விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும் கழுநீர் குவளை மலரக் கயல் பாயும் கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.
|
1
|
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக் கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில் குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம் உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.
|
2
|
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான், காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்- கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.
|
3
|
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்- தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி, கூடாதன செய்த குரங்கணில் முட்டம் ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.
|
4
|
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி, கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்; குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.
|
5
|
Go to top |
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம் கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக் குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.
|
6
|
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து, தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க, கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து, ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.
|
7
|
மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.
|
8
|
வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும் அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும் குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.
|
9
|
கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும், வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்! குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.
|
10
|
Go to top |
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.
|
11
|