சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே.
|
1
|
அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
|
2
|
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன் பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
|
3
|
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
|
4
|
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
|
5
|
Go to top |
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
|
6
|
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் அண்ணல் இவன்என் றறியகி லார்களே.
|
7
|
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
|
8
|
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
|
9
|
கடந்துநின் றான்கம லம்மல ராதி கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன் கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன் கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
|
10
|
Go to top |
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட் சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
|
11
|
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை மாது குலாவிய வாள்நுதல் பாகனை யாது குலாவி அமரருந் தேவரும் கோது குலாவிக் குணம்பயில் வாரே
|
12
|
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும் மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும் ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
|
13
|
அதிபதி செய்து அளகையர் வேந்தனை நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி அதுபதி யாதரித் தாக்கம தாக்கின் இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.
|
14
|
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும் முதுபதி செய்தவன் மூதறி வாளன் விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி அதுபதி யாக அமருகின் றானே.
|
15
|
Go to top |
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்றம் அலையது தானே.
|
16
|
மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன் நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர் எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன் பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.
|
17
|
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம் நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை இல்லென வேண்டா இறையவர் தம்முதல் அல்லும் பகலும் அருளுகின் றானே.
|
18
|
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.
|
19
|
காணநில் லாயடி யேற்குற வாருளர் நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக் கோணநில் லாத குணத்தடி யார்மனத் தாணிய னாகி அமர்ந்து நின் றானே.
|
20
|
Go to top |
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன் இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
|
21
|
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால் படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும் கடந்துநின் றான்கம லம்மலர் மேலே புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
|
22
|
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத் தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று நந்தியை நாளும் வணங்கப் படும்அவர் புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.
|
23
|
இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும் பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும் உணங்கிநின் றான்அம ராபதி நாதன் வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.
|
24
|
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக் கானக் களிறு கதறப் பிளந்தஎங் கோனைப் புகழுமின் கூடலு மாமே.
|
25
|
Go to top |
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும் தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார் ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே.
|
26
|
மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
|
27
|
தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும் மேவு பிரான்விரி நீருல கேழையும் தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை பாவு பிரான்அருள் பாடலு மாமே.
|
28
|
பதிபல வாயது பண்டிவ் வுலகம் விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
|
29
|
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல் வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
|
30
|
Go to top |
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும் ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.
|
31
|
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே.
|
32
|
நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன் வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந் தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
|
33
|
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப் பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப் பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப் பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.
|
34
|
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத் தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும் ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.
|
35
|
Go to top |
குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும் நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும் மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.
|
36
|
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக் கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.
|
37
|
போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது நாயக னான்முடி செய்தது வேநல்கும் மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும் வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.
|
38
|
அரனடி சொல்லி அரற்றி அழுது பரனடி நாடியே பாவிப்ப நாளும் உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
|
39
|
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
|
40
|
Go to top |
விதிவழி அல்லதிவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே.
|
41
|
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
|
42
|
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர் நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.
|
43
|
அடியார் பரவும் அமரர் பிரானை முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் படியார் அருளும் பரம்பரன் எந்தை விடியா விளக்கென்று மேவிநின் றேனே.
|
44
|
பரைபசு பாசத்து நாதனை உள்ளி உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத் திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.
|
45
|
Go to top |
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின் றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று நாடுவன் நானின் றறிவது தானே.
|
46
|
அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நாலும் உணரில் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரிஅயற் காமே.
|
47
|
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத் தலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.
|
48
|
ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம் பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார் தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.
|
49
|
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.
|
50
|
Go to top |
பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில் அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம் வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.
|
51
|
ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.
|
52
|
வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந் தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை ஊனமர்ந் தோரை உணர்வது தானே.
|
53
|
சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.
|
54
|
பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக் கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
|
55
|
Go to top |
தானொரு கூறு சதாசிவன் எம்இறை வானொரு கூறு மருவியும் அங்குளான் கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற தானொரு கூறு சலமய னாமே.
2, |
56
|