விடம் அடைசு வேலை அமரர் படை சூலம்
விசையன் விடு பாணம் எனவே தான்
விழியும் அதி பார விதமும் உடை மாதர்
வினையின் விளைவு ஏதும் அறியாதே
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது
கலவி தனில் மூழ்கி வறிதாய
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு
கழல் இணைகள் சேர அருள்வாயே
இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத
கணபதி எனு நாமம் முறை கூற
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட
அறிவு அருளும் ஆனை முகவோனே.
நஞ்சு பொருந்திய கடலும், தேவர் படையும், சூலாயுதமும், அருச்சுனன் விடுகின்ற அம்பும் சமானம் என்று கூறும்படியான கண்களும், அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின் சாகசத் தொழில்களினால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக. அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாது) மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (அவள் முறையீட்டுக்கு இரங்கி), (அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத் திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக் கண்ணன் தன்வசமாக்க), பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, போவது ஏனடா சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும் அறிவை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் ... நஞ்சு பொருந்திய கடலும், தேவர் படையும், சூலாயுதமும், விசையன் விடு பாணம் எனவே தான் ... அருச்சுனன் விடுகின்ற அம்பும் சமானம் என்று கூறும்படியான விழியும் அதி பார விதமும் உடை மாதர் ... கண்களும், அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின் வினையின் விளைவு ஏதும் அறியாதே ... சாகசத் தொழில்களினால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, கடி உலவு பாயல் பகல் இரவு எனாது ... வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் கலவி தனில் மூழ்கி வறிதாய கயவன் அறிவு ஈனன் ... சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே ... அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக. இறைவன் மகள் வாய்மை அறியாதே ... அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாது) இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை கூற ... மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (அவள் முறையீட்டுக்கு இரங்கி), இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக ... (அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத் திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக் கண்ணன் தன்வசமாக்க), அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட ... பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட ... போவது ஏனடா சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும் அறிவு அருளும் ஆனை முகவோனே. ... அறிவை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.