விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப் பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும் பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.
|
1
|
அரவொலி வில்லொலி யம்பினொலி யடங்கார் புரமூன்றும் நிரவவல்லார் நிமிர்புன் சடைமே னிரம்பா மதிசூடி இரவில் புகுந்தெ னெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும் பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பரிதிந் நியமமே.
|
2
|
வாண்முக வார்குழல் வாணெடுங்கண் வளைத்தோண் மாதஞ்ச நீண்முக மாகிய பைங்களிற்றின் னுரிமே னிகழ்வித்து நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும் பாண்முக வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.
|
3
|
வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத் துஞ்சிருண் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும் பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும் பரிதிந் நியமமே.
|
4
|
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித் தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார் ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும் பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பரிதிந் நியமமே.
|
5
|
Go to top |
வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத் திங்கள் திருமுடிமேல் விளங்கத் திசையார் பலிதேர்வார் சங்கொடு சாய லெழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும் பைங்கொடி முல்லை படர்புறவிற் பரிதிந் நியமமே.
|
6
|
பிறைவளர் செஞ்சடை பின்றயங்கப் பெரிய மழுவேந்தி மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார் இறைவளை சோர வெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும் பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே.
|
7
|
ஆசடை வானவர் தானவரோ டடியா ரமர்ந்தேத்த மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார் காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும் பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பரிதிந் நியமமே.
|
8
|
நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமா னயந்தேத்தக் கூடல ராடல ராகிநாளுங் குழகர் பலிதேர்வார் ஏடலர் சோர வெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் பாடல ராடல ராய்வணங்கும் பரிதிந் நியமமே.
|
9
|
கல்வள ராடையர் கையிலுண்ணுங் கழுக்க ளிழுக்கான சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும் பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பரிதிந் நியமமே.
|
10
|
Go to top |
பையர வம்விரி காந்தள்விம்மு பரிதிந் நியமத்துத் தையலொர் பாக மமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன் பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.
|
11
|