புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே பூரணா ! ஆரணம் பொழியும் பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும் பசுபதீ ! பன்னகா பரணா ! அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே. |
1
|
புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து புணர்பொருள் உணர்வுநூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும் முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே. |
2
|
கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன் முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர் முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும் பன்னகா பரணா பவளவாய் மணியே ! பாவியேன் ஆவியுள் புகுந்த(து) என்னகா ரணம்நீ ஏழைநாய் அடியேற்கு எளிமையோ பெருமையா வதுவே. |
3
|
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க் கிடையனா ருடையஎன் நெஞ்சில் பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும் பரமனே ! பன்னகா பரணா ! மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை மூதூர் நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன் நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே ! |
4
|
அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து) ஐவரோ(டு) என்னொடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு) என்னைஆள் ஆண்டநாய கனே ! முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. |
5
|
Go to top |
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும் வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே ! முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே. |
6
|
விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும் கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும் கழுத்திலோர் தனிவடங் கட்டி முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை அகத்தமர்ந் தாயைப் பிரியுமா றுளதே பேய்களோம் செய்த பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே. |
7
|
என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து) என்பெலாம் உருகநீ எளிவந்(து) உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே ! முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே. |
8
|
அம்பரா அனலா; அனிலமே புவிநீ அம்புவே இந்துவே இரவி உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயுமா யினையே. |
9
|
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்தமர்ந்(து) இனிய பாலுமாய், அமுதாம் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி இணைமேல் ஆலையம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே. |
10
|
Go to top |