சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
744   திருவெண்ணெய்நல்லூர் திருப்புகழ் ( - வாரியார் # 754 )  

பலபல தத்துவம்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன தனதன தத்தன
          தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான

பலபல தத்துவ மதனையெ ரித்திருள்
     பரையர ணப்படர் வடவன லுக்கிரை
          படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப்
பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு
     பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு
          பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
     வொலிமலி யத்திரு நடனமி யற்றிய
          கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக்
கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ
     டனகச கத்துவம் வருதலு மிப்படி
          கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே
புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை
     நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர
          புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே
புனமலை யிற்குற மகளய லுற்றொரு
     கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய
          புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா
மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை
     கிழவிய றச்சுக குமரித கப்பனை
          மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
          மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.
Easy Version:
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணப் படர்
வட அனலுக்கு இரை பட
நடநச் சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள இடம் மேவி பவனம்
ஒழித்து இரு வழியை அடைத்து
ஒரு பருதி வழிப் படவிடல் ககனத்தொடு பவுரி கொ(ள்)ளச்
சிவமயம் என முற்றிய பரம் ஊடே
கலகல எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத ஒலி மலியத் திரு
நடனம் இயற்றிய கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல்
அதில் மூழ்கி
கவுரி மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக
சகத்துவம் வருதலும் இப்படி கழிய நலக்கு இனி நிறம் என்
நவிற்று உடல் அருள்வாயே
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில்
கழுக்களில் உற விடு சித்திர புலவன் எனச் சில விருது
படைத்திடும் இளையோனே
புன மலையில் குற மகள் அயல் உற்று ஒரு கிழவன் எனச்
சுனை தனில் அவள் ஐப் புய(ம்) புளகிதம் உற்று இபம் வர
அணையப் புணர் மணி மார்பா
மலை சிலை பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி அறச் சுக
குமரி தகப்பனை மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று
அருள் முருகோனே
மகிழ் பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய
திருவெ(ண்)ணெய் நல் பதி புகழ் பெற அற்புத மயிலின்
மிசைக் கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே.
Add (additional) Audio/Video Link

பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணப் படர்
வட அனலுக்கு இரை பட
... பலபல தத்துவ சேஷ்டைகளையும்,
அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை
வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி,
நடநச் சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள இடம் மேவி பவனம்
ஒழித்து இரு வழியை அடைத்து
... நடன ஜோதியை பரந்த ஆகாச
வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில்
சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை என்ற இரண்டு
வழிகளையும் மாற்றி அடைத்து,
ஒரு பருதி வழிப் படவிடல் ககனத்தொடு பவுரி கொ(ள்)ளச்
சிவமயம் என முற்றிய பரம் ஊடே
... ஒப்பற்ற சூரிய ஜோதியின்
பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ
மயமாய் முற்றும் பரந்த பர வெளியில்,
கலகல எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத ஒலி மலியத் திரு
நடனம் இயற்றிய கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல்
அதில் மூழ்கி
... கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின்
ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த
சுகானந்தக் கடலில் முழுகி,
கவுரி மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக
சகத்துவம் வருதலும் இப்படி கழிய நலக்கு இனி நிறம் என்
நவிற்று உடல் அருள்வாயே
... பார்வதி தேவி மின்னலை ஒத்த
சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற
உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு
கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை
எனக்குத் தந்தருளுக.
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில்
கழுக்களில் உற விடு சித்திர புலவன் எனச் சில விருது
படைத்திடும் இளையோனே
... இழிந்தவர்களும், திருநீற்றை
விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை
வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை
கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய
(திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே,
புன மலையில் குற மகள் அயல் உற்று ஒரு கிழவன் எனச்
சுனை தனில் அவள் ஐப் புய(ம்) புளகிதம் உற்று இபம் வர
அணையப் புணர் மணி மார்பா
... தினைப் புனம் உள்ள வள்ளி
மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன்
என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை
புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய
மார்பனே,
மலை சிலை பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி அறச் சுக
குமரி தகப்பனை மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று
அருள் முருகோனே
... மேரு மலையை வில்லாகப் பிடித்த
சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள்,
தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு
வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷாயாணி என்ற) உமாதேவி
பெற்றருளிய முருகோனே,
மகிழ் பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய
திருவெ(ண்)ணெய் நல் பதி புகழ் பெற அற்புத மயிலின்
மிசைக் கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே.
... மகிழ்ச்சி
தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த
திருவெண்ணெய்நல்லூர் என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க
அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும்
பெருமாளே.

Similar songs:

744 - பலபல தத்துவம் (திருவெண்ணெய்நல்லூர்)

தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன தனதன தத்தன
          தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான

Songs from this thalam திருவெண்ணெய்நல்லூர்

744 - பலபல தத்துவம்

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song