கன்றினார் புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறி நின்றதோ ருருவந் தன்னா னீர்மையு நிறையுங் கொண்டு ஒன்றியாங் குமையுந் தாமு மூர்பலி தேர்ந்து பின்னும் பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.
|
1
|
கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியுந் தேர்வார் வற்றலோர் தலைகை யேந்தி வானவர் வணங்கி வாழ்த்த முற்றவோர் சடையி னீரை யேற்றமுக் கண்ணர் தம்மைப் பற்றினார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.
|
2
|
கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும் இரவுநின் றெரிய தாடி யின்னருள் செய்யு மெந்தை மருவலார் புரங்கண் மூன்று மாட்டிய வகைய ராகிப் பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.
|
3
|
கட்டிட்ட தலைகை யேந்திக் கனலெரி யாடிச் சீறிச் சுட்டிட்ட நீறு பூசிக் சுடுபிணக் காட ராகி விட்டிட்ட வேட்கை யார்க்கு வேறிருந் தருள்கள் செய்து பட்டிட்ட வுடைய ராகிப் பருப்பத நோக்கி னாரே.
|
4
|
கையராய்க் கபால மேந்திக் காமனைக் கண்ணாற் காய்ந்து மெய்யராய் மேனி தன்மேல் விளங்கு வெண் ணீறுபூசி உய்வரா யுள்கு வார்கட் குவகைகள் பலவுஞ் செய்து பையரா வரையி லார்த்துப் பருப்பத நோக்கி னாரே.
|
5
|
Go to top |
வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்து ஓடரா யுலக மெல்லா முழிதர்வ ருமையுந் தாமும் காடராய்க் கனல்கை யேந்திக் கடியதோர் விடைமேல் கொண்டு பாடராய்ப் பூதஞ் சூழப் பருப்பத நோக்கி னாரே.
|
6
|
மேகம்போன் மிடற்ற ராகி வேழத்தி னுரிவை போர்த்து ஏகம்ப மேவி னார்தா மிமையவர் பரவி யேத்தக் காகம்பர் கழற ராகிக் கடியதோர் விடையொன் றேறிப் பாகம்பெண் ணுருவ மானார் பருப்பத நோக்கி னாரே.
|
7
|
பேரிடர்ப் பிணிக டீர்க்கும் பிஞ்ஞக னெந்தை பெம்மான் காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச் சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே.
|
8
|
அங்கண்மா லுடைய ராய வைவரா லாட்டு ணாதே உங்கண்மால் தீர வேண்டி லுள்ளத்தா லுள்கி யேத்தும் செங்கண்மால் பரவி யேத்திச் சிவனென நின்ற செல்வர் பைங்கண்வெள் ளேற தேறிப் பருப்பத நோக்கி னாரே.
|
9
|
அடல்விடை யூர்தி யாகி யரக்கன்றோ ளடர வூன்றிக் கடலிடை நஞ்ச முண்ட கறையணி கண்ட னார்தாம் சுடர்விடு மேனி தன்மேற் சுண்ணவெண் ணீறு பூசிப் படர்சடை மதியஞ் சேர்த்திப் பருப்பத நோக்கி னாரே.
|
10
|
Go to top |