மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான் கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம் எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.
|
1
|
வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின கோதுவித்தாய் நீறெழக் கொடிமா மதிலாயின ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் இரும்பைதனுள் மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.
|
2
|
வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான் எந்தைபெம்மா னிடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள் கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.
|
3
|
நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள் அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம் எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
|
4
|
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் கூசவானை யுரித்தபெரு மான்குறை வெண்மதி ஈசனெங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள் மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.
|
5
|
Go to top |
குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.
|
6
|
பொங்குசெங்கண் அரவும் மதியும் புரிபுன்சடைத் தங்கவைத்த பெருமானென நின்றவர் தாழ்விடம் எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள் மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
|
7
|
நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான் அட்டமூர்த்தி யழல்போ லுருவன் அழகாகவே இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள் வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.
|
8
|
அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான் இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள் மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.
|
9
|
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம் குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள் மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.
|
10
|
Go to top |
எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள் மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் அந்தமில்லா அனலாடு வானையணி ஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே.
|
11
|