பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்; திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்; பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்- மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.
|
1
|
மருகல் இறைவன் திருவடி வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம் ; அறியாமை தீரலாம் ; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம் ; கடவுண்மயமாகிய ஒப்பற்ற பேரானந்தத்தைப் பருகலாம் . | |
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய், நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்! மாடம் சூழ் மருகல் பெருமான் திரு வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.
|
2
|
பாடங்கொண்ட நூல் திறங்களையெல்லாம் கற்றுப்போய் நாட்டில் உள்ளன எல்லாம் பொருந்திய நாணமற்றீரே ! மாடங்கள் சூழ்ந்த மருகற் பெருமானின் திருவேடத்தைக் கைகளால் தொழுதால் வீட்டுலகமும் உமக்கு எளிதாகும் . | |
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை- அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக மனத்தினால் மருகல் பெருமான் திறம் நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.
|
3
|
கோபத்தினால் வருகின்ற செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை . | |
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி, பாதுகாத்துப் பலபல கற்பித்து, மாதுதான், மருகல் பெருமானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
|
4
|
இப்பெண் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைக்கு ஒள்ளிய பால் அமுது ஊட்டிப் பின் அதனைப் பாதுகாத்துப் பலபல வார்த்தைகளை அதற்குக் கற்பித்து மருகற் பெருமானுக்குத் தூது சொல்லிவிடத் தொடங்குகின்றாள் . | |
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்; மன்னு தென் மருகல் பெருமான் திறம் உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.
|
5
|
நிலைபெற்ற அழகிய மருகல் இறைவன் திறமே நினைந்து இப்பெண் கொடியாளாகிய தலைவி உள்ளம் உருகுகின்றாள் ; நெருங்கிய கைவளைகள் சோர நின்று கண்ணீர் மல்குகின்றாள் ; இதனைத் தீர்ப்பது இன்ன வழி உண்டு என்பது அறியேனாயினேன் யான் . | |
| Go to top |
சங்கு சோர, கலையும் சரியவே, மங்கைதான், மருகல் பெருமான் வரும் அங்கவீதி அருகு அணையா நிற்கும்; நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?
|
6
|
பெண்களே ! தன் சங்கு வளையல்கள் நெகிழவும் , உடை சரியவும் இம்மங்கைதான் , மருகல் இறைவன் திருவீதியுலா வருகின்ற அங்க வீதியின் அருகு நாளும் அணைந்து நிற்பாள் ; நான் இதற்கு என்னசெய்வேன் ? | |
காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே மீட்சி ஒன்று அறியாது மிகுவதே? மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத் தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.
|
7
|
என் பெண் மாட்சிகள் நிறைந்த மருகற்பெரு மானுக்கு மனம் தாழும் விருப்பம் மிகவும் உண்டாயினள் ; அவனைக் காணும் காட்சியைப் பெற்றிலள் ஆயினும் காதலினின்று மீளுகைக்கு ஒன்றும் அறியாதவள் ஆகி அவ்விருப்பமே மிகுந்தது . | |
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும், ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள், மாடம் நீள் மருகல் பெருமான் வரில் கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.
|
8
|
நெஞ்சுக்குள் நீள நினைந்து கண்ணீர் மல்கி ஓடும் மயக்கத்தினோடு இவ்வொண் தொடியணிந்த பெண் , மாடங்கள் நீண்டுயர்ந்த மருகல் இறைவன் வரின் நீ கூடு என்று கூடல் இழைத்து வருந்துவாள் . | |
கந்தவார் குழல் கட்டிலள், காரிகை அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக வந்திடாய், மருகல் பெருமான்! என்று சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!
|
9
|
மணம் வீசும் நீண்ட கூந்தலை முடியாதவளாய் இப்பெண் , மால்விடையோடும் மிக்க அன்பாய் ` மருகற்பெருமானே ! வந்திடாய் !` என்று சிந்தித்து வாராமையாற் பின்னும் திகைப்பாள் ; காண்பீராக . | |
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று, சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும் ஆதியான், மருகல் பெருமான், திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
|
10
|
ஆதியிற்றோன்றிய திருக்கயிலாயத் திரு மலையினை அன்று எடுத்தவனாகிய இராவணன் தலை இற்றுச் ` சோதியே ` என்று கூறுதலும் , பழைய அருள் புரிந்திடும் ஆதியானாகிய மருகற்பெருமான் திறத்தையே ஓதி வாழ்பவர் தேவர்க்கும் தேவராவர் . | |
| Go to top |