சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
745   திருப்பாதிரிப்புலியூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 250 - வாரியார் # 755 )  

நிணமொடு குருதி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான

நிணமொடு குருதி நரம்பு மாறிய
     தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
          நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
     நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
          நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும்
உணர்விலி செபமுத லொன்று தானிலி
     நிறையிலி முறையிலி யன்பு தானிலி
          உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
     யறுமுக மொளிவிட வந்து நான்மறை
          யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
          பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப்
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
     யுறுசிலை வளைய வலிந்து நாடிய
          புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
     குலகிரி யடைய இடிந்து தூளெழ
          அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
     வளநகர் மருவி யமர்ந்த தேசிக
          அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.
Easy Version:
நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையும் எலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு
நோய்படு முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில்
முயன்று மாதவம் உ(ய்)ய ஓரும் உணர்விலி
செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி
உயர்விலி யெனினுமெ னெஞ்சு தான் நினைவழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
அறுமுகம் ஒளிவிட வந்து
நான்மறை யுபநிடம் அதனை விளங்க நீயருள் புரிவாயே
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொருபதுமாறி
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு மருகோனே
அணிதரு கயிலை நடுங்க
ஓரெழு குலகிரி யடைய இடிந்து தூளெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு முருகோனே
அமலைமுன் அரிய தவஞ்செய்
பாடல வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

நிணமொடு குருதி நரம்பு மாறிய ... மாமிசத்தோடு ரத்தம், நரம்பு
இவை கலந்துள்ள
தசைகுடல் மிடையும் எலும்பு தோலிவை ... சதை, குடல்,
நெருங்கியுள்ள எலும்பு, தோல் இவையாவும்
நிரைநிரை செறியு முடம்பு ... வரிசை வரிசையாக நிறைந்துள்ள
உடம்பு,
நோய்படு முதுகாயம் ... நோய் உண்டாகும் பழைய உடல்,
நிலைநிலை யுருவ மலங்க ளாவது ... வயதுக்குத் தக்கபடி
வெவ்வேறு நிலைகளில் வடிவமும், மாசுக்களும் உண்டாகக் கூடிய
இந்த உடல்,
நவதொளை யுடைய குரம்பை யாமிதில் ... ஒன்பது துவாரங்கள்
உடைய சிறு குடிலாகிய இந்த உடலில்
நிகழ்தரு பொழுதில் ... உயிர் இருக்கும் பொழுதே
முயன்று மாதவம் உ(ய்)ய ஓரும் உணர்விலி ... வேண்டிய
முயற்சிகளைச் செய்து சிறந்த தவங்களை உய்யும் பொருட்டு
உணரக்கூடிய உணர்ச்சி இல்லாதவன் யான்.
செபமுத லொன்று தானிலி ... ஜெபம் முதலிய ஒரு நல்ல
ஒழுக்கமும் இல்லாதவன் யான்.
நிறையிலி முறையிலி யன்பு தானிலி ... ஆண்மைக் குணமோ,
தர்ம நெறியோ, அன்போ இல்லாதவன் யான்.
உயர்விலி யெனினுமெ னெஞ்சு தான் நினைவழியாமுன் ...
மேன்மையற்றவன் யான். என்றாலும் என் நெஞ்சு நினைவு என்பதை
இழக்கும் முன்னரே,
ஒருதிரு மரகத துங்க மாமிசை ... ஒப்பற்ற அழகிய பச்சை நிறமுள்ள
பரிசுத்த மயில் என்னும் குதிரை மேல்
அறுமுகம் ஒளிவிட வந்து ... உனது ஆறு திருமுகங்களும்
பிரகாசிக்க என் எதிரில் வந்து
நான்மறை யுபநிடம் அதனை விளங்க நீயருள் புரிவாயே ...
நான்கு வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றை எனக்கு விளங்கும்படி
நீ உபதேசித்து அருள்புரிவாயாக.
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு ... கடலில் கலந்து படிந்து
எழுகின்ற சூரியன்
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி ... பயந்து விலகும் மதில்களை
உடைய இலங்கையில் வாழ்ந்த அரசன் ராவணனுடைய
பொலமணி மகுட சிரங்கள் தாமொருபதுமாறி ... பொன்மயமான
ரத்ன மகுடங்கள் தரித்த தலைகள் ஒரு பத்தும் நிலை பெயர்ந்து,
புவியிடை யுருள முனிந்து கூர்கணை ... பூமி மீது உருளும்படி
கோபித்து, கூர்மையான அம்புகள்
யுறுசிலை வளைய வலிந்து நாடிய ... பொருந்திய வில்லை
வளைத்து, முயன்று நாடிச்சென்ற
புயலதி விறலரி விண்டு மால்திரு மருகோனே ... மேகவண்ணன்,
மிக்க வீரம் வாய்ந்த ஹரி, விஷ்ணு, திருமால் எனப் பெயர் கொண்டவனின்
அழகிய மருகனே,
அணிதரு கயிலை நடுங்க ... அழகுள்ள கயிலைமலை நடுநடுங்க,
ஓரெழு குலகிரி யடைய இடிந்து தூளெழ ... ஏழு குலகிரிகள்
எல்லாமுமாய் இடிந்து தூள்பறக்க,
அலையெறி யுததி குழம்ப வேல்விடு முருகோனே ... அலைவீசும்
கடல் கொந்தளித்துக் குழம்ப, வேலினைச் செலுத்தும் முருகனே,
அமலைமுன் அரிய தவஞ்செய் ... தேவி முன்பு அரிய தவம் செய்த
பாடல வளநகர் மருவி யமர்ந்த தேசிக ... பாடலவளநகராகிய
திருப்பாதிரிப்புலியூரில் பொருந்தி வீற்றிருக்கும் குரு மூர்த்தியே,
அறுமுக குறமக ளன்ப மாதவர் பெருமாளே. ... ஆறுமுகனே,
குறமகள் வள்ளியின் அன்பனே, பெரிய தவசிகளின் பெருமாளே.

Similar songs:

386 - கரி உரி அரவம் (திருவருணை)

தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான

745 - நிணமொடு குருதி (திருப்பாதிரிப்புலியூர்)

தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான

Songs from this thalam திருப்பாதிரிப்புலியூர்

745 - நிணமொடு குருதி

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song