சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
940   பட்டாலியூர் திருப்புகழ் ( - வாரியார் # 950 )  

கத்தூரி யகரு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
     தத்தான தனன தனதன ...... தனதான

கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
     கற்பூர களப மணிவன ...... மணிசேரக்
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
     கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர்
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
     கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே
கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
     குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
     லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
     டக்காகி விரக பரிபவ ...... மறவேபார்
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
     பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.
Easy Version:
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம்
அணிவன
மணி சேர கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம்
இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர்
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு
கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே
கொக்கு ஆ(ம்) நரைகள் வரு முனம் இக்காய இளமை உடன்
முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ
அத் தூர புவன தரிசன(ம்) நித்தார கனக நெடு மதி அச்சான
வயலி நகரியில் உறை வேலா
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய
பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே
பார் பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த் தூதர் விரவ
அருள் தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
பச்சோலை குலவு பனை வளர் மைச் சோலை மயில்கள்
நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம்
அணிவன
... கஸ்தூரி, அகில், கஸ்தூரி மஞ்சள், நிறையச் சந்தனம்,
பன்னீர், பச்சைக் கற்பூரம், கலவைச் சாந்து இவைகளை அணிவதாய்,
மணி சேர கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம்
இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர்
...
ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டப்பட்ட முத்து மாலையும்
நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன்
முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின்
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு
கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே
...
பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ்
ஊறலை உண்டு, அந்த மாதர்களுடன் கொல்லன் சேரியில் உள்ள மெழுகு
போல் உருகி அழியாமல்,
கொக்கு ஆ(ம்) நரைகள் வரு முனம் இக்காய இளமை உடன்
முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ
...
கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்பு, இந்த
உடலில் இளம் பருவம் இருக்கும் போதே முயற்சி செய்து, உனக்குப்
பணிவிடைகளை அடியேனாகிய நான் செய்யும் வழியை எனக்கு அருள்
செய்யக் கூடாதோ?
அத் தூர புவன தரிசன(ம்) நித்தார கனக நெடு மதி அச்சான
வயலி நகரியில் உறை வேலா
... அந்தத் தூர பூமியிலிருந்தே
தரிசனத்தை நிச்சயமாகத் தருவதான பொன் நெடு மதிலை
அடையாளமாகக் கொண்ட வயலூர் என்ற திருப்பதியில் வீற்றிருக்கும்
வேலனே,
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய
பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே
... இது என்ன
அதிசயம் என்று உலகோர் சொல்லும்படி, தன் வசம் இழந்த மகிழ்ச்சியில்
விரகத்தால் உள்ளம் சோர்வு அடைந்த பரவை நாச்சியார் மீது கண்ணும்
கருத்துமாய், பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை நீங்க,
பார் பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த் தூதர் விரவ
அருள் தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
... இந்தப் பூமியில்
அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்திய சுந்தரர் பரவிப்
போற்ற, வேகமாகப் போய் உண்மையான தூதுவராக, உள்ளம் தழைக்க
அருளைப் பொழிந்தவரும், உற்ற துணையாக இருப்பவருமான
சிவபெருமானுக்கு, புருஷ தத்துவம் மிக நிறைந்த, மேலான குருவே,
பச்சோலை குலவு பனை வளர் மைச் சோலை மயில்கள்
நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே.
... பசுமையான
ஓலைகளைக் கொண்டு விளங்கும் பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட
சோலைகளில் மயில்கள் நடனம் புரியும் பட்டாலியூர் என்னும் நகரில்
வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.

Similar songs:

940 - கத்தூரி யகரு (பட்டாலியூர்)

தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
     தத்தான தனன தனதன ...... தனதான

Songs from this thalam பட்டாலியூர்

939 - இரு குழை இடறி

940 - கத்தூரி யகரு

941 - சங்கைக் கத்தோடு

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song