மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை, மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை, நாவலனை, நரை விடை ஒன்று ஏறுவானை, நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை, ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன் திருமால் ஆனானை, அனலோன் போற்றும் காவலனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
1
|
தலை ஏந்து கையானை, என்பு ஆர்த்தானை, சவம் தாங்கு தோளானை, சாம்பலானை, குலை ஏறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோள் நாகம் அசைத்தானை, குலம் ஆம் கைலை- மலையானை, மற்று ஒப்பார் இல்லாதானை, மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் கலையானை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
2
|
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள் செய்வானை; சுடர் மழுவாள் படையானை; சுழி வான் கங்கைத் தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை; செக்கர் வான் ஒளியானை; சேராது எண்ணிப் பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து, தலை அறுத்து, பல் கண் கொண்ட கண்டகனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
3
|
விண்ணவனை, மேரு வில்லா உடையான் தன்னை, மெய் ஆகிப் பொய் ஆகி விதி ஆனானை, பெண்ணவனை, ஆண் அவனை, பித்தன் தன்னை, பிணம் இடுகாடு உடையானை, பெருந் தக்கோனை, எண்ணவனை, எண்திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகித் தோன்றும் கண்ணவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
4
|
உருத்திரனை, உமாபதியை, உலகு ஆனானை, உத்தமனை, நித்திலத்தை, ஒருவன் தன்னை, பருப்பதத்தை, பஞ்சவடி மார்பினானை, பகல் இரவு ஆய் நீர் வெளி ஆய்ப் பரந்து நின்ற நெருப்பு அதனை, நித்திலத்தின் தொத்து ஒப்பானை, நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக் கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
5
|
Go to top |
ஏடு ஏறு மலர்க்கொன்றை, அரவு, தும்பை, இளமதியம், எருக்கு, வான் இழிந்த கங்கை, சேடு எறிந்த சடையானை; தேவர் கோவை; செம் பொன் மால்வரையானை; சேர்ந்தார் சிந்தைக் கேடு இலியை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கிறி பேசி, மடவார் பெய் வளைகள் கொள்ளும் காடவனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
6
|
நாரணனும் நான்முகனும் அறியாதானை, நால்வேதத்து உருவானை, நம்பி தன்னை, பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டு உண்ணும் பால்வணனை, தீவணனை, பகல் ஆனானை, வார் பொதியும் முலையாள் ஓர் கூறன் தன்னை, மான் இடங்கை உடையானை, மலிவு ஆர் கண்டம் கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
7
|
வானவனை, வலி வலமும் மறைக்காட்டானை, மதி சூடும் பெருமானை, மறையோன் தன்னை, ஏனவனை, இமவான் தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை, ஏத்துவார்க்குத் தேனவனை, தித்திக்கும் பெருமான் தன்னை, தீது இலா மறையவனை, தேவர் போற்றும் கானவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
8
|
நெருப்பு உருவு திருமேனி வெண்நீற்றானை, நினைப்பார் தம் நெஞ்சானை, நிறைவு ஆனானை, தருக்கு அழிய முயலகன் மேல்-தாள் வைத்தானை, சலந்தரனைத் தடிந்தோனை, தக்கோர் சிந்தை விருப்பவனை, விதியானை, வெண்நீற்றானை, விளங்கு ஒளிஆய், மெய் ஆகி, மிக்கோர் போற்றும் கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
9
|
மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண் இடந்து இடுதலுமே, மலி வான் கோலச் சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை; தும்பி உரி போர்த்தானை; தோழன் விட்ட அடல் ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தானை; அருள் ஆர் கருணைக்- கடலானை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
|
10
|
Go to top |