கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.
|
1
|
கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி , பேரொலியுடன் அம்மதில்கள் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான் , அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியைப் பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் . | |
கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி
கொண்டு ஒரு கை,
தேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து, திசையார் தொழுது ஏத்த,
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர
நன்நகரே.
|
2
|
சிவபெருமான் காவியுடையும் , கோவணமும் அணிந்தவர் . ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை ஏந்தி வாசிப்பவர் . மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர் . எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி , காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் வீற்றிருந்தவர் . அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , முத்தீ வளர்த்து , நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் . | |
நொய்யது ஒர் மான்மறி கைவிரலின் நுனை மேல் நிலை ஆக்கி,
மெய் எரிமேனி வெண் நீறு பூசி, விரிபுன் சடை தாழ,
மை இருஞ் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
வைகலும் மா முழவம்(ம்) அதிரும் வலம்புர நன்நகரே.
|
3
|
இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து , நெருப்புப் போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி , விரிந்த சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப்போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும் , இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் . | |
ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள் அன்று;
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ!
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.
|
4
|
தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து , அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது , தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள் . பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் . | |
செற்று எறியும் திரை ஆர் கலுழிச் செழுநீர் கிளர்
செஞ்சடை மேல்
அற்று அறியாது, அனல் ஆடு நட்டம், அணி ஆர் தடங்கண்ணி
பெற்று அறிவார், எருது ஏற வல்ல பெருமான், இடம்போலும்
வற்று அறியாப் புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
|
5
|
கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை , ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர் . அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . இடபத்தை வாகனமாக ஏற்றவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் . | |
| Go to top |
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு, உமையோடு உடன் ஆகி,
சுண்ண வண்ணப்பொடி மேனி பூசிச் சுடர்ச் சோதி நின்று இலங்க,
பண்ண வண்ணத்தன பாணி செய்ய, பயின்றார் இடம்போலும்
வண்ண வண்ணப் பறை பாணி அறா வலம்புர நன்நகரே.
|
6
|
தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு , கருநிறமும் ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான் . உமா தேவியை உடனாகக் கொண்டவர் . மணம் பொருந்திய திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர் . சுடர்விடும் சோதியாய் விளங்குபவர் . பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவகைப் பட்ட பறை முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் . | |
புரிதரு புன்சடை பொன்தயங்க, புரிநூல் புரண்டு இலங்க,
விரைதரு வேழத்தின் ஈர் உரி-தோல் மேல் மூடி, வேய் புரை தோள்
அரை தரு பூந்துகில் ஆர் அணங்கை அமர்ந்தார் இடம்போலும்
வரை தரு தொல்புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன்நகரே.
|
7
|
முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர , முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க , மிக வேகமாகச் செல்லக்கூடிய யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி , மூங்கிலையொத்த தோளையுடையவளாய் , இடையில் அழகிய ஆடையை அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய , குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் . | |
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலைபத்து
உடையானை,
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க, ஒரு கால்விரல் ஊன்றி,
மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம்போலும்
வண்டு இணை தன்னொடு வைகு பொழில் வலம்புர
நன்நகரே.
|
8
|
தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது , தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமாதேவி நடுங்க , சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி அவ்வரக்கனின் செருக்கை அடக்கி , பின் அவன் தன் தவறுணர்ந்து துதித்தபோது , அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும் சோலைகளை உடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் . | |
தார் உறு தாமரைமேல் அயனும், தரணி அளந்தானும்,
தேர்வு அறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து ஏத்த,
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
வார் உறு சோலை மணம் கமழும் வலம்புர நன்நகரே.
|
9
|
மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது , தம்முள் யார் பெரியவர் என்று மாறுபாடு கொண்டு , முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது திகைத்துத் திரிந்து , பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க , அசைக்க முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நீண்ட சோலைகளையுடைய நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் . | |
காவிய நல்-துவர் ஆடையினார், கடு நோன்பு மேற்கொள்ளும்
பாவிகள், சொல்லைப் பயின்று அறியாப் பழந் தொண்டர் உள் உருக,
ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர் இடம்போலும்
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
|
10
|
காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில் தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும் , கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும் சொற்களைச் சிறிதும் கேளாத , வழிவழியாகச் சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த , அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் . | |
| Go to top |
நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினை போய்,
செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே.
|
11
|
நல்லொழுக்கமுடைய , நான்கு வேதங்களையும் நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் , புலியின் தோலை ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள் , தொல்வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர் . | |