ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப் போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண் புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண் காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங் கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே. சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.
|
1
|
கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக் காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண் மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.
|
2
|
நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண் நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண் இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண் ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட் கன்பன்காண் ஆரழல தாடி னான்காண் அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச் செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.
|
3
|
மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண் முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண் காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண் கங்காளன் காண்கயிலை மலையி னான்காண் ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண் ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத் தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.
|
4
|
கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண் கனலாட வல்லான்காண் கையி லேந்தும் மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண் வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண் ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண் உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந் தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.
|
5
|
Go to top |
உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண் ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண் புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப் புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண் நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால் செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.
|
6
|
உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி உருண்டோடத் தொடர்ந்தருக்கன் பல்லை [ யெல்லாந் தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ் சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.
|
7
|
உரிந்தவுடை யார்துவரால் உடம்பை மூடி உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம் பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம் பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை நிரைந்துவரும் இருகரையுந் தடவா வோடி நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித் திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன்காண் அவனென் சிந்தை யானே.
|
8
|
இப்பாடல் கிடைக்கவில்லை.
|
9
|