லாருடைய குணங்களும் தன்னிடத்து அடக்கித்தானொருவனே முதல்வனாய் நிற்கிற அருளினால் மேம்பட்ட எம் தலைவன் சந்திரதீபம் என்னும் தலத்தில் சாத்திரப் பொருளை உபதேசிப் பவனாய், ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து அழகு வாய்ந்த திருக் கழிப்பாலை என்னும் தலத்தில் அழகிய திருக்கோலத்தோடு பொருந்தி யிருந்தருளியும்; மறைமொழிகள் வெளிப்படுவதற்கு இடமான பெரிய மலையாகிய, மகேந்திர மலையையுடையவன் முடிவற்ற பெருமையையும் அருளையும் உடைய பெரியோன், எம்மை ஆண்டருளிய தன்மையைச் சொல்லின், வலிமையையுடைய அழகமைந்த திரு மேனியில், திருவெண்ணீற்றுக் கொடியை உயர்த்திக் காட்டியும், பிறவித் துன்பத்தை ஒருங்கே அழிக்கும் இன்பமே ஆறாகத் தந்தருளியும், உமாதேவியின் பாகத்தையுடைய, மிகவும் பெருங் கருணையையுடையவன், நாதமாகிய பெரிய பறை முழங்கி ஒலிக்கக் கண்டும், அன்பர் மனம் களங்கமடையாமல் ஆட்கொண்டருள்வோன் முத்தலை வேலினைக் கைப்பிடித்தருளியும், மூலகாரணமாகிய மும் மலம் நீக்குகிற பரிசுத்தமாகிய திருமேனியில் ஒளிவீசுகின்ற சோதியாய் உள்ளவன், அன்பரிடத்து அன்புடையவனாகிச் செங்கழுநீர் மலர் மாலையைப் பொருத்தமுடையதாக அழகுபெறத் தரித்தும், திருமாலுக்கும் பிரமனுக்கும் எல்லையறியப் படாதவன் குதிரையின் மீது ஏறி வந்த விதமும், மீண்டும் பிறவிக்கு வாராத முத்தி நெறியை அன்பர்க்குக் கொடுப்பவன், பாண்டி வளநாடே பழைய இடமாகக் கொண்டும், அன்பு செய்கின்ற அடியவரை மிகவும் மேலான முத்தியுலகத்தில் சேர்ப்பவன், திருவுத்தரகோச மங்கையைத் திருப்பதியாகக் கொண்டும், முதன்மையான மும்மூர்த்திகட்குத் திருவருள் செய்த மகாதேவன் என்பதே திருப்பெயராகக் கொண்டும், அடியார்கட்கு அஞ்ஞான இருளை நீக்கியதனால் ஆகிய பேரின்பமாகிய ஊர்தியைக் கொடுத்தருளிய பெருமையை உடைய அருளே மலையாகக் கொண்டும், எப்படிப்பட்ட பெருந் தன்மையையும் எவ்வகைப் பட்டவர் திறத்தினையும் அவ்வத் தன்மைகளால் ஆட்கொண்டருளி, நாய் போன்ற என்னை நன்மை மிகுந்த தில்லையுள் அழகு நிறைந்த `அம்பலத்தில் வருக` என்று சொல்லி, பொருந்த அடியேனை இவ்வுலத்திலே நிறுத்தி, அன்று தன்னோடு கூடப்போன அருள்பெற்ற அடியார், தன்னோடு பொருந்த அவரோடு தான் கலந்து மறைந்தருளியும், தன்னைக் கலக்க வாராதவர்களுள் சிலர், தீயில் குதிக்கவும், ஆசை கொண்டு மயக்கம் அடைந்தும், பூமியில் புரண்டு வீழ்ந்து அலறியும், நிற்க, காலால் வேகம் கொண்டு ஓடிக் கடலில் விழ நெருங்கி, `நாதனே! நாதனே!` என்று அழுது புலம்பி, திருவடியை அடைந்தவர்கள் முத்திப்பேறு எய்தவும், பதஞ்சலி முனிவர்க்கு அருள் செய்த மேலான கூத்தனே என்று இதயம் வருந்த நின்று ஏங்கினவர் ஏங்கி நிற்கவும், ஒலிக்கின்ற கயிலாய மலையின் சிறந்த தலைவன் அழகு பெற்ற இமய மலையின் தன்மை வாய்ந்த அழகிய பொன்னினால் செய்யப்பட்டு விளங்குகின்ற தில்லையம்பலத்தினில் நடனம் செய்த, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினையுடைய உமாதேவியோடு காளிக்கும் அருள் செய்த, திருக்கூத்தில், அழகு மிக்க புன்னகையையுடைய எம்பெருமான் தன் திருவடியைச் சரணாக அடைந்த தொண்டர்களுடனே விளங்குகின்ற புலியூரில் எழுந்தருளி இனிதாக எனக்கு அருள் செய்தனன்.