இரு குழை இடறிக் காது மோதுவ
பரிமள நளினத்தோடு சீறுவ
இணை அறு வினையைத் தாவி மீளுவ
அதி சூர எம படர் படை கெட்டு ஓட நாடுவ
அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ
ரதி பதி கலை தப்பாது சூழுவ
முநிவோரும் உருகிட விரகில் பார்வை மேவுவ
பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ
யுக முடிவு இது எனப் பூசல் ஆடுவ
வடி வேல் போல் உயிர் வதை நயனக் காதல் மாதர்கள்
மயல் தரு கமரில் போய் விழா வகை
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே
முருகு அவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி மாமயில்
முது ரவி கிரணச் சோதி போல் வயலியில் வாழ்வே
முரண் முடி இரணச் சூலி மாலினி
சரண் எனும் அவர் பற்றான சாதகி முடுகிய கடினத்து ஆளி வாகினி
மது பானம் பருகினர் பரம போக மோகினி
அரகர எனும் வித்தாரி யாமளி
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் பறை அறை சுடலை கோயில் நாயகி
இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே.
(இவர்களின் கண்கள்) காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை (எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பன. (பயன் தருவதில்) நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. ரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின் காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ? நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல், முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே, வலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள், கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி, அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள், சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி, சிவ பெருமானோடு, அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள், அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில் வீற்றிருப்பவனுமான, பெருமாளே.
இரு குழை இடறிக் காது மோதுவ ... (இவர்களின் கண்கள்) காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. பரிமள நளினத்தோடு சீறுவ ... மணம் மிகுந்த தாமரை மலர்களை (எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பன. இணை அறு வினையைத் தாவி மீளுவ ... (பயன் தருவதில்) நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. அதி சூர எம படர் படை கெட்டு ஓட நாடுவ ... மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ ... அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. ரதி பதி கலை தப்பாது சூழுவ ... ரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முநிவோரும் உருகிட விரகில் பார்வை மேவுவ ... முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ ... பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு இது எனப் பூசல் ஆடுவ ... யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வடி வேல் போல் உயிர் வதை நயனக் காதல் மாதர்கள் ... வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின் மயல் தரு கமரில் போய் விழா வகை ... காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே ... உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ? முருகு அவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி மாமயில் ... நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல், முது ரவி கிரணச் சோதி போல் வயலியில் வாழ்வே ... முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே, முரண் முடி இரணச் சூலி மாலினி ... வலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், சரண் எனும் அவர் பற்றான சாதகி முடுகிய கடினத்து ஆளி வாகினி ... உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள், மது பானம் பருகினர் பரம போக மோகினி ... கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி, அரகர எனும் வித்தாரி யாமளி ... அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள், பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் பறை அறை சுடலை கோயில் நாயகி ... சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி, இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி ... சிவ பெருமானோடு, அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள், பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே. ... அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில் வீற்றிருப்பவனுமான, பெருமாளே.