கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான் பிறையணி கொன்றையினா னொரு பாகமும் பெண்ணமர்ந்தான் மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன் வக்கரையில் உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழ லுள்குதுமே.
|
1
|
பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் பாகமதா ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க டொழுதிறைஞ்ச வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன் வக்கரையில் தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி செப்புதுமே.
|
2
|
சந்திர சேகரனே யரு ளாயென்று தண்விசும்பில் இந்திர னும்முதலா விமை யோர்க டொழுதிறைஞ்ச அந்தர மூவெயிலும் மன லாய்விழ வோரம்பினால் மந்தர மேருவில்லா வளைத் தானிடம் வக்கரையே.
|
3
|
நெய்யணி சூலமொடு நிறை வெண்மழு வும்மரவும் கையணி கொள்கையினான் கனன் மேவிய வாடலினான் மெய்யணி வெண்பொடியான் விரி கோவண வாடையின்மேல் மையணி மாமிடற்றா னுறை யும்மிடம் வக்கரையே.
|
4
|
ஏனவெண் கொம்பினொடும் மிள வாமையும் பூண்டுகந்து கூனிள வெண்பிறையுங் குளிர் மத்தமுஞ் சூடிநல்ல மானன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்க ளெரி செய்த தலைமகனே.
|
5
|
Go to top |
கார்மலி கொன்றையொடுங் கதிர் மத்தமும் வாளரவும் நீர்மலி யுஞ்சடைமே னிரம் பாமதி சூடிநல்ல வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை மேவியவன் பார்மலி வெண்டலையிற் பலி கொண்டுழல் பான்மையனே.
|
6
|
கானண வும்மறிமா னொரு கையதோர் கைமழுவாள் தேனண வுங்குழலா ளுமை சேர்திரு மேனியனான் வானண வும்பொழில்சூழ் திரு வக்கரை மேவியவன் ஊனண வுந்தலையிற் பலி கொண்டுழ லுத்தமனே.
|
7
|
இலங்கையர் மன்னனாகி யெழில் பெற்ற விராவணனைக் கலங்கவொர் கால்விரலாற் கதிர் பொன்முடி பத்தலற நலங்கெழு சிந்தையனா யருள் பெற்றலு நன்களித்த வலங்கெழு மூவிலைவே லுடை யானிடம் வக்கரையே.
|
8
|
காமனை யீடழித்திட் டவன் காதலி சென்றிரப்பச் சேமமே யுன்றனக்கென் றருள் செய்தவன் றேவர்பிரான் சாமவெண் டாமரைமே லய னுந்தர ணியளந்த வாமன னும்மறியா வகை யானிடம் வக்கரையே.
|
9
|
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய ரென்றிவர்கள் தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந் தேவர்பிரான் பாடிய நான்மறையன் பலிக் கென்றுபல் வீதிதொறும் வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம் வக்கரையே.
|
10
|
Go to top |
தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை யான்பிறைதோய் வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை வக்கரையைச் சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.
|
11
|