சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
939   பட்டாலியூர் திருப்புகழ் ( - வாரியார் # 949 )  

இரு குழை இடறி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனனத் தான தானன
     தனதன தனனத் தான தானன
          தனதன தனனத் தான தானன ...... தனதான

இருகுழை யிடறிக் காது மோதுவ
     பரிமள நளினத் தோடு சீறுவ
          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர
எமபடர் படைகெட் டோட நாடுவ
     அமுதுடன் விடமொத் தாளை யீருவ
          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும்
உருகிட விரகிற் பார்வை மேவுவ
     பொருளது திருடற் காசை கூறுவ
          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல்
உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே
முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
     மரகத கிரணப் பீலி மாமயில்
          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே
முரண்முடி யிரணச் சூலி மாலினி
     சரணெனு மவர்பற் றான சாதகி
          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம்
பருகினர் பரமப் போக மோகினி
     அரகர வெனும்வித் தாரி யாமளி
          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்
பறையறை சுடலைக் கோயில் நாயகி
     இறையொடு மிடமிட் டாடு காரணி
          பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.
Easy Version:
இரு குழை இடறிக் காது மோதுவ
பரிமள நளினத்தோடு சீறுவ
இணை அறு வினையைத் தாவி மீளுவ
அதி சூர எம படர் படை கெட்டு ஓட நாடுவ
அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ
ரதி பதி கலை தப்பாது சூழுவ
முநிவோரும் உருகிட விரகில் பார்வை மேவுவ
பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ
யுக முடிவு இது எனப் பூசல் ஆடுவ
வடி வேல் போல் உயிர் வதை நயனக் காதல் மாதர்கள்
மயல் தரு கமரில் போய் விழா வகை
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே
முருகு அவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி
மாமயில்
முது ரவி கிரணச் சோதி போல் வயலியில் வாழ்வே
முரண் முடி இரணச் சூலி மாலினி
சரண் எனும் அவர் பற்றான சாதகி முடுகிய கடினத்து ஆளி
வாகினி
மது பானம் பருகினர் பரம போக மோகினி
அரகர எனும் வித்தாரி யாமளி
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் பறை அறை சுடலை
கோயில் நாயகி
இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே.
Add (additional) Audio/Video Link

இரு குழை இடறிக் காது மோதுவ ... (இவர்களின் கண்கள்)
காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன.
பரிமள நளினத்தோடு சீறுவ ... மணம் மிகுந்த தாமரை மலர்களை
(எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பன.
இணை அறு வினையைத் தாவி மீளுவ ... (பயன் தருவதில்) நிகர்
இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன.
அதி சூர எம படர் படை கெட்டு ஓட நாடுவ ... மிக்க சூரத்தனம்
உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து
ஓடும்படி வழி தேடுவன.
அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ ... அமுதமும் விஷமும்
கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன.
ரதி பதி கலை தப்பாது சூழுவ ... ரதியின் கணவனான
மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம்
எவரையும் சூழ்வன.
முநிவோரும் உருகிட விரகில் பார்வை மேவுவ ... முனிவர்களும்
காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை
உடையன.
பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ ... பொருளைக் கவரும்
பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன.
யுக முடிவு இது எனப் பூசல் ஆடுவ ... யுக முடிவு தானோ என்று
சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன.
வடி வேல் போல் உயிர் வதை நயனக் காதல் மாதர்கள் ...
வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை
உடைய ஆசை மாதர்களின்
மயல் தரு கமரில் போய் விழா வகை ... காம மயக்கம் தருகின்ற
பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு,
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே ... உனது
திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு
நாளாவது கிடைக்குமோ?
முருகு அவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி
மாமயில்
... நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம்
ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த
மயிலின் மேல்,
முது ரவி கிரணச் சோதி போல் வயலியில் வாழ்வே ... முற்றின
ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில்
வாழும் செல்வமே,
முரண் முடி இரணச் சூலி மாலினி ... வலிமை வாய்ந்த முடியை
உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை
அணிந்தவள்,
சரண் எனும் அவர் பற்றான சாதகி முடுகிய கடினத்து ஆளி
வாகினி
... உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு
பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான
பெண்சிங்க வாகனம் உடையவள்,
மது பானம் பருகினர் பரம போக மோகினி ... கள்ளுணவை
உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி,
அரகர எனும் வித்தாரி யாமளி ... அரகர என்று நிரம்ப ஒலி
செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள்,
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் பறை அறை சுடலை
கோயில் நாயகி
... சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள்
நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி,
இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி ... சிவ பெருமானோடு,
அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம்
செய்பவள்,
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே. ... அத்தகைய
பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில்
வீற்றிருப்பவனுமான, பெருமாளே.

Similar songs:

939 - இரு குழை இடறி (பட்டாலியூர்)

தனதன தனனத் தான தானன
     தனதன தனனத் தான தானன
          தனதன தனனத் தான தானன ...... தனதான

Songs from this thalam பட்டாலியூர்

939 - இரு குழை இடறி

940 - கத்தூரி யகரு

941 - சங்கைக் கத்தோடு

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song