கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன
மணி சேர கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர்
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே
கொக்கு ஆ(ம்) நரைகள் வரு முனம் இக்காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ
அத் தூர புவன தரிசன(ம்) நித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே
பார் பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த் தூதர் விரவ அருள் தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
பச்சோலை குலவு பனை வளர் மைச் சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே.
கஸ்தூரி, அகில், கஸ்தூரி மஞ்சள், நிறையச் சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம், கலவைச் சாந்து இவைகளை அணிவதாய், ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டப்பட்ட முத்து மாலையும் நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன் முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு, அந்த மாதர்களுடன் கொல்லன் சேரியில் உள்ள மெழுகு போல் உருகி அழியாமல், கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்பு, இந்த உடலில் இளம் பருவம் இருக்கும் போதே முயற்சி செய்து, உனக்குப் பணிவிடைகளை அடியேனாகிய நான் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ? அந்தத் தூர பூமியிலிருந்தே தரிசனத்தை நிச்சயமாகத் தருவதான பொன் நெடு மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்ற திருப்பதியில் வீற்றிருக்கும் வேலனே, இது என்ன அதிசயம் என்று உலகோர் சொல்லும்படி, தன் வசம் இழந்த மகிழ்ச்சியில் விரகத்தால் உள்ளம் சோர்வு அடைந்த பரவை நாச்சியார் மீது கண்ணும் கருத்துமாய், பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை நீங்க, இந்தப் பூமியில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்திய சுந்தரர் பரவிப் போற்ற, வேகமாகப் போய் உண்மையான தூதுவராக, உள்ளம் தழைக்க அருளைப் பொழிந்தவரும், உற்ற துணையாக இருப்பவருமான சிவபெருமானுக்கு, புருஷ தத்துவம் மிக நிறைந்த, மேலான குருவே, பசுமையான ஓலைகளைக் கொண்டு விளங்கும் பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட சோலைகளில் மயில்கள் நடனம் புரியும் பட்டாலியூர் என்னும் நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன ... கஸ்தூரி, அகில், கஸ்தூரி மஞ்சள், நிறையச் சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம், கலவைச் சாந்து இவைகளை அணிவதாய், மணி சேர கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் ... ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டப்பட்ட முத்து மாலையும் நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன் முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே ... பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு, அந்த மாதர்களுடன் கொல்லன் சேரியில் உள்ள மெழுகு போல் உருகி அழியாமல், கொக்கு ஆ(ம்) நரைகள் வரு முனம் இக்காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ ... கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்பு, இந்த உடலில் இளம் பருவம் இருக்கும் போதே முயற்சி செய்து, உனக்குப் பணிவிடைகளை அடியேனாகிய நான் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ? அத் தூர புவன தரிசன(ம்) நித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா ... அந்தத் தூர பூமியிலிருந்தே தரிசனத்தை நிச்சயமாகத் தருவதான பொன் நெடு மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்ற திருப்பதியில் வீற்றிருக்கும் வேலனே, அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே ... இது என்ன அதிசயம் என்று உலகோர் சொல்லும்படி, தன் வசம் இழந்த மகிழ்ச்சியில் விரகத்தால் உள்ளம் சோர்வு அடைந்த பரவை நாச்சியார் மீது கண்ணும் கருத்துமாய், பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை நீங்க, பார் பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த் தூதர் விரவ அருள் தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா ... இந்தப் பூமியில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்திய சுந்தரர் பரவிப் போற்ற, வேகமாகப் போய் உண்மையான தூதுவராக, உள்ளம் தழைக்க அருளைப் பொழிந்தவரும், உற்ற துணையாக இருப்பவருமான சிவபெருமானுக்கு, புருஷ தத்துவம் மிக நிறைந்த, மேலான குருவே, பச்சோலை குலவு பனை வளர் மைச் சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே. ... பசுமையான ஓலைகளைக் கொண்டு விளங்கும் பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட சோலைகளில் மயில்கள் நடனம் புரியும் பட்டாலியூர் என்னும் நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.